’அனபெல் சேதுபதி’ விமர்சனம்
Casting : Vijay Sethupathi, Tapsee, Jagapathi Babu, Yogi Babu
Directed By : Deepak Sundararajan
Music By : Krishna Krish
Produced By : Passion Studios Sudhan Sundaram and G.Jayaraman
பிரிட்டிஷ் இந்தியாவில் சேதுபதி என்ற மன்னரால் கட்டப்பட்ட அரண்மனைக்குள் யார் சென்றாலும் மரணமடைந்து விடுகிறார்கள். இதனால் பேய் அரண்மனை என்று பெயர் எடுக்கும் அந்த அழகிய அரண்மனையில், பேய் இல்லை என்பதை நிரூபிக்க டாப்ஸி மற்றும் அவருடைய குடும்பத்தார் தங்க வைக்கப்படுகிறார்கள். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை காமெடியாகவும், ஃபேண்டஸியாகவும் சொல்வது தான் ‘அனபெல் சேதுபதி’.
பேய் இருக்கும் அரண்மனை, அதனுள் சிக்கிக்கொள்ளும் மனிதர்கள், என்று சாதாரணமாக சொல்லிவிட முடியாத ஒரு நல்ல கதை. சேதுபதி என்ற மன்னர் தனது மனைவிக்காக கட்டும் அரண்மனையும், அதனை சுற்றி நடக்கும் கதையும் என ரெகுலரான பேய் படமாக அல்லாமல், தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான ஃபேண்டஸி படம், என்று சொல்லும் அளவுக்கு கதை மிக நன்றாக இருந்தாலும், அதற்கு திரைக்கதையும், காட்சிகளும் அமைக்கப்பட்ட விதத்தில் இயக்குநர் தடுமாறியிருக்கிறார்.
சாதாரண வேடத்தையே தனது நடிப்பால் ஸ்பெஷலாக மாற்றக் கூடிய விஜய் சேதுபதி, சேதுபதி என்ற மன்னர் வேடத்தை சொதப்பி வைத்திருக்கிறார். தான் வந்து நின்றாலே போதும், ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள், என்ற எண்ணத்தில் விஜய் சேதுபதி நடிக்க தொடங்கி விட்டாரோ, என்று படம் பார்ப்பவர்கள் எண்ணும் அளவுக்கு அவரது நடிப்பு இருப்பது பெரும் ஏமாற்றம்.
இங்கிலாந்து பெண்ணான அனபெல் என்ற வேடத்தில் நடித்திருக்கும் டாப்ஸிக்கு பொருத்தமான வேடம் என்றாலும், மன்னரே மயங்கும் அளவுக்கு அழகெல்லாம் அனபெல்லிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
வில்லனாக நடித்திருக்கும் கெஜபதி பாபு, ராதிகா, ராஜேந்திர பிரசாத், யோகி பாபு, வெண்ணிலா கிஷோர், சுப்பு பஞ்சு என படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தாலும், திரையில் மிகப்பெரிய வெற்றிடம் இருப்பதை அனைத்து காட்சிகளிலும் காண முடிகிறது.
அதிலும், யோகி பாபுவிடம் மசாலா தீர்ந்து விட்டது, என்று சொல்லும் அளவுக்கு அவருடைய காட்சிகள் அனைத்துமே சிரிக்க முடியாதவைகளாகவே இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கெளதம் ஜார்ஜ், இசையமைப்பாளர் கிருஷ்ணா கிஷோர், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ், கலை இயக்குநர் என தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு அபாரம்.
பேய் என்ற கருவை வைத்துக் கொண்டு நல்ல கதை எழுதியிருக்கும் இயக்குநர் தீபக் சுந்தரராஜன், அதை ஃபேண்டஸி காமெடி படமாக கொடுக்கும் முயற்சியில் சற்று சறுக்கியிருக்கிறார். இருப்பினும், ஃபேண்டஸி காமெடி படத்தை எந்தவித நெருடலும் இல்லாமல், பெரியவர், சிறியவர் என அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய வித்தத்தில் இயக்கியிருக்கிறார்.
படத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும், அவைகளை ரசிகர்களிடம் சரியாக கொண்டு சேர்க்க முடியாதபடி, திரைக்கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதையும் தாண்டி, இப்படம் ரசிகர்களிடம் சேருவதற்கு, படத்தை தயாரித்த பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராமன் தான் காரணம். இப்படி ஒரு வித்தியாசமான முயற்சியை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இவர்களுக்காக இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5