Nov 03, 2022 02:53 PM

'4554' திரைப்பட விமர்சனம்

12c06daf11333aa98734ef1995422821.jpg

Casting : Ashok, Sheela Nair, Karnan Mariyappan, Kambam Meena, Jaguar Thangam, Kothandam, Penjamin, Saravana sakthi

Directed By : Dr.Karnan Mariyappan

Music By : Rashanth Arwin

Produced By : Mannan Studios - Prathiba

 

கால் டாக்ஸி டிரைவரான நாயகன் அசோக்கும், நாயகி ஷீலா நாயரும் காதலிக்கிறார்கள். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்ட, இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. திருமணம் நடைபெற இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், அவசர பயணமாக பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டிய சூழல் அசோக்கிற்கு ஏற்படுகிறது. தவிர்க்க முடியாத பயணம் என்பதால் வேறு வழி இன்றி அந்த பயணத்தை அசோக் மேற்கொள்ள, அந்த பயணத்தில் திடீரென்று சில மாற்றங்கள் ஏற்படுகிறது. பயண மாற்றத்தால் அசோக்கின் வாழ்க்கையே திசைமாறும் அளவுக்கு பிரச்சனைகள் உருவாக, அதில் இருந்து அவர் விடுபட்டாரா? இல்லையா?, அவருக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

 

கோலிவுட்டில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள போராடும் நடிகர்களில் அசோக்கும் ஒருவர். கால் டாக்ஸி டிரைவர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கும் அசோக், கதாபாத்திரத்தை உணர்ந்து நிறைவாக நடித்திருக்கிறார். ஆனால், சில இடங்களில் தனது முந்தைய படங்களில் நடித்தது போன்றே நடிப்பதும், அதை சற்று ஓவராக செய்திருப்பதையும் தவிர்த்திருக்கலாம்.

 

ஒரு பாடல் காட்சி, செல்போனில் காதல் செய்யும் சில காதல் காட்சி என்று கதாநாயகி ஷீலா நாயர், தனது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் இயக்குநர் டாக்டர்.கர்ணன் மாரியப்பன், தனது வசனங்கள் மூலம் கவனிக்க வைக்கிறார். முதல் படம் என்றாலும் கேமரா பயம் இல்லாமல் நடிப்பிலும் அசத்துகிறார்.

 

கர்ணன் மாரியப்பனின் நண்பர்களாக நடித்திருக்கும் கோதண்டம் மற்றும் பெஞ்சமின் ஆகியோரை காமெடியாகவும், கதை நகர்த்தலுக்காகவும் பயன்படுத்தியிருப்பதால், இருவரும் எதை சரியாக செய்வது என்ற குழப்பத்திலேயே பயணித்திருப்பது படத்தில் பளிச்சென்று தெரிகிறது.

 

ஜாக்குவார் தங்கம், சரவணசக்தி, கிரேன் மனோகர், கம்பம் மீனா, சுரேஷ் கிரிஷ், விமல், மகேஷ், சேதுபதி என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

4554

 

வினோத் காந்தியின் ஒளிப்பதிவு கார் போகும் போக்கில் பயணித்திருக்கிறது. கார் பயணத்தை காட்டிலும் காருக்குள் பெரும்பாலும் காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் படத்திற்கு பெரிய பலமாக பயணித்திருக்கிறார்.

 

இசையமைப்பாளர் ரஷாந்த் அர்வினின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், கார் ஓட்டுநர்கள் பற்றிய பாடல் மட்டும் கவனிக்க வைக்கிறது. பின்னணி இசை அளவாக இருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் வி.எஷ்.விஷால், இரண்டு மணி நேர படத்தை ஏதோ மூன்று மணி நேரம் படம் போல் படத்தொகுப்பு செய்திருக்கிறார். 

 

கால் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்க்கையில் இருக்கும் சிரமங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து கதை எழுதி இயக்கியிருக்கும் டாக்டர்.கர்ணன் மாரியப்பன், மிக எளிமையான பயண கதையில் அழுத்தமான மெசஜை சொல்லியிருக்கிறார்.

 

ஓட்டுநர் பணியையும், அதில் இருக்கும் சிரமங்களையும் சில இடங்களில் வசனம் மூலம் தெரியப்படுத்தும் இயக்குநர், சிறு சுவாரஸ்யத்தை வைத்து முழு படத்தையும் விறுவிறுப்பாக நகர்த்த முயற்சித்திருக்கிறார். ஆனால், அவருடைய முயற்சி பல இடங்களில் தோல்வியடைந்திருக்கிறது.

 

குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள் பெரும்பாலான படத்தை ஆக்கிரமத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். குறிப்பாக, ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப பேசுவது போலவும், வசனங்கள் பல திணிக்கப்பட்டது போலவும் இருப்பது சலிப்படைய செய்கிறது.

 

திருமணத்திற்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் ஒருவர் நெடுந்தொலை பயணத்தை மேற்கொள்வாரா? என்ற கேள்விக்கு இயக்குநர் சொல்லும் பதில் வேடிக்கையாக இருப்பதோடு, அசோக்கை தவிர பொள்ளாச்சியில் வேறு ஓட்டுநர்களே இல்லையா? என்ற கேள்வியும் படம் பார்ப்பவர்களுக்கு எழுகிறது.

 

எதிர்பாரத திருப்பங்கள் மூலம் பயணத்தில் பிரச்சனை ஏற்படலாம், ஆனால் நாயகன் அசோக் ஏதோ தெரிந்தே பிரச்சனையில் சிக்குவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதும், கார் பயண காட்சிகள் திரைக்கதைக்கு வேகத்தை கூட்டாமல்,  வேகத்தை குறைத்திருப்பது படம் பார்ப்பவர்களுக்கு போரடிக்க செய்கிறது.

 

மொத்தத்தில், ’4554’ மிக மிக சுமாரான பயணம்.

 

ரேட்டிங் 2/5