’800’ திரைப்பட விமர்சனம்
Casting : Madhur Mittal, Mahima Nambiar, Narain, King Ratnam, Nassar, Vadivukkarasi, Riythvika, Vela Ramamoorthy, Sharath Lohithaswa, Vinod Sagar, Hari Krishnan, Rithvik Dileepan
Directed By : M.S. Sripathy
Music By : Ghibran
Produced By : Movie Train Motion Pictures
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும் உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான முத்தையா முரளிதரனின் ஆரம்பகால வாழ்க்கை முதல் அவர் கிரிக்கெட் விளையாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது, அதன்பின் படிபடியாக உயர்ந்தது, இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து பல்வேறு சாதனைகளை படைத்ததோடு, பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி, அதில் இருந்து போராடி தன்னை நிரூபித்தது என நகரும் கதை அவருடைய இறுதி டெஸ்ட் போட்டியில் 800 வது விக்கெட்டை எடுத்ததோடு முடிவடைகிறது.
இலங்கை மலைவாழ் தமிழரான முத்தையா முரளிதரன், கிரிக்கெட் வீரராவதற்காக கடுமையாக உழைத்ததை விட கடுமையான பல போராட்டங்களை எப்படி கடந்து வந்தார் என்பதை விவரிக்கும் இப்படம், அவர் மீதான விமர்சனத்தை அவர் எப்படி எதிர்கொண்டு, அதில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்து பல சாதனைகள் படைத்தார் என்பதையும் விவரித்திருக்கிறது.
முத்தையா முரளிதரன் வேடத்தில் நடித்திருக்கும் மதூர் மிட்டல், இயல்பாக நடித்திருக்கிறார். எந்த ஒரு பதற்றமும் அல்லது முத்தையா முரளிதரனை தன்னுள் கொண்டு வர வேண்டும் என்ற முயற்சி என்று எதையும் தன்னுள் ஏற்றிக்கொள்ளாமல், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
முத்தையா முரளிதரனின் மனைவி மதிமலர் வேடத்தில் நடித்திருக்கும் மஹிமா நம்பியார் வரும் காட்சிகள் குறைவு தான் என்றாலும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.
அர்ஜுன ரணதுங்கா வேடத்தில் நடித்திருக்கும் கிங் ரத்தினம், அப்படியே அவரைப் போலவே இருப்பதோடு, கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடித்திருக்கும் நரேன், ஒரு காட்சியில் வந்தாலும், அவர் பேசும் வசனங்களால் கைதட்டல் பெறுகிறார்.
நாசர், வடிவுக்கரசி, வேல ராமமூர்த்தி, ரித்விகா, சரத் லோகிதஸ்வா, ஹரி கிருஷ்ணன், வினோத் சாகர், திலீபன், ரித்விக் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு பழைய காலக்கட்டங்களை அப்படியே நம் கண் முன் நிறுத்துகிறது. கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் எளிமையாக இருந்தாலும், அந்த மைதானங்களில் நாம் உட்கார்ந்திருக்கும் அனுபவத்தை கொடுக்கிறது.
ஜிப்ரான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது.
உலக அளவில் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படம் என்றாலும், தனது பந்து வீச்சு விமர்சனம் செய்யப்பட்ட போது அதை அவர் எப்படி எதிர்கொண்டார், தன் பக்கம் உள்ள நியாயத்தை நிரூபிக்க அவர் எத்தகைய கடினமான முயற்சிகளில் ஈடுபட்டார் என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி எழுதியிருக்கிறார்.
தமிழராக இருந்தாலும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும், விடுதலை புலிகளின் ஆயுத போராட்டத்திற்கு எதிராகவும் இருந்த முத்தையா முரளிதரன், போரினால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை, என்ற கருத்தை இயக்குநர் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படம் என்பதால் அவருடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் படத்தின் காட்சிகள் அமைந்திருந்தாலும், ஒரே ஒரு காட்சியில் வரும் விடுதலை புலிகள் தலைவர் பிரகாரனின் வேடமும், அவர் பேசும் “திருப்பி அடிக்கிறவங்க கிட்ட சொல்லாதீங்க, முதலில் அடிக்கிறவங்க கிட்ட சொல்லுங்க”, “இது ஒரு பகுதி இல்ல தம்பி” போன்ற வசனங்களும் ரசிகர்களின் கைதட்டலால் திரையரங்கையே அதிர வைக்கிறது.
இலங்கையை சேர்ந்த மலையக தமிழராக இருந்தாலும், வாய்ப்பு வசதிகள் இருக்கும் குடும்பத்தில் பிறந்தவரான முத்தையா முரளிதரன், கிரிக்கெட் வீரராக உயர்ந்தது பெரிய விசயம் இல்லை என்று தெளிவாக தெரிகிறது. அதனால் தான் அவர் பெரிய கிரிக்கெட் வீரரான பிறகு எதிர்கொண்ட விமர்சனத்தையும், அதில் இருந்து அவர் வெற்றிகரமாக மீண்டு வந்து, 800 விக்கெட்டுகள் வீழ்த்தியதையும் படத்தின் பிரதானமாக சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு திரைப்படமாக எந்தவித தொய்வும் இல்லாமல் நகரும் திரைக்கதை மற்றும் சுவாரஸ்யமான காட்சிகள் படத்தை முழுமையாக ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில், ‘800’ திரைப்படம் சரித்திரம் படைக்கவில்லை என்றாலும், ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் படமாக இருக்கிறது.
ரேட்டிங் 3.5/5