Dec 25, 2021 10:25 AM

’83’ விமர்சனம்

e812f9bda9eafedc3724c54414414f35.jpg

Casting : Ranveer Singh, Deepika Padukone, Jiiva, Pankaj Tripathi, Tahir Raj Bhasin, Saqib Saleem, Jatin Sarna, Chirag Patil, Dinker Sharma, Nishant Dahiya, Harrdy Sandhu

Directed By : Kabir Khan

Music By : Score : Julius Packiam, Songs : Pritam

Produced By : Deepika Padukone, Kabir Khan, Vishnuvardhan Induri, Sajid Nadiadwala, Reliance Entertainment,83 Film Ltd

 

கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்றது. இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படும் இந்த நிகழ்வு தான் ‘83’ திரைப்படத்தின் கதை.

 

பல உண்மை சம்பவங்களும், பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளும் திரைப்படமாக வெளிவந்திருந்தாலும், சுமார் 35 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விளையாட்டு போட்டி தொடரை, அப்படியே திரும்ப பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும் திரைப்படம் என்றால் அது இந்த ‘83’ படமாக மட்டுமே இருக்கும், என்று சொல்லும் அளவுக்கு, 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை நிகழ்வை அப்படியே காட்சிப்படுத்திருக்கிறார்கள்.

 

இந்திய அணியில் இருந்த வீரர்களைப் போன்று நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது மட்டும் இன்றி, அன்றைய காலக்கட்டத்தில் நடந்த போட்டிகள், பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், ரசிகர்கள், விளையாட்டு மைதானங்கள் என அனைத்தும், அப்போட்டியை நேரில் பார்த்தவர்களுக்கு நினைவுப்படுத்தும் வகையிலும், பார்க்காதவர்கள் பரவசமடையும் வகையிலும் மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது படத்தின் கூடுதல் சிறப்பு.

 

அப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவின் கதாப்பாத்திரம் தான் கதையின் நாயகன். அந்த வேடத்தில் ரன்வீர் சிங், தன்னை ஒரு கபில் தேவாகவே மாற்றிக்கொண்டு வாழ்ந்திருக்கிறார், என்று சொல்ல வேண்டும். கபில் தேவ் போலிங் மற்றும் பேட்டிங் செய்யும் விதத்தை அப்படியே தன்னுள் கொண்டு வந்திருப்பவர், அவருடைய ஆங்கில உச்சரிப்பு என அனைத்திலும் மிக நேர்த்தியை கையாண்டு, கபில் தேவின் க்ளோனிங்காகவே வலம் வருகிறார்.

 

கபில் தேவுக்கு அடுத்தபடியாக தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரியார் ஸ்ரீகாந்த் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வேடத்தில் ஜீவா, எப்போதும் போல தனது நகைச்சுவை நடிப்பால் கவர்கிறார்.

 

கபில் தேவின் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் தீபிகா படுகோனே, இரண்டாம் பாதியில் வந்தாலும், கபிலுக்கு நம்பிக்கை தரும் வசனங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.

 

சுனில் கவாஸ்கர் வேடத்தில் நடித்திருக்கும் தஹிர் ராஜ், மொஹிந்தர் அமர்நாத் வேடத்தில் நடித்திருக்கும் சாஹிப் சலீம், யெஸ்பால் சர்மா வேடத்தில் நடித்திருக்கும் ஜஸ்டின் சர்மா, சந்தீப் பாட்டீல் வேடத்தில் நடித்திருக்கும் ஜிரக் பாட்டீல், ரோஜர் பென்னி வேடத்தில் நடித்திருக்கும் நிஷாந்த் தாஹியா, சையத் கிர்மாணி வேடத்தில் நடித்திருக்கும் சாஹில் கட்டார் என அணி வீரர்களாக நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் பொருத்தமான தேர்வாகவும், இயல்பாகவும் நடித்திருக்கிறார்கள்.

 

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி பலம் வாய்ந்தவையாகவும், இந்திய கிரிக்கெட் சங்கம் பணம் பலம் மிக்கதாகவும் இருக்கிறது. ஆனால், அப்போதைக்கு பலவீனமான அணியாக இருந்த இந்திய கிரிக்கெட் அணி எப்படி பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்தது என்பதை, சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கபீர் கான்.

 

பொதுவாக விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் என்றாலே வசனங்கள் உற்சாகம் அளிக்கும் வகையில் இருக்கும். ஆனால், 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலக கோப்பை போட்டி விளையாட்டையும் தாண்டி, அரசியல் உலகிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, உலக அரங்கில் இந்தியாவின் பெயர் ஓங்கி ஒலிக்கவும் செய்தது, என்பதை வசனங்கள் மூலம் பல இடங்களில் பளிச்சென்று சொல்கிறார்கள் வசனம் எழுதிய கபீர் கான் மற்றும் சுமித் அரோரா.

 

கபீர் கான், சஞ்சய் புரான் சிங், சவுகான் மற்றும் வாசன் பாலா ஆகியோரது கதை மற்றும் திரைக்கதை அமைப்பு ஒரு மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவை பல வருடங்கள் கழித்தும் கொண்டாட வைக்கிறது.

 

அசீம் மிஸ்ராவின் ஒளிப்பதிவு, ஜூலியஸ் பக்கியம் மற்றும் பிரித்தம் ஆகியோரது இசை, நிதின் பைடின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் மிக நுட்பமாக கையாளப்பட்டிருக்கிறது. குறிப்பாக அப்போதைய கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெறும் வாக்கியங்கள் மற்றும் ரன் பலகைகளை கூட மிக நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்கள்.

 

மொத்தத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் சாதனையாக கருதப்படும் 1983 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர், தற்போது இந்திய திரயுலகிலும் சாதனை படைத்துள்ளது.

 

ரேட்டிங் 4/5