Aug 25, 2023 08:46 AM

’அடியே’ திரைப்பட விமர்சனம்

ff528016383712a16ac3e553820ba95f.jpg

Casting : GV Prakash Kumar, Gowri Kishan, Venkat Prabhu, RJ Vijay, Madumukesh, Swetha Venugopal

Directed By : Vignesh Karthik

Music By : Justin Prabhakaran

Produced By : Maali & Manvi Movie Makkers - Prabha Premkumar

 

வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு முயற்சிக்கும் நாயகன் ஜிவி பிரகாஷ், டிவியில் தனது பள்ளி பருவ காதலி கெளரி கிஷனை பார்க்கிறார். அவர் சொல்லும் ஒரு விசயத்தால் மீண்டும் வாழ நினைப்பவர், அவரை மீண்டும் சந்திக்க முயற்சிக்கிறார். ஆனால், அவருக்கு ஜிவி பிரகாஷை யார் என்று தெரியாது என்கிற நிலையில், தன் காதலை எப்படியாவது அவரிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைப்பவர், அதற்கான சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கும் போது விபத்து ஒன்றில் சிக்கி மயக்கமடைகிறார். கண் விழிக்கும் போது வேறு ஒரு உலகத்தில் இருக்கிறார். 

 

இதே சென்னை தான் என்றாலும், பனி பொழிவு உள்ளிட்ட பல மாற்றங்களை அங்கு சந்திக்கும் ஜிவி பிரகாஷின் பெயர் கூட அந்த உலகத்தில் வேறு ஒன்றாக இருக்கிறது. அதே சமயம், ஜிவி பிரகாஷ் மனதில் வைத்திருந்த காதலி கெளரி கிஷன், அந்த உலகத்தில் மனைவியாக இருக்கிறார். இது கனவா? அல்லது நிஜமா? என்ற குழப்பத்தோடு சில நாட்களை கடத்தும் ஜிவி பிரகாஷ் குமார், எது எப்படியோ தன் காதலி தனக்கு கிடைத்துவிட்டால், என்ற நிம்மதியோடு புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ தொடங்கும் போது மீண்டும்  பழைய உலகுக்குள் பிரவேசிக்க, அங்கே அவருடைய காதலி, நண்பனின் காதலியாக இருப்பதோடு, அவருக்கு திருமண வேலைகளும் நடக்க, இறுதியில் இந்த  இரண்டு கதைகளின் பின்னணி என்ன? என்பதை பரபரப்பாகவும், எதிர்பார்ப்புடனும் சொல்வது தான் ‘அடியே’.

 

டைம் டிராவல், டைம் லூப் போன்ற அறிவியல் தொடர்பான பாணியிலான திரைப்பட வரிசையில் பேர்லல் யூனிவர்ஸ் என்ற அறிவியல் பாணி கதையை, காதல் என்ற அழகியலோடு சொல்லி அசத்தியிருக்கிறது இந்த ‘அடியே’ படம்.

 

பள்ளி மாணவனாகவும், இளைஞராகவும் இரண்டு வேடங்களிலும் கச்சிதமாக பொருந்துகிறார் ஜிவி பிரகாஷ் குமார். தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ் அதை தனது நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். தலை முடி, மீசை தாடி என்று காதல் மயக்கத்தில் இருக்கும் இளைஞராக இருப்பவர், பள்ளி மாணவராகவும் மனதில் நின்றுவிடுகிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் கெளரி கிஷன் அதீத அழகுடனும், இயல்பான நடிப்புடனும் ரசிகர்களை கவர்கிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் ஜிவி பிரகாஷின் மனதை மட்டும் அல்ல படம் பார்ப்பவர்களின் மனதையும் கொள்ளையடிக்கிறது. 

 

நண்பராக நடித்திருக்கும் ஆர்ஜே விஜய், வழக்கம் போல் தியேட்டரை கலகலப்பாக வைக்கிறார். வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனுஸ் என்ற பெயர்களை வைத்தே அவர் செய்யும் காமெடி குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

 

கெளதம் மேனனாக நடித்திருக்கும் வெங்கட் பிரபு, தன்னை தானே நக்கல் அடித்துக் கொள்ளும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது.

 

இயக்குநர் மணிரத்னம் வேகப்பந்து வீச்சாளராக இருப்பது, பயில்வான் ரங்கநாதன் இசையமைப்பாளராக இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கியது, கூல் சுரேஷ் ஊமை, ஹுண்டாய் நிறுவனம் பேஸ்ட், பிரதமராக விஜயகாந்த் என ரசிக்க கூடிய ஏகப்பட்ட அம்சங்கள் படத்தில் இருக்கிறது.

 

கோகுல் பினோய் ஒளிப்பதிவு படத்தை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

அறிவியல் கதையை காதல் கதையோடு சேர்த்து சிறப்பாக திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், அதை எந்தவித குழப்பமும் இன்றி மக்களுக்கு புரியும்படி சொல்லியிருக்கிறார்.

 

காட்சிகளை கையாண்ட விதம், வசனங்கள் மற்றும் இரண்டாம் உலகத்தில் நடந்திருக்கும் மாறுதல்களை நகைச்சுவையாக கையாண்டிருப்பது போன்றவை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கொண்டாட வைப்பதோடு, காதலர்களை திரும்ப திரும்ப பார்க்க வைக்கும்படி இருக்கிறது.

 

மொத்தத்தில், இந்த ‘அடியே’ வெற்றியே..

 

ரேட்டிங் 3.5/5