Jul 04, 2024 08:22 AM

’7ஜி’ (7G) திரைப்பட விமர்சனம்

5da3d23f2e5d18f7f5d205598ee93b62.jpg

Casting : Sonia Agarwal, Smruthi Venkat, Roshan Basheer, Siddharth Vipin, Sneha Gupta, Subramaniam Siva, Kalkiraja

Directed By : Haroon

Music By : Siddharth Vipin

Produced By : Dream House - Haroon

 

ரோஷன் பஷீர் - ஸ்முருதி வெங்கட் தம்பதி தனது மகனுடன் அடுக்குடிமாடி குடியிருப்பில் புதிதாக குடியேறுகிறார்கள். தனது நீண்டநாள் சொந்த வீடு கனவு நினைவானதால் ஸ்முருதி வெங்கட் மகிழ்ச்சியாக இருக்கிறார். மறுபக்கம், ரோஷன் பஷீரின் அலுவலக தோழி சினேகா குப்தா அவரை அடைவதற்காக மாயமந்திர முயற்சிகளில் ஈடுபடுவதோடு, அவரது வீட்டில் சூனியம் செய்யப்பட்ட பொம்மையை வைக்கிறார். இதற்கிடையே, ரோஷன் பஷீர் வேலை விசயமாக வெளியூர் செல்ல, தனியாக இருக்கும் ஸ்முருதி வெங்கட் பல்வேறு அமானுஷ்ய பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்.

 

அந்த வீட்டில் அடைப்பட்டு இருக்கும் ஆத்மா ஒன்று திடீரென்று வெளியாகி, ஸ்முருதி வெங்கட்டை மிரட்டுவதோடு, “இது என் வீடு, இங்கு யாரையும் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறி அவரை விரட்ட முயற்சிக்கிறது. அந்த ஆத்மா யார்?, சூனியம் செய்யப்பட்ட பொம்மைக்கும் அந்த ஆத்மாவுக்கும் என்ன தொடர்பு?, ஸ்முருதி வெங்கட் அந்த அமானுஷ்ய சக்தியிடம் இருந்து  தன் வீட்டையும், பிள்ளையையும் காப்பாற்றினரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

படத்தின் முக்கியமான திருப்புமுனையாக பயணித்திருக்கும் சோனியா அகர்வால், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். 

 

படத்தின் மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஸ்முருதி வெங்கட், காதல், ஏக்கம், பயம், தைரியம் என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்யக்கூடிய கதாபாத்திரத்தை சரியாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.

 

ஸ்முருதி வெங்கட்டின் கணவராக நடித்திருக்கும் ரோஷன் பஷீர், மனைவியுடன் ஒரு பாட்டு, அலுவலக தோழியுடன் ஒரு பாட்டு என்று பாட்டு நடிகராக பயணித்திருக்கிறாரே தவிர, திரைக்கதைக்குள் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஒரே ஒரு காட்சியில் மட்டும் திரைக்கதையில் சற்று தலை காட்டுபவர், அதன் பிறகு மீண்டும் வெளியூர் பறந்துவிடுகிறார்.

 

ரோஷன் பஷீரின் அலுவலக தோழியாக நடித்திருக்கும் சினேகா குப்தா, ஆசைப்பட்ட நபரை அடைவதற்காக மந்திரம், சூனியம் என்று முயற்சிக்கும் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அடுத்தடுத்த காட்சிகளில் அவை அனைத்தும் காமெடி ஏரியாவாக மாறிவிடுவது பெருத்த ஏமாற்றம்.

 

இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம் என்றாலும், திகில் காட்சிகளில் பின்னணி இசைக்காக இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.  இசையமைப்பாளராக சித்தார்த் விபின் கவனம் பெறவில்லை என்றாலும், நடிகராக கவனம் ஈர்க்கிறார். அதிலும், காமெடி கலந்த வில்லனாக அவர் நடித்த விதம் ரசிக்க வைக்கிறது. 

 

சுப்பிரமணிய சிவா, கல்கி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களுக்கு உருப்படியான வேலை ஏதும் கொடுக்கப்படவில்லை, ஊருகாய் போல் பயன்பட்டிருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் கண்ணா, அடுக்குமாடி குடியிருப்பையும், அதனுள் இருக்கும் 7G எண் கொண்ட வீட்டை மட்டுமே காட்டி ரசிகர்களை பயமுறுத்த முயற்சித்திருக்கிறார். அதில் பல காட்சிகள் அவர் நினைத்து போல் ரசிகர்களை பயப்பட வைத்தாலும், மற்றவை மிக சாதாரணமாக பயணித்து எடுபடாமல் போய்விடுகிறது.

 

எழுதி இயக்கியிருப்பதோடு, தயாரிக்கவும் செய்திருக்கும் ஹாரூண், திகில் கதையை வழக்கமான ஃபார்மெட்டில் சொல்லியிருந்தாலும், பிளாக் மேஜின் போன்ற விசயங்களை பயன்படுத்தி கவனம் ஈர்க்கிறார். பிளாக் மேஜிக் மூலம் படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை கதைக்குள் பயணிக்க வைப்பவர், அடுத்தடுத்த காட்சிகளில் ஏதோ பெரிய விசயத்தை சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் பார்வையாளர்கள் மனதில் ஏற்படுத்தி விடுகிறார்.

 

இயக்குநர் ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகளும், அதனைச் சார்ந்த சில காட்சிகள் ரசிகர்களின் ஆர்ட் பீட்டை எகிற வைத்தாலும், ஓரளவுக்கு மேல் அதை நீட்டிக்க செய்யாமல், குழந்தைகள் பார்க்க கூடிய விதத்தில் அமானுஷ்யத்தை ஒரு விளையாட்டு பொம்மையாகவும் காட்டி சிறுவர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்.

 

நடிகை சோனியா அகர்வாலின் திரை வாழ்வில் ’7G ரெயின்போ காலனி’ என்ற படம் மிக முக்கியமான படமாக அமைந்தது. அதுபோல் இந்த 7G அமையவில்லை என்றாலும், மிக மோசமான படமாக அல்லாமல், அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திகில் படமாக அமைந்திருக்கிறது.

 

மொத்தத்தில், இந்த ’7ஜி’ பழைய வீடு தான் என்றாலும், அதை புதிதாக வடிவமைத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

 

ரேட்டிங் 3/5