Mar 01, 2025 06:04 AM

‘அகத்தியா’ திரைப்பட விமர்சனம்

e0944f57a429bff434ddf5c6127aa673.jpg

Casting : Jiiva, Raashii Khanna, Arjun, Edward Sonnenblick, Matylda, Yogi Babu, VTV Ganesh

Directed By : Pa Vijay

Music By : Yuvan Shanker Raja

Produced By : Vels Film International and WAMINDIA

 

திரைப்படத்துறையில் கலை இயக்குநராக பணியாற்றும் ஜீவா, புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு பங்களா ஒன்றில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ’ஸ்கேரி ஹவுஸ்’ என்று சொல்லக்கூடிய பயங்கரமான வீடு போன்ற ஒரு அரங்கத்தை உருவாக்கி,  அதை பார்த்து ரசிக்க பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார். மக்களிடம் சிறப்பான வரவேற்பை பெறும் அந்த பங்களாவில் நிஜமாகவே அமானுஷ்ய சக்திகள் இருப்பதோடு, அங்கிருந்து ஜீவாவை அந்த அமானுஷ்யங்கள் விரட்டியடிக்கிறது. அதே சமயம், அந்த பங்களாவில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதையும், தனக்கும் அந்த பங்களாவுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதையும் அறிந்துக் கொள்ளும் ஜீவா, அதன் முழு பின்னணியை தெரிந்துக்கொள்ள முயற்சிக்க, அது என்ன ? என்பதை திகில் கலந்த ஃபேண்டஸியாக மட்டும் இன்றி சித்தா மருத்துவம் மற்றும் சித்தர்களின் முக்கியத்துவதோடு சொல்வதே ‘அகத்தியா’.

 

ஹீரோவாக காதல் செய்வது, மாஸ் காட்டுவது என பயணிக்கும் வேடம் இல்லை என்றாலும், மர்மத்தை கண்டுபிடிக்கும் ஒரு கதாபாத்திரத்தில், பெற்ற தாய்க்காக எப்படிப்பட்ட பேயையும் எதிர்கொள்ள களத்தில் இறங்கும் ஜீவா, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். ஆனால், கிளைமாக்ஸ் காட்சிகளை பார்க்கும் போது, ஜீவாவை காட்டிலும் அவரது அனிமேஷன் உருவம் அதிகம் உழைத்திருக்கிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் ராஷி கண்ணா, படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை நாயகனின் காதலியாக வந்தாலும், அதற்கான எந்தவித காட்சியும் படத்தில் இல்லாதது அவருக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றம்.

 

பிரெஞ்சு நாட்டு வாழ் தமிழராக சித்த மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுனின் அனுபவமான நடிப்பு மற்றும் திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

 

Aghathiyaa Review

 

எட்வர்ட் சோனென்ப்ளிக், மாடில்டா ஆகியோர் திரைக்கதையோட்டத்திற்கு ஏற்ப பயன்பட்டிருக்கிறார்கள். திணிக்கப்பட்ட கதாபாத்திரமாக நுழையும் ரெடின் கிங்ஸ்லி வலுக்கட்டாயமான வசனங்களை பேசி பார்வையாளர்களை எரிச்சலடைய செய்கிறார். செந்தில், யோகி பாபு, விடிவி கணேஷ் என கெளரவ வேடத்தில் நடித்திருக்கும் காமெடி நடிகர்கள் லேசாக சிரிக்க வைக்கிறார்கள்.

 

ஆரம்பத்தில் யுவன் சங்கர் ராஜாவின் பெயரை பார்த்ததும் உற்சாகமடையும் பார்வையாளர்களை அம்மா பாடல் மற்றும் ”என் இனிய பொன் நிலாவே...” ரீமிக்ஸ் மூலம் குஷிப்படுத்தும் யுவன், கதைக்கு ஏற்ப பின்னணி இசையமைத்திருக்கிறார்.

 

பிரெஞ்சு காலக்கட்டத்தில் ஆடம்பர பங்களாவை பிரமாண்டமாக காண்பிடித்து ரசிக்க வைக்கும் ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி,  தற்போதைய காலக்கட்டத்தில் பயங்கரமாக காண்பித்து பயமுறுத்தவும் செய்திருக்கிறார். 

 

படத்தின் அனைத்துக் காட்சிகளும் கலை இயக்குநர் பி.சண்முகத்தின் கைவண்னத்தில் உருவான அரங்குகளில் நடக்கின்றன. ஆடம்பரமான பிரெஞ்சு பங்களாவாக இருந்து பிறகு பேய் பங்களாவாக மாற்றமடைந்து, பிறகு ஸ்கேரி ஹவுஸாக உருவாகும் ஒரு கட்டிடத்தின் மாற்றத்தை மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கும் கலை இயக்குநர் பி.சண்முகம், நாயகனின் வண்ணமயமிக்க வீடு, சித்தரின் எளிமையான கோவில் என அனைத்தையும் அதிகம் மெனக்கெட்டு உருவாக்கியிருப்பது காட்சிகளில் தெரிகிறது. 

 

எழுதி இயக்கியிருக்கும் பா.விஜய், சித்த மருத்துவத்தின் நன்மைகள் மற்றும் சித்தர்களின் வலிமையை கருப்பொருளாக வைத்துக்கொண்டு, அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய  திகில் கலந்த ஃபேண்டஸி படத்தை கொடுத்திருக்கிறார்.

 

சித்த மருத்துவர் அர்ஜுனின் கதை மற்றும் அவருக்கு என்ன நடந்தது ? என்ற கேள்வி படத்தை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் பயணிக்க வைத்திருக்கிறது. இரண்டாம் பாதியில் நடக்கும் கிராபிக்ஸ் சண்டைக்காட்சி கொஞ்சம் தூக்கலாக இருப்பது திரைக்கதையின் போக்கை மடைமாற்றம் செய்யும்படி இருந்தாலும், அவை அனைத்தும் சிறுவர்களை நிச்சயம் கொண்டாட வைக்கும்.  

 

மொத்தத்தில், ‘அகத்தியா’ அனைவருக்குமான நல்ல பொழுதுபோக்கு திரைப்படம்.

 

ரேட்டிங் 3/5