Feb 27, 2021 11:07 AM

’ஏலே’ விமர்சனம்

220d26d161f80f58570db737da3831b1.jpg

Casting : Samuthirakani, Manikandan, Madhumathi

Directed By : Halitha Shameem

Music By : Arul Dev, Kaber Vasuki

Produced By : Reliance Entertainment, Wallwatcher Films - Pushkar and Gayatri

 

குச்சி ஐஸ் வியாபாரியான சமுத்திரக்கனி பொறுப்பில்லாமல் இருக்க, அதனால் அவரது பிள்ளைகள் அவரை வெறுக்கிறார்கள். அவரது மகன் மணிகண்டன், வளர்ந்த பிறகு அப்பாவிடம் பேசுவதையே நிறுத்திவிடுகிறார். அதே ஊரை சேர்ந்த பண்ணையாரின் மகளான மதுமதியும், மணிகண்டனும் காதலிக்க, சிறு கருத்து வேறுபாடு காரணமாக காதலில் விரிசல் ஏற்பட்டு, மணிகண்டன் ஊரை விட்டு சென்றுவிடுகிறார்.

 

அப்பாவின் மரணத்திற்காக மீண்டும் ஊர் திரும்பும் மணிகண்டன், இரண்டு நாட்களில் தனது காதலிக்கு திருமண நடக்க இருக்கும் தகவல் அறிந்து பதறிப்போக, மறுபுறம் அவரது அப்பாவின் சடலம் காணாமல் போகிறது. காணாமல் போன சடலம் என்ன ஆனது?, கை நழுவிப் போன மணிகண்டனின் காதல் கைகூடியதா? போன்ற கேள்விகளுக்கான பதில் தான் படத்தின் மீதிக்கதை.

 

தவறான புரிதல்களால் மனித உறவுகளில் ஏற்படும் விரிசல்களும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் இயல்பான கதாப்பாத்திரங்களோடும், நெகிழ்ச்சியான காட்சிகளோடும் நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஹலிதா சமீம்.

 

பக்கம் பக்கமாக வசனம் பேசும் கதாப்பாத்திரங்களில் அதிகம் நடித்து வந்த சமுத்திரக்கனி, இதில் முத்துக்குட்டி என்ற வித்தியாசமான வேடத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

 

சமுத்திரக்கனியின் மகனாக நடித்திருக்கும் மணிகண்டன், இயல்பாக நடித்திருக்கிறார். அப்பாவின் மீது இருக்கும் கோபத்தை கண்களினாலேயே வெளிப்படுத்துபவர், காதல் காட்சிகளில் ரசிகர்களையும் உருக வைத்துவிடுகிறார்.

 

மணிகண்டனின் காதலியாக நடித்திருக்கும் புதுவரவு மதுமதி, அழகாக இருக்கிறார். அவர் எது செய்தாலும், எப்படி நடித்தாலும் நம்மை ஈர்க்கும் வகையில் இருக்கும் அவருடைய கண்கள் அவருக்கு கூடுதல் சிறப்பு.

 

மணிகண்டனின் நண்பர்களாக நடித்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட கிராமத்து மக்கள் என சிறு சிறு வேடத்தில் நடித்தவர்கள் கூட சில நிமிடங்கள் நம்மை கவனிக்க வைக்கிறார்கள்.

 

அருள்தேவ் மற்றும் கபேர் வாசுகியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையை சுவாரஸ்யமாக நகர்த்துகிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகும், கிராம மக்களின் இயல்பும் கூடுதல் கவனம் பெறுகிறது.

 

இயல்பான கதாப்பாத்திரங்கள் மற்றும் காட்சிகள் அமைப்போடு, மனித உணர்வுகள் பற்றி பேசியிருக்கும் இயக்குநர் ஹலித சமீமின் நேர்த்தியான திரைக்கதை படத்திற்கு கூதல் பலம். படத்தின் நீலத்தை சற்று குறைத்திருந்தால், பலம் இன்னும் அதிகரித்திருக்கும்.

 

மொத்தத்தில், ‘ஏலே’ படத்தை “பலே...” என்று பாராட்டலாம்.

 

ரேட்டிங் 3.5/5

 

குறிப்பு : நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் இப்படம், வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.