Aug 31, 2018 02:36 PM

’ஆருத்ரா’ விமர்சனம்

04f50e3501e20ca751fe29fa4402e022.jpg

Casting : Pa.Vijay, Dhakshitha Kumariya, K.Bagyaraj, SA Chandrasekar, Rajendran, Sanjana Singh

Directed By : Pa.Vijay

Music By : Vidyasagar

Produced By : Pa.Vijay

 

பெரிய மனிதர்கள் சிலர் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். அவர்கள் கொலை செய்யப்படும் பகுதியில் சிவன் கோவில் எதாவது ஒன்று இருப்பதோடு, அந்த கொலையாளியும் ருத்ராட்ச மாலை, கருப்பு உடை என்று வித்தியாசமான உடையில், முகமூடி அணிந்துக் கொண்டு அந்த கொலைகளை செய்து வருகிறார்.

 

இதற்கிடையே, தொழிலதிபர் ஒருவர் காணவில்லை என்று போலீஸுக்கு புகார் வர, யாருக்கும் தெரியாமல் அவரை கண்டுபிடிக்கும் பொறுப்பை போலீஸ் தனியார் டிடெக்டிவ் ஏஜெண்டான பாக்யராஜியிடம் ஒப்படைக்கிறது. தொலைந்த தொழிலதிபர் குறித்து விசாரணை நடத்தும் பாக்யராஜ், தொடர் கொலைகளுக்கான பின்னணியை கண்டுபிடிப்பதோடு, இந்த கொலைகளை செய்ததும், தொலைந்த தொழிலதிபரை கடத்தி வைத்திருப்பதும் பா.விஜய் தான் என்பதையும் கண்டுபிடித்துவிட, பா.விஜய் ஏன் இந்த கொலைகளை செய்கிறார், அவர்களால் பா.விஜய் எப்படி பாதிக்கப்பட்டார், என்பது தான் படத்தின் க்ளைமாக்ஸ்.

 

தனிப்பட்ட மனிதனின் பழி வாங்கும் உணர்வு தான் இந்த ‘ஆருத்ரா’ வின் கதை என்றாலும், அதை சமூக பிரச்சினையோடு சேர்த்து திரைக்கதை அமைத்து சொல்லியிருக்கிறார்கள்.

 

நடிகராக மட்டும் இன்றி இயக்குநராகவும் இப்படத்தில் பயணித்திருக்கும் பா.விஜய், ஒரு சாதாரண பழி வாங்கும் கதையாக இப்படம் இருக்க கூடாது என்பதற்காக திரைக்கதையில் பலவிதமான ட்விஸ்டுகளையும், சஸ்பென்ஸையும் கையாணடாலும், அவற்றை காட்சிப்படுத்துவதில் ரொம்பவே தடுமாறியிருக்கிறார்.

 

சமூகத்தில் அதிகரித்து வரும் குற்ற செயல்களில் ஒன்றான சிறுமிகள் கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து பேசும் இப்படம், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதையும், அதே சமயம், சிறுமிகள் தங்களிடம் தவறாக நடந்துக் கொள்பவர்களை எப்படி கண்டறிவது என்பதையும், படத்தில் சொல்லியிருக்கும் விதம் சிறுமிகளுக்கும், பெற்றோர்களுக்கும் சிறந்த பாடமாக அமைந்திருக்கிறது.

 

நல்ல விஷயத்தை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பா.விஜய், அதை நல்லபடியாகவே சொல்லியிருக்கலாம். ஆனால், படத்தில் கமர்ஷியல் மசாலா இருக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சி நடிகை சஞ்சனா, அவரது தங்கையாக நடித்திருக்கும் மற்றொரு நடிகையின் கவர்ச்சி மற்றும் பாக்யராஜின் ஆண்டிஸ் மோகம், என்று சில இடங்களிப் சிவப்பு வண்ணம் போசியிருப்பது, திரைக்கதையில் சொல்லப்பட்ட நல்ல விஷயத்தையே ரசிகர்கள் மறந்துவிடும்படி செய்துவிடுகிறது.

 

ஹீரோவாக நடித்திருக்கும் பா.விஜய், தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். தனியார் டிடெக்டிவ் ஏஜெண்டாக வரும் பாக்யராஜின் கதாபாத்திரத்தை சீரியஸாக காட்டியதை விட காமெடியாக காட்டுவது தான் அதிகம் என்பதால், அவரது கதாபாத்திரம் மனதில் நிற்காமல் போகிறது. அதேபோல், மொட்டை ராஜேந்திரனும், அவர் வரும் காட்சிகளும் ரொம்பவே நம்மை கடுப்பாக்குகிறது.

 

வித்யாசாகரின் இசையில் பாடல்கள் ஒகே தான். அதிலும் பா.விஜய் கொலை செய்யும் போது ஒலிக்கும் பாடல் திரும்ப திரும்ப கேட்கும் விதத்தில் இருக்கிறது. சஞ்சய் லோக்நாத்தின் ஒளிப்பதிவும் ஓகே தான் என்றாலும், ஷான் லோகேஷின் எடிட்டிங் தான் படத்தை ஏடாகூடமாக வெட்டி ஒட்டியிருக்கிறது.

 

படத்தின் மேக்கிங்கில் பல குழப்பங்களும், பல குறைபாடுகளும் நிறைந்திருந்தாலும், படத்தில் சொல்லப்பட்ட விஷயம் மக்களுக்கும், சிறுமிகளுக்கும் மிகவும் தேவையான ஒன்று என்பதால், இந்த ‘ஆருத்ரா’ வை ஒரு முறை பார்க்கலாம்.

 

2.5/5