’6 முதல் 6’ விமர்சனம்
Casting : Jeyadeva, Prakash, Sivashankar, Manjunath, Sidhu
Directed By : MG Reddy
Music By : Anop
Produced By : Lakshmi MGR Movies
குழந்தைகளை கடத்தி பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தும் போலீஸ் அதிகாரி மஞ்சுநாத், சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பணியில் சேரும் அவர், தன் மீது இருக்கும் கெட்டப்பெயரை போக்க, குழந்தை கடத்தல் நாடகம் ஒன்றை நடத்தி, அதிலிருந்து குழந்தைகளை காப்பாற்றி, தன்னை நல்லவனாக காட்ட முயற்சிக்கிறார். இதற்காக நான்கு திருடர்களை தன்னுடன் அவர் சேர்த்துக்கொள்கிறார். ஆனால், அவர்கள் மஞ்சுநாத்தின் சுயரூபத்தை அறிந்து அவருக்கு எதிராகவே திரும்பி விடுகிறார்கள். இதனால் கோபமடையும் மஞ்சுநாத், அந்த நான்கு பேரையும் அழிக்க நினைக்க, அந்த நான்கு பேரும் மஞ்சுநாத்திடம் சிக்கியிருக்கும் சிறுவர்களை காப்பாற்றுவதோடு, மஞ்சுநாத்தின் சுயரூபத்தை மக்களுக்கு காட்டவும் முயற்சிக்கிறார்கள். இதில் யார் வெற்றி பெற்றது என்பது தான் படத்தின் மீதிக்கதை.
குழந்தை கடத்தலை மையமாக வைத்து திரைக்கதையை சஸ்பென்ஸாக நகர்த்தியிருக்கும் இயக்குநர் எம்.ஜி.ரெட்டி, காதல், காமெடி, செண்டிமெண்ட், மெசஜ் என்று அனைத்தையும் சேர்த்து கமர்ஷியல் படமாகவும் நகர்த்திச் செல்கிறார்.
வில்லனாக நடித்துள்ள மஞ்சுநாத், திருடர்களாக வரும் சிவசங்கர், பிரகாஷ், ஜெயதேவா, சித்து உள்ளிட்ட படத்தில் வரும் அனைவரும் புதுமுகங்களாக இருப்பதால் சில இடங்களில் சில தவறுகளை செய்தாலும், தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அந்த ஹீரோயினை நினைத்தால் மட்டும் நமக்கு பயமா இருக்கு, என்ன கொடுமை சார்...
இசையமைப்பாளர் ஏனோப், பல இடங்களில் பின்னணி இசையமைக்க மறந்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் ரொம்ப அமைதியாகவே நகர்கிறது. (ஒருவேளை ஒரிஜினாலட்டிக்கா விட்டிருப்பாரோ)எம்.ஜி.ரெட்டியின் ஒளிப்பதிவு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொத்த படத்தையும் முடிக்க பெரும் உதவியாக செயல்பட்டிருக்கிறது.
குழந்தை கடத்தல், பாம்ப் பிளாஸ்ட் என்று ஓபனாகும் படம், அதன் பிறகு கடத்தப்பட்ட குழந்தைகள் காப்பாற்றுவது என்று நகரும் போது, நான்கு திருடர்கள் போலீசுக்கு உதவி செய்ய, அவர்கள் எப்படி கடத்தி வைத்திருக்கும் குழந்தைகளை கண்டுபிடித்தார்கள்? என்ற கோணத்தில் படம் நகரும் போது, என்ன நடந்திருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது. அதேபோல், இடைவேளை வரை வில்லன் யார்? என்பதை காட்டாமல் காட்சிகளை நகர்த்தியிருப்பது படத்திற்கு விறுவிறுப்பை சேர்த்திருந்தாலும், காதல், காமெடி, எமோஷனல் என்ற பெயரில் வரும் சில காட்சிகள் கடுப்பேற்றவும் செய்கிறது.
குழந்தைகளை அதுவும் பெண் குழந்தைகளை எப்படி பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற விஷயத்தை ரொம்ப அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் சமூக விஷயத்தை மையமாக வைத்து சஸ்பென்ஸ் திரைப்படமாக இயக்கியிருக்கும் விதமும், படத்தில் அவர் வைத்திருக்கும் ட்விஸ்ட்டுகளும் பாராட்டக் கூடியவைகாளாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக படம் அதளபாதளத்தில் இருக்கிறது. இயக்குநரின் ஆர்வமும், கற்பனையும் பெரிதாக இருந்தாலும், பட்ஜெட் ரொம்பவே குறைவாகவே இருந்திருக்கிறது என்பது படத்தின் அனைத்துக் காட்சிகளும் நிரூபித்துவிடுகிறது.
மொத்தத்தில், படத்தில் சொல்லப்பட்ட விஷயம் பெரியதாக இருந்தாலும், அதை சொல்லிய விதம் சின்னப்புள்ளத்தனமாக இருக்கிறது.
ஜெ.சுகுமார்