Dec 10, 2021 03:33 AM

’ஆண்டி இன்டியன்’ விமர்சனம்

d2747568d07711081180c111701439e2.jpg

Casting : Elamaran, Jayaraj, Pasi Sathya, Vijaya Mami, Gilli Maran, Vazhakku En Muthuraman, Bala

Directed By : Blue Shirt Maran (a) Elamaran

Music By : Elamaran

Produced By : Moon Pictures - Aadham Bava

 

இஸ்லாமிய தந்தைக்கும், இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தாய்க்கும் பிறந்த ஒருவர் இறந்துவிட, அந்த உயிரற்ற உடலை வைத்துக்கொண்டு மதவாதிகளும், அரசியல்வாதிகளும் நடத்தும் ஆதாய அரசியலும், அந்த அரசியல் வலையில் சிக்கி மக்கள் எப்படி சின்னாபின்னமாகிறார்கள், என்பதையும் சமரசம் இல்லாமல் கொடுக்கப்பட்டிருக்கும் சாட்டையடி தான் ’ஆண்டி இன்டியன்’.

 

படத்தின் துவக்கத்தில் சொல்லப்படும் புறா கதை மூலம் தன் படம் எதைப்பற்றி பேசப்போகிறது, என்பதை படம் பார்ப்பவர்களுக்கு புரிய வைத்துவிடும் இயக்குநர் இளமாறன், அடுத்தடுத்த காட்சிகளில் சமூக அவலங்களையும், அரசியல் அநியாயங்களையும் நையாண்டியாக சொல்லி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்.

 

பிணமாக நடித்திருக்கும் இயக்குநர் இளமாறனின் ஈக்கள் மொய்க்கும் முகத்தை காட்டும் காட்சியிலேயே நாம்திரையோடு ஒன்றிவிடுகிறோம்.

 

ஏழுமலையாக நடித்திருக்கும் ஜெயராஜ், சரோஜாவாக நடித்திருக்கும் விஜயா மாமி, பசி சத்யா, வழக்கு எண் முத்துராமன், கில்லி மாறன் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதைக்களத்தில் வாழும் மனிதர்களாகவே நம் மனதுக்குள் இறங்கி விடுகிறார்கள். ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பவர்கள் கூட திரைக்கதையோடு பயணிக்கும் விதமாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

காட்சிகளை இயல்பாக படமாக்கியிருக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் கதிரவன், தனது கேமராவை கதையோடு பயணிக்க வைத்திருக்கிறார். கதாப்பாத்திரங்களின் உணர்வுகளையும், காட்சிகள் மூலம் இயக்குநர் சொல்ல வரும் உண்மைகளையும் உருத்தாத வகையில் படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் கதிரவன், இயக்குநருக்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார்.

 

கதை எழுதி இயக்கியிருப்பதோடு இசையமைப்பாளராகவும் களம் இறங்கியிருக்கும் இயக்குநர் இளமாறன், கானா பாடல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். கதையின் பயணத்துக்கு எந்தவிதத்திலும் இடையூறு இல்லாத வகையில் பின்னணி இசையையும் நேர்த்தியாக அமைத்திருக்கும் இசையமைப்பாளர் இளம்மாறனும் கவனம் பெறுகிறார்.

 

திரைப்படங்களை விமர்சனம் செய்பவர்களால் நல்ல திரைப்படம் இயக்க முடியாது, என்ற கருத்தையும், “உன்னால் ஒரு நல்ல படம் இயக்க முடியுமா? என்ற கேள்வியையும் உடைத்தெரியும் விதத்தில் ப்ளூ சட்டை மாறன் என்கிற இளமாறனின் இந்த ’ஆண்டி இன்டியன்’ அமைந்துள்ளது.

 

மதத்தின் மூலம் பிழைப்பு நடத்துபவர்கள், மனிதர்களை வைத்து செய்யும் மத அரசியல் மீது இயக்குநர் வைத்திருக்கும் விமர்சனங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது.

 

”ஒரு பிணத்தை வைத்துக்கொண்டு, 13 பேரின் உயிரை எடுத்தவர்கள், 13 பிணங்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய போகிறார்களோ”, என்று ஒலிக்கும் பெண்ணின் அழுகுரல், ஒட்டு மொத்த சமூகமே மத அரசியல் மீது கொண்ட பயத்தை மிக அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. 

 

 

சமூக அவலங்களை அக்கறையோடு சொல்லியிருக்கும் இயக்குநர், சில காட்சிகள் மூலம் செய்திருக்கும் காமெடி அலப்பறைகளால் திரையரங்கே அதிர்கிறது. குறிப்பாக விஜய் டிவி பாலாவின் அந்த ஒரு காட்சியில் ஒட்டு மொத்த கூட்டமும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறது.

 

படத்தில் இடம்பெறும் சில வசனங்கள் சிலருக்கு நெருடலாகவும், குறையாகவும் தெரிய வாய்ப்புண்டு. ஆனால், அம்மக்கள் அருகே வாழ்ந்திருந்தால், அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் வார்த்தைகள் தான் அவை என்பது புரிவதோடு, அந்த களத்தையும், அம்மக்களையும் அப்படியே இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார் என்பதை அறிந்தும் கொள்வார்கள்.

 

தொழில்நுட்ப ரீதியாக உலக சினிமாவை எட்டிப்பிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா, உள்ளூரில் இருக்கும் கதைகளை என்றுமே தொட்டுப்பார்ப்பதில்லை. அப்படி தொடுபவர்களில் சிலர் மட்டுமே அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை மிக சரியாக செய்கிறார்கள். அந்த ஒரு சிலரைப் போல், தான் சொல்ல வந்த கருத்தை சிதைக்காமல் சொல்லியதொடு, அதை மக்களும், சினிமா ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளும்படி திரை மொழியிலும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் இளமாறன்.

 

மொத்தத்தில், ’ஆண்டி இன்டியன்’ அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 4/5