'60 வயது மாநிறம்’ விமர்சனம்
Casting : Prakashraj, Vikram Prabhu, Samuthirakani, Induja, Kumaravel
Directed By : Radha Mohan
Music By : Ilayaraja
Produced By : Kalaippuli S.Thanu
பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி ஆகியோரது நடிப்பில், ராதா மோகன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘60 வயது மாநிறம்’ எப்படி என்பதை பார்ப்போம்.
தன்னையே யார் என்று தெரியாத அளவுக்கு மறதி ஏற்படும் அல்சைமர் என்ற நோயால் பாதிக்கப்படும் பிரகாஷ் ராஜை, அவரது மகன் விக்ரம் பிரபு ஹோம் ஒன்றில் சேர்த்துவிடுகிறார். அல்சைமர் நோய்க்கான பிரத்யேக மையமான அங்கு இந்துஜா டாக்டராக பணியாற்றுகிறார்.
சாப்ட்வேர் இன்ஜினியரான விக்ரம் பிரபு அமெரிக்கா செல்வதில் தீவிரம் காட்டி வரும் அளவுக்கு தனது அப்பா மீது ஈடுபாடு காட்டாமல் இருக்கிறார். பணம் கொடுத்துவிட்டால் மருத்துவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் இருக்கும் விக்ரம் பிரபு, தனது அலட்சியப் போக்கினால் தனது அப்பாவை தொலைத்துவிட்டு தெரு தெருவாக அவரை தேடி அலைகிறார். அப்படி அவரை தேடும்போது தான், தனது அப்பாவிடம் இருந்து தான் எவ்வளவு தூரம் விலகியிருந்தேன் என்பதையும் அவர் உணர்கிறார்.
இதற்கிடையே, அரசு அதிகாரி ஒருவரை கொலை செய்து, அந்த உடலை புதைக்க சென்றுக்கொண்டிருக்கும் சமுத்திரக்கனியுடன் பிரகாஷ்ராஜ் சேர்ந்துக் கொள்ள, அந்த உடலையும் பார்த்துவிடுகிறார். கொலையை பார்த்த சாட்சியங்கள் யாரும் இருக்க கூடாது என்பதால் பிரகாஷ்ராஜை கொலை செய்யும்படி, சமுத்திரக்கனியின் முதலாளி உத்தரவு போட, சமுத்திரக்கனி என்ன செய்தார், விக்ரம் பிரபு தனது அப்பாவை கண்டுபிடித்தாரா இல்லையா, என்பது தான் ‘60 வயது மாநிறம்’ படத்தின் மீதிக்கதை.
பிள்ளைகளுக்கும், தந்தைக்கும் இடையே தற்போதைய காலக்கட்டத்தில் எவ்வளவு பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கிறது, என்பதை எதார்த்தமாக சொல்லியிருக்கிறார்கள்.
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் பிரகாஷ்ராஜின் நடிப்பை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை. அதிலும், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் பிரகாஷ்ராஜ், சில இடங்களில் தனது முக சைதைகளை கூட நடிக்க வைத்து நம்மை வியக்க வைத்திருக்கிறார்.
பிரகாஷ்ராஜுடன் போட்டி போடும் அளவுக்கு விக்ரம் பிரபு இப்படத்தில் தனது நடிப்பின் விஸ்வரூபத்தை காண்பித்திருக்கிறார். இந்த படம் அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருப்பதோடு, சிவாஜி பேரன் என்று அவர் நெஞ்சை நிமிர்த்தி நடப்பதற்கான படமாகவும் இந்த படம் அமைந்திருக்கிறது.
பணத்திற்காக கொலை செய்யும் சமுத்திரக்கனி, தனது முதலாளியிடம் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்க, ஒரு கட்டத்தில் அவரையே கொலை செய்ய முதலாளி முடிவு செய்வதும், அதை அறிந்து நல்லவனாக முயற்சி செய்யும் சமுத்திரக்கனிக்கு இறுதியில் ஏற்படும் முடிவு என்று அவரது வேடமும் மனதில் நிற்கிறது.
மனிதர்களின் உணர்வுகளை ரொம்ப டீட்டய்லாக வெளிப்பத்துவதற்காக திரைக்கதையை ரொம்பவே பொருமையாக இயக்குநர் ராதா மோகன் நகர்த்தினாலும், திரைக்கதையோடு இணைந்து பயணிக்க வைத்திருக்கும் எதார்த்தமான நகைச்சுவையால் நம்மை அவ்வபோது சிரிக்க வைத்துவிடுகிறார்.
இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருப்பது போல, விஜியின் வசனமும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
திரைக்கதை இறுக்கமாக பயணித்தாலும், குமரவேல் - மதுமிதா தம்பதியின் எதார்த்தமான நகைச்சுவைக் காட்சிகள் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.
திரைக்கதை மெதுவாக நகர்வது சற்று குறையாக இருந்தாலும், பிரகாஷ்ராஜ் தனது காதல் கதையை விவரிப்பது, இறுதியில் அதே பாணியில் விக்ரம் பிரபு தனது காதலியை கரம் பிடிப்பது போன்ற காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு மற்றும் காட்சிகளையொட்டி வரும் நகைச்சுவை ஆகியவை படத்தை ரசிக்கும்படி செய்வதோடு, காணாமல் போகும் பிரகாஷ்ராஜுடன் நம்மை பயணிக்க வைப்பதோடு, அப்பாவை தேடும் விக்ரம் பிரபுவை போல, நம் மனதிலும் நம் தந்தையை தேடி பார்க்க செய்கிறது.
மொத்தத்தில், இந்த ‘60 வயது மாநிறம்’ மனிதர் அனைத்து பிள்ளைகளும் தேட வேண்டியவர் தான்.
ரேட்டிங் 3.5/5