Nov 25, 2022 05:48 PM

’ஏஜெண்ட் கண்ணாயிரம்’ திரைப்பட விமர்சனம்

b6915ee74de9d4f6a1389e47ff42764e.jpg

Casting : Santhanam, Guru Somasundaram, Riya Suman, Munishkanth, Redin Kingsley, Pugazh, E. Ramdoss, Aadhira

Directed By : Manoj Beedha

Music By : Yuvan Shankar Raja

Produced By : Labyrinth Films

 

ரயில் தண்டவாளம் இருக்கும் குறிப்பிட்ட சில பகுதிகளில் அவ்வபோது சில பிணங்கள் கிடக்கின்றன. அந்த உடல்களை யாரும் உரிமை கோராததால் அனாதை பிணங்களாக கருதி புதைக்கும் காவல்துறை அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விசாரிக்காமல் விட்டுவிடுகிறது. இந்த உடல்களுக்கு பின்னாள் ஏதோ குற்றம் நடப்பதை உணரும் துப்பறிவாளரான சந்தானம், தனது துப்பறியும் பணியை தொடங்குகிறார். அப்போது சந்தானம் தேடி செல்லும் நபர்கள் ஒவ்வொருவராக கொலை செய்யப்படுவதோடு, அவரை சுற்றி பல மர்மமான சம்பவங்கள் நடக்கின்றன. அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, சடலங்களின் பின்னணியில் இருக்கும் குற்றங்களை சந்தானம் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’.

 

நாயகனாக நடித்தாலும் நகைச்சுவையோடு வலம் வந்த சந்தானம், தனது ரூட்டை மாற்றும் போதெல்லாம் அவருக்கு பெரிய அடி விழும். அப்படிப்பட்ட அடி இந்த படத்திலும் அவருக்கு விழுந்தாலும், படத்தில் ஏதோ வித்தியாசமாக முயற்சித்திருக்கிறாரே, என்று பாராட்டும்படியும் நடித்திருக்கிறார். வழக்கமான சந்தானத்தை பார்க்க விரும்புகிறவர்களுக்கு அவருடைய நடிப்பு ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றாலும், அவரை புதிய கோணத்தில் பார்க்க ரெடியாக இருப்பவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நடித்திருக்கிறார். காமெடியே இல்லாமல் சீரியஸான வேடத்தில் நடித்தாலும், சில இடங்களில் தனது வழக்கமான டைமிங் நக்கல் நையாண்டி வசனங்கள் மூலம் சிரிக்கவும் வைக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ரியா சுமன், தொலைக்காட்சி நிருபர் வேடத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். ஆரம்பத்தில் சந்தானத்தை பேட்டி எடுக்கும் அவர் பிறகு  சந்தானத்தின் உதவியாளராக துப்பறியும் பணியிலும் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் அவருடைய வேடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் இறுதியில் ஒன்னுமில்லாமல் போவது பெரும் ஏமாற்றம்.

 

முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, புகழ், ஈ.ராமதாஸ், குரு சோமசுந்தரம், ஆதிரா, இந்துமதி என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் அனைவரும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருந்தாலும், அவர்களை சரியாக பயன்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது.

 

ஒளிப்பதிவாளர்கள் தேனி ஈஸ்வர் மற்றும் சரவணன் ராமசாமி இருவரும் வித்தியாசமான முறையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். கதை நடக்கும் இடம் மற்றும் கதாபாத்திரங்களை படமாக்கிய விதம் அனைத்தும் மற்ற படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருப்பது ரசிக்க வைக்கிறது.

 

இசை யுவன் சங்கர் ராஜா என்று டைடில் கார்டில் போடுகிறார்கள். ஆனால், படத்தில் இடம்பெறும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை என்று எங்குமே யுவன் தெரியவில்லை.

 

தெலுங்கில் வெற்றி பெற்ற ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா’ என்ற படத்தை தழுவி திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் மனோஜ் பீதா, சந்தானம் ஹீரோ என்றதுமே அவரை காமெடியாக காட்டலாமா? அல்லது வித்தியாசமாக சீரியஸாக காட்டலாமா? என்று குழப்பமடைந்திருப்பது பல காட்சிகளில் தெரிகிறது.

 

மிகப்பெரிய குற்றத்தை கண்டுபிடிக்கும் துப்பறிவாளரை சுற்றி நடக்கும் கதை, அதை சார்ந்த காட்சிகள் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்வது தான் வழக்கம். ஆனால், இயக்குநர் மனோஜ் பீதா அதை அப்படியே உல்டாவாக ரொம்ப மெதுவாக நகர்த்துவதோடு, சில கதாபாத்திரங்கள் குறித்து விரிவாக சொல்லாமல் காட்சிகளை முடித்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். குறிப்பாக சந்தானம் தேடி செல்லும் மாறன் என்ற கதாபாத்திரம் யார்? என்பதை எந்த இடத்திலும் சொல்லாமல் விட்டது, நம்மை கதையோடு ஒன்ற வைக்கவில்லை.

 

சந்தானம் தனது பங்கிற்கு அனைத்து திருப்பங்களையும் வசனம் மூலம் சொன்னாலும், அடுத்தடுத்து வரும் காட்சிகளில் எந்தவித ஈர்ப்பும் இல்லாததால் நம் கவனம் முழுவதும் பாப்-கார்ன் மீது தான் இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸில் வில்லனாக காட்டப்படும் மருத்துவர் மற்றும் அவர் குற்றம் குறித்து சொல்லும் விஷயங்களை அழுத்தமாக சொல்லதது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ்.

 

மேக்கிங்கில் சற்று வித்தியாசத்தை கையாண்டிருக்கும் இயக்குநர் மனோஜ் பீதா, அந்த வித்தியாசத்தை திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பிலும் கையாண்டி கதையை தெளிவாக சொல்லியிருந்தால் கண்ணாயிரம் கவனம் ஈர்த்திருப்பார்.

 

மொத்தத்தில், ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ ஏனோ தானோ.

 

ரேட்டிங் 2.5/5