’அன்பிற்கினியாள்’ விமர்சனம்
Casting : Keerthy Pandian, Arun Pandian, Praveen Raja
Directed By : Gokul
Music By : Javed Riyaz
Produced By : A&P Groups - Arun Pandian
செவிலியரான கீர்த்தி பாண்டியன், கனடாவுக்கு செல்ல முயற்சித்துக் கொண்டே, கோழிக்கறி உணவகம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். ஒரு நாள் வழக்கம் போல வேலை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில், கீர்த்தி பாண்டியன் உணவகத்தில் இருக்கும் குளிர்சாதன அறையில் சிக்கி கொள்கிறார். சில நிமிடங்கள் இருந்தாலே உறைந்து போகும் அளவுக்கு கடும் குளிர் கொண்ட அந்த அறையில், யாரையும் தொடர்பு கொள்ள முடியாதபடி, சிக்கி தவிக்கும் கீர்த்தி பாண்டியன், என்ன ஆனார் என்பதை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
குளிர்சாதன அறையில் சிக்கி கொண்டு தான் எதிர்கொள்ளும் திக் திக் நிமிடங்களையும், உயிர் போகும் வலியையும், படம் பார்ப்பவர்களும் உணரும்படி நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியன், ஒட்டு மொத்த ரசிகர்களை கட்டிப்போட்டு கவனத்தை ஈர்த்து விடுகிறார்.
பாசமிக்க மகளாகவும், பரிவு காட்டும் சாதாரண பெண்ணாகவும், காதலியாகவும் முதல் பாதியில் கமர்ஷியல் நாயகியாக வலம் கீர்த்தி, இரண்டாம் பாதியில் குளிர்சாதன அறையின் கொடுமையை தனது நடிப்பின் மூலம் கச்சிதமாக வெளிக்காட்டி பாராட்டு பெறுவதோடு, விருது பெறுவதற்கும் சகுதியானவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஆக்ஷன் நாயகனாக பார்த்த அருண் பாண்டியன் எளிமையான கதாப்பாத்திரத்தில் இயல்பாக நடித்து கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறார். மகள் வெளிநாட்டுக்கு செல்வதை விரும்பாத பாசமிக்க தந்தையாகவும், மகளின் காதல் விவகாரம் தெரிந்ததும், அவரை உடனடியாக வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்யும் கோபமான தந்தையாகவும், சிகரெட் புகைப்பதற்காக மகளிடம் செண்டிமெண்டாக பேசி சரிக்கட்டும் ஜாலியான தந்தையாகவும், சிவம் கதாப்பாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார் அருண் பாண்டியன்.
கீர்த்தி பாண்டியனின் காதலராக நடித்திருக்கும் ப்ரவீன் ராஜா, அறிமுக நடிகராக இருந்தாலும், அனுபவம் வாய்ந்த நடிப்பு. உணவகத்தின் மேலாளராக நடித்திருக்கும் பூபதி ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அடிநாட் சசி, சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ரவீந்திர விஜய் என அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமான தேர்வாக இருப்பதோடு, அளவான நடிப்பால் கவர்கிறார்கள்.
ஜாவித் ரியாஸின் பின்னணி இசையும், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. குறிப்பிட்ட ஒரு லொக்கேஷனில் பெரும்பாலான காட்சிகள் நடைபெற்றாலும், அந்த உணர்வு ஏற்படாத வகையில் பிரதீப் ஈ.ராகவின் படத்தொகுப்பு அமைந்திருக்கிறது. கலை இயக்குநர் எஸ்.ஜெயச்சந்திரனின் குளிர்சானத அறையின், கடும்குளிர் கொடுமையை நாமும் அனுபவிக்கும் உணர்வு ஏற்படுகிறது.
மலையாள படத்தின் ரீமேக் என்றாலும், இயக்குநர் கோகுலின் திரைக்கதை நேர்த்தியாக உள்ளது. குளிர்சாதன அறையில், எந்தவித தொடர்பும் இல்லாமல் கீர்த்தி பாண்டியன் சிக்கி கொள்வது, அதில் இருந்து உயிர் தப்பிக்க அவர் எடுக்கும் முயற்சி, என அனைத்து காட்சிகளையும் லாஜிக்கோடு கையாண்டிருக்கும் இயக்குநர் கோகுல், சிகரெட் போன்ற சிறு சிறு விஷயங்களை கூட திரைக்கதையோடு தொடர்பு படுத்தியிருப்பது படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறது.
உணவகத்தின் மேலாளர் பேசும் சிறு சிறு வசனங்கள் மூலம் சிரிக்க வைக்கும் ஜான் மகேந்திரன் மற்றும் இயக்குநர் கோகுல், அப்பா - மகள் பேசும் சமூகம் சார்ந்த வசனங்கள் மூலம் சிந்திக்க வைக்கிறார்கள்.
சிறு விஷயத்தை வைத்துக் கொண்டு, வலிமையான திரைக்கதை அமைத்ததோடு, காட்சிகளை நேர்த்தியாக கோர்த்து ரசிக்கும்படி செய்திருக்கும் இயக்குநர் கோகுல், எதை எப்படி சொல்ல வேண்டும், எவ்வளவு நேரம் சொல்ல வேண்டும், என்ற அளவுகோலை கச்சிதமாக கையாண்டு படத்தை ரசிக்க வைக்கிறார்.
‘அன்பிற்கினியாள்’ அனைவரையும் ஈர்ப்பாள்.
ரேட்டிங் 4.5/5