Dec 26, 2024 07:27 AM

‘அலங்கு’ திரைப்பட விமர்சனம்

57a58c2f9703d55c8da7fbeb79c84b78.jpg

Casting : Gunanidhi, Kali Venkat, Semban Vinoth, Sarath Appani, Soundararaja, Sri Rekha, Shanmugam Muthusamy, Regin Rose, Idhayakumar, Master Ajay and More

Directed By : SP Shakthivel

Music By : Ajeesh

Produced By : DG Film Company and Megnas Productions - Sabarish and Sangamithra Soumiya Anbumani

 

தமிழக மலைவாழ் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த நாயகன் குணாநிதி, காளி என்ற நாயை வளர்க்கிறார். எங்கு சென்றாலும் அந்த நாயுடன் பயணிப்பவர், வேலைக்காக தனது சகோதரர்கள் மற்றும் உறவினர்களுடன் கேரளா செல்லும் போதும் காளி நாயை தன்னுடன் அழைத்துச் செல்கிறார். அங்கு எதிர்பாராமல் நடக்கும் சிறு சம்பவத்தை தொடர்ந்து, காளி நாய்க்கு ஆபத்து ஏற்படுகிறது. அதில் இருந்து காளியை காப்பாற்றும் முயற்சியில் ஒருவரது கையை குணாநிதி வெட்டிவிடுகிறார்.

 

கையை இழந்தவர் குணாநிதி மற்றும் அவரது கூட்டத்தை கொலை செய்ய துடிக்க, அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் குணாநிதி, காட்டு வழியாக பயணம் மேற்கொள்கிறார். அந்த பயணம் அவர்களை தப்பிக்க வைத்ததா? அல்லது வேறு ஆபத்தில் சிக்க வைத்ததா? என்பதே ‘அலங்கு’ படத்தின் கதை.

 

தர்மா என்ற கதாபாத்திரத்தில் மலைவாழ் பழங்குடியினராக நடித்திருக்கும் குணாநிதி, துடிதுடிப்பான நடிப்பில் வெடித்திருக்கிறார். அனைத்து உயிர்களையும் ஒன்றாக பார்த்து அன்பு செலுத்துபவர், தனது நாய்க்கு ஆபத்து என்றதும் காட்டும் அதிரடி சரவெடி. நடிப்பு, சண்டைக்காட்சி, வனப்பகுதியில் பயணம் என கதாபாத்திரத்திற்காக குணாநிதி கடுமையாக உழைத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.

 

மலையன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட் வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் என இரண்டையும் அசால்டாக செய்திருக்கிறார்.

 

கேரள முதலாளியாக நடித்திருக்கும் செம்பன் வினோத், தன் மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்துவதற்காக நாய்கள் மீது காட்டும் வெறித்தனம் கொஞ்சம் ஓவர் தான்.

 

கையை இழந்துவிட்டு கொலைவெறியோடு நாயகனை துரத்தும் சரத் அப்பானி, ஆக்ரோஷமான நடிப்பு மூலம் மிரட்டுகிறார்.

 

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீரேகா, வித்தியாசமான தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார்.

 

சவுந்தர்ராஜா, சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், இதயக்குமார், மாஸ்டர் அஜய், கொட்ரவை, ஏஞ்சல், மஞ்சுநாத் உள்ளிட்ட  மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் முகம் காட்டுகிறார்கள்.

 

அடர்ந்த வனப்பகுதியின் அழகு மற்றும் ஆபத்துகளை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் பாண்டிக்குமார், மலைவாழ் பழங்குயின மக்களாக நடித்திருப்பவர்களையும், அவர்களின் உணர்வுகளையும் நேர்த்தியாக மக்களிடம் கடத்தியிருக்கிறார்.

 

அஜீஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்தை பிரதிபலிக்கிறது.

 

சான் லோகேஷின் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் நகர்த்திச் செல்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.பி.சக்திவேல், காளி என்ற நாயையும், அதன் செயல்பாடுகளையும் மிக தத்ரூபமாக படமாக்கியிருப்பதோடு, வனப்பாதையின் ஆபத்து நிறைந்த பயணத்தை சாகச காட்சிகளாக வடிவமைத்து பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைப்பதோடு, மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வியலை சரியான அளவில் கதையில் பயன்படுத்தியிருக்கிறார்.

 

வில்லனிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் நாயகனின் போராட்ட பயணத்தை அடர்ந்த வனப்பகுதியின் பின்னணியில் சொல்லும் கமர்ஷியல் ஆக்‌ஷன் படம் என்றாலும், அதற்கான திரைக்கதையில் ஒரு நாயை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு இயக்குநர் எஸ்.பி.சக்திவேல் அமைத்திருக்கும் திரைக்கதை புதிதாக இருக்கிறது. நாய் தான் படத்தின் பிரதானம் என்ற போதிலும் அதற்கான காட்சிகள் குறைவாக இருப்பது சிறு ஏமாற்றமளிக்கிறது. 

 

ஆக்‌ஷன் படம் என்றாலும், செல்லப்பிராணியான நாய் மட்டும் இன்றி யானை, நரிக்கூட்டம் என்று வன விலங்குகளையும் காட்சிகளில் பயன்படுத்தி சிறுவர்களையும் கவர முயற்சித்திருக்கும் இயக்குநர் சக்திவேல்  தான் எடுத்துக்கொண்ட கதைக்கருவுக்கு 100 சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் உழைத்திருப்பது திரையில் தெரிகிறது.

 

மொத்தத்தில், ‘அலங்கு’ அட்டகாசமான பயணம்.

 

ரேட்டிங் 3.5/5