’அகோரி’ திரைப்பட விமர்சனம்
Casting : Sidhu Sid, Sruthi Ramakirushnan, Sarath, Madhanagopal, Vetri, Riyamika, Mime Gopi, Sayajeshinde
Directed By : DS Rajkumar
Music By : 4 Music
Produced By : Motion Film Pictures - Suresh K.Menon
இதுவரை யாரும் எடுக்காத ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்று நினைக்கும் இயக்குநர் ஒருவர் அதற்காக பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு ஒரு கதையை எழுதுகிறார். ஆனால், அந்த கதையை அவரால் படமாக்க முடியாமல் போக, விரக்தியில் தற்கொலை செய்துகொள்கிறார். இந்த சம்பவம் நடந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு, படம் இயக்கும் முயற்சியில் இருக்கும் நாயகன் சித்து சித், கதை எழுதுவதற்காக தனது நண்பர்களுடன் அந்த வீட்டுக்குள் செல்ல, அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே அபசகுணமான சில விசயங்கள் நடக்கிறது.
ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத சித்து சித் மற்றும் அவரது நண்பர்கள் தங்களது வேலையை பார்க்க, 50 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் எழுதிய கதை புத்தகத்தில் இருந்து ஒவ்வொரு காகிதமாக அங்கிருப்பவர்களை தேடி வர, அதில் இருப்பது போல் நடந்தால், வீட்டினுள் இருப்பவர்கள் உயிருடன் இருக்கலாம், அப்படி நடக்கவில்லை என்றாலும், அங்கிருந்து தப்பிக்க நினைத்தாலும், அனைவரும் இறந்து விடுவார்கள், என்று அந்த காகிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அதன்படி, சித்துவும் அவரது நண்பர்களும் சில விசயங்களை செய்தாலும் அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகிறது.
இந்த நிலையில், சித்துவின் காதலி ஸ்ருதி ராமகிருஷ்னன் அவரை தேடி அந்த வீட்டுக்கு வந்து அவரும் அந்த சிக்கலில் சிக்கிக்கொள்ள, சித்து மற்றும் அவரது காதலியை கொலை செய்தால் மட்டுமே மற்றவர்களால் அங்கிருந்து தப்பிக்க முடியும், என்று எழுதப்பட்ட காகிதம் அவர்களுக்கு கிடைக்கிறது. அதை படித்த நண்பர்கள் அதில் இருப்பது போல் செய்தார்களா?, அங்கிருந்து அனைவரும் தப்பித்தார்களா? இல்லையா?, என்பது தான் படத்தின் மீதிக்கதை.
சின்னத்திரை மூலம் மக்களிடம் பிரபலமான சித்து சித், வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திலேயே பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய பலமான வேடத்தில் எந்தவித பதட்டமும் இன்றி நடித்து பாராட்டு பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி ராமகிருஷ்ணன், காதலனை தேடி வந்து பேயிடம் சிக்கிக்கொண்டாலும், அங்கு நடப்பதை உணராமல் ஜாலியாக இருப்பது, பிறகு விசயம் தெரிந்தவுடன் பயப்படுவது என்று கொடுத்த வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்.
நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் வெற்றி, ரியாமிகா, சரத், மதனகோபால் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, கதை ஓட்டத்திற்கு பக்கபலமாகவும் பயன்பட்டிருக்கிறார்கள். பேய் வீட்டில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடினாலும் அவ்வபோது அவர்கள் பேசும் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களும், டைமிங் ஜோக்குகளும் சிரிக்க வைக்கிறது.
சாமியாராக நடித்திருக்கும் மைம் கோபி மற்றும் அகோரியாக நடித்திருக்கும் சாயாஜி ஷிண்டே ஆகியோரது நடிப்பும், அந்த கதாபாத்திரமும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒரே வீட்டுக்குள் கதை நடந்தாலும் அந்த உணர்வே ஏற்படாத வகையில் பல கோணங்களில் அந்த வீட்டை காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏ.வி.வசந்த். வீட்டை மட்டும் இன்றி அதில் இருக்கும் பொருட்களையும் காட்டி பயமுறுத்தியிருப்பவர் தனது கேமரா மூலம் பேயாட்டம் ஆடியிருக்கிறார்.
இசையமைப்பாளர் 4 மியூசிக்-ன் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது. திகில் படங்களுக்கான வழங்கமான இசையாக மட்டும் இன்றி சிறு சிறு சத்தங்கள் மூலமாக பீதியடைய வைக்கிறார்.
படத்தொகுப்பாளர் ராஜ்குமார், கலை இயக்குநர் சந்திரகாந்த், ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்ச மணி ஆகியோரின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது.
திகில் கதையை பயமுறுத்தும் வகையில் மட்டும் இன்றி பொழுதுபோக்காகவும் கையாண்டிருக்கும் இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார், அதை புதிய ஃபார்மட்டில் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.
கதை எழுதுவதற்காக வீட்டுக்குள் சென்றவர்கள் பேயிடம் சிக்கிக்கொண்டு, அங்கிருந்து தப்பிக்க முடியாமல் திணறும் காட்சிகள் ரசிகர்களை பதற வைத்தாலும், அவ்வபோது அவர்கள் மூலமாகவே ரசிகர்களை சிரிக்க வைக்கும் விதத்தில் வசனங்கள் அமைந்திருப்பது ரசிகர்களை ரிலாக்ஸ் ஆக்குகிறது.
வீட்டுக்குள் நடக்கும் திகில் சம்பவங்களும், பேய் மூலம் வரும் காகிதத்தில் எழுதப்பட்டிருக்கும் சம்பவங்களும், அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நம்மை சீட் நுணியில் உட்கார வைத்தாலும், திடீரென்று இடம்பெறும் அகோரி மற்றும் அதனைச் சார்ந்த காட்சிகள் ரசிகர்களை குழப்பமடைய செய்கிறது. இருந்தாலும், நாயகன் மற்றும் நாயகிக்கு, ஏற்படும் ஆபத்து, போன்றவரை மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறது.
ஒரு வீட்டுக்குள் நடக்கும் பேய் கதை என்பது காலம் காலமாக நாம் பார்த்து பழகியது தான் என்றாலும், படம் இயக்குவதற்காக எழுதப்பட்ட கதையை மையமாக கொண்டு திகில் காட்சிகளை வடிவமைத்த விதமும், அவற்றின் மூலம் திரைக்கதையை திகிலாகவும், கமர்ஷியலாகவும் வடிவமைத்த விதம் புதிதாக இருக்கிறது.
மொத்தத்தில், பேய் பட ரசிகர்களுக்கும், பொழுதுபோக்கு பட விரும்பிகளுக்கும் ஏற்ற சரியான படம் இந்த ‘அகோரி’
ரேட்டிங் 3/5