Jun 10, 2022 07:16 AM

’777 சார்லி’ விமர்சனம்

23e6fafad206be6248003b89acd22abf.jpg

Casting : Charlie, Rakshit Shetty, Sangeetha Sringeri, Raj B. Shetty, Danish Sait, Bobby Simha

Directed By : Kiranraj K.

Music By : Nobin Paul

Produced By : Rakshit Shetty, GS Gupta

 

காதை பிளக்கும் துப்பாக்கி சத்தங்கள், நெஞ்சை பதற வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் பான் இந்தியா படங்கள் நடுவே, பாசம், ஆசை, உணர்வு ஆகியவை மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது, என்ற உண்மையை நம் உள்ளம் புரிந்துக்கொள்ளும்படி சொல்லும் உலக மக்கள் கொண்டாடும் ஒரு பான் வேர்ல்ட் படம் தான் ‘777 சார்லி.

 

பல படங்களில் நாய் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருப்பதை நாம் பார்த்திருப்போம், ஆனால் இந்த படத்தில் நாய் தான் கதையின் நாயகனாக நடித்து நம் மனதில் இடம் பிடிக்கிறது, என்று சொல்வது  மிகையாக இருந்தாலும் அது தான் உண்மை. இந்த உண்மையை இப்படி பிறர் சொல்லி தெரிந்துக்கொள்வதை விட, படத்தை பார்த்து தெரிந்துக்கொண்டால் அதை நினைத்து நினைத்து மகிழ்வது உறுதி.

 

விரக்தியாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஹீரோ ரக்‌ஷித் ஷெட்டியின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுகிறது ஒரு நாய்க்குட்டி. அதற்கு சார்லி என்று பெயர் வைத்து வளர்த்து வரும் ரக்‌ஷித், இந்த உலகத்தில் தனக்காக வாழும் ஒரு உயிர் இருக்கிறது என்று நினைத்து வாழ்க்கையை வாழ தொடங்கும் போது அந்த உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்துக்கொள்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும், அதையடுத்து வரும் ரக்‌ஷித் மற்றும் சார்லியின் உணர்வுப்பூர்மான பயணம் தான் ‘777 சார்லி’.

 

படத்தின் ஹீரோ ரக்‌ஷித்தா அல்ல சார்லியா? என்று கேட்டால் நமக்கு டக்கென்று நினைவுக்கு வரும் பெர்யர் சார்லி தான். குறும்பு செய்து குழந்தைகளை மகிழ்விக்கும் செல்ல பிராணியாக மட்டும் அல்லாமல், தனது எஜமானரின் உணர்வுக்கு ஏற்ப தனது முக  பாவத்தை மாற்றி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது சார்லி என்ற நாய். படம் முழுவதும்  நாய் இருந்தாலும், அனைத்து காட்சிகளிலும், நாய்க்கு கூட இப்படியெல்லாம் நடிக்க தெரியுமா! என்ற ஆச்சரியத்தோடு நம்மையும் கதையோடு பயணிக்க வைத்திருக்கும் சார்லி என்ற அந்த நாயின்  பயிற்சியாளரையும் நிச்சயம் பாராட்ட வேண்டும்.

 

ஹீரோவாக மாஸ் காட்டுவததை விட மக்களின் உள்ளத்தில் இடம் பிடிக்கும் கதையில் கிளாஸாக நடித்திருக்கிறார் ரக்‌ஷித் ஷெட்டி. சார்லியின் சேட்டையால் அவதிப்படுவது முதல் அதே சார்லியை தான் வாழ்க்கையாக நினைத்து வாழ்வது வரை அனைத்து இடங்களிலும் அளவான நடிப்பு மூலம் ஸ்கோர் செய்கிறார்.

 

கதாநாயகியாக நடித்திருக்கும் சங்கீதா ஷ்ரிங்கேரி, குறைவாக வந்தாலும் கதையுடன் பயணிக்கும் வேடத்தில் நிறைவாக நடித்திருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பாபி சிம்ஹா, ஒரு சில காட்சிகள் நடித்தாலும் தனது நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.

 

மனிதர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை திரையை தாண்டி ரசிகர்களிடம் கடத்துவதென்பதே மிகப்பெரிய சவாலான விஷயமாக இருந்தாலும், ஒரு நாயின் உணர்வுகளை ரசிகர்களிடம் மிக கச்சிதமாக கடத்தியிருக்கும் ஒளிப்பத்திவாளர் அரவிந்த் காஷ்யப்பின் பணி பிரமிக்க வைக்கிறது. கதைக்கு ஏற்றபடி ஒளிப்பதிவு செய்திருப்பவர் நம்மை ஒரு மிகப்பெரிய பயணத்திலும் பங்குபெற வைத்திருக்கிறார்.

 

நோபின் பால் கதை நகர்தலுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் மற்றும் பினனணி இசை கதையோடு பயணிப்பதோடு கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்துவதற்கான வழியை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது.

 

மனிதர்களாக இருந்தாலும் சரி நாயாக இருந்தாலும் சரி, உயிரும், உணர்வும் அனைவருக்கும் ஒன்று  தான் என்ற கருத்தை சின்ன சின்ன வசனங்கள் மூலமாக புரிய வைத்திருக்கிறார்கள் வசனம் எழுதிய ராஜ் பி.ஷெட்டி மற்றும் அபிஜித் மகேஷ்.

 

இப்படி ஒரு படத்தை முதல் படமாக இயக்கியிருக்கும் கிரண்ராஜ்.கே-வின் தைரியத்தோடு,  அவரது இயக்குநர் ஆளுமையையும் வெகுவாக பாராட்டியாக  வேண்டும். 

 

ஒரு மனிதனுக்கும் நாய்க்கும் இடையே இருக்கும் உணர்வுப்பூர்வமான உறவை இதை விட அழகாகவும் ஆழமாகவும் யாராலும் சொல்ல முடியாது. படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நம் கவனம் சிதறாமல் கதை சொல்வதோடு, காட்சிகளையும் சுவாரஸ்யமாக அமைத்திருக்கும் இயக்குநர் கிரண்ராஜ்.கே, ஒரு நாயை நவரசமிக்க நடிகராக்கியிருப்பது பெரும் வியப்பு.

 

மொத்தத்தில், ‘777 சார்லி’ எதிர்ப்பார்க்காத ஆச்சரியம்.

 

ரேட்டிங் 3.5/5