Nov 03, 2024 07:02 AM

’அமரன்’ திரைப்பட விமர்சனம்

002a486ad38234679b49576a3259f64b.jpg

Casting : Sivakarthikeyan, Sai Pallavi, Rahul Bose, Bhuvan Arora

Directed By : Rajkumar Periyasamy

Music By : G. V. Prakash Kumar

Produced By : Raaj Kamal Films International and Sony Pictures Films India - Kamal Haasan, R. Mahendran, Vivek Krishnani

 

சிறு வயதில் இருந்தே ராணுவ அதிகாரியாக வேண்டும் என்று ஆசைப்படும் நாயகன் சிவகார்த்திகேயன், கல்லூரி படிக்கும் போது நாயகி சாய் பல்லவியை காதலிப்பதோடு, தான் ஆசைப்பட்டது போலவே ராணுவ அதிகாரியாகி விடுகிறார். ஆனால், அவர் ராணுவத்தில் பணியாற்றுவதால் சாய் பல்லவியின் தந்தை அவருக்கு பெண் கொடுக்க மறுக்கிறார். அதே சமயம், சாய் பல்ல்வியின் தந்தை சம்மதத்துடன் தான் தங்களது திருமணம் நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சிவகார்த் தியேன், தன் காதலில் ஜெயித்தாரா?, தான் நேசிக்கும் ராணுவத்தில் அவர் எத்தகைய சாதனைகளை படைத்தார், என்பதே படத்தின் கதை.

 

முகுந்த் வரதராஜன் என்ற ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பதோடு, தனது வழக்கமான உடல் மொழியை எந்த இடத்திலும் வெளிக்காட்டாமல் முகுந்த் வரதராஜனாகவே வலம் வந்திருக்கிறார்.

 

மலையாள பெண்ணாக நடித்திருக்கும் சாய் பல்லவி, நாயகனுக்கு இணையான வேடத்தில் நடித்து கனவம் ஈர்ப்பதோடு, கிளைமாக்ஸ் காட்சியில் தனது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு மூலம் பார்வையாளர்களைய கண்கலங்க வைத்துவிடுகிறார்.

 

புவன் அரோரா, ராகுல் போஸ் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. அதிலும், ராணுவக் காட்சிகள் மற்றும் எல்லையில் நடக்கும் யுத்த காட்சிகளை தனது பின்னணி இசை மூலம் ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வை ஜிவி ஏற்படுத்தி விடுகிறார்.

 

ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய், ராணுவ யுத்தங்களை மிக எதார்த்தமாக படமாக்கியிருப்பதோடு, ராணுவ வீரர்களின் ரகசிய ஆபரேஷன்களை மிக தத்ரூபமாக காட்சிப்படுத்த மிக கடினமாக உழைத்திருக்கிறார். 

 

படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன், ஒரு ராணுவ அதிகாரியின் வாழ்க்கை மற்றும் அவரது வீரதீர செயல்களை பார்வையாளர்கள் திரைப்படமாக ரசிக்க கூடிய விதத்தில் நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் ராஜ்குமார் பெரியசாமி, ராணுவ அதிகாரியின் வாழ்க்கை மற்றும் ராணுவத்தில் குறுகிய காலத்தில் அவர் நிகழ்த்திய சாதனைகளை எந்தவித சினிமாத்தனமும் இன்றி எதார்த்தமாக காட்சிப்படுத்தியிரு ந்தாலும், ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் சண்டைகளையும், அவ்வபோது நடக்கும் தாக்குதல்களையும் ஹாலிவுட் படம் போல் காட்சிப்பபடுத்தி அசத்தியிருக்கிறார்.

 

இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் மற்றும் ராணுவ வீரர்களின் வீரதீர செயல்களை பிரமாண்டமான காட்சிகள் மூலம் தத்ரூபமாக படமாக்கியிருக்கும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு மட்டும் இன்றி ஒட்டு மொத்த இந்திய ராணுவத்தையும் இப்படம் மூலம் கெளரவப்படுத்தியுள்ளார்.

 

மொத்தத்தில், ‘அமரன்’ ராணுவ வீரர்களின் தியாகங்களுக்கு சல்யூட்.

 

ரேட்டிங் - 4/5