’அப்பத்தாவ ஆட்டய போட்டுடாங்க’ விமர்சனம்
Casting : Chandrahassan, Sheela, Dilli Ganesh, Kathadi Ramamoorthy, Shanmugam
Directed By : Stephen Rangaraj
Music By : Selvakumar
Produced By : GB Studios Films
முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதான பெண்மணி ஷீலாவுக்கும், முதியவர் சந்திரஹாசனுக்கும் இடையே காதல் மலர, இந்த வயதான காதல் ஜோடி, திடீரென்று எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். இவர்களை சேர்த்து வைக்க, சந்திரஹாசனின் நண்பர்கள் முயற்சிக்க, மறுபக்கம் ஓடிப்போன தனது அம்மாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் மகன் ஈடுபடுகிறார். இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.
வயதான பிறகு பெற்றோர்களை பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பிள்ளைகளுக்கு புத்தி சொல்வது மட்டும் இன்றி, வயதான பெற்றோர்களின் மன குமுறல்களையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள்.
கதையின் நாயகனாக நடித்திருப்பவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன். கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, அந்த கதாப்பாத்திரத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் அளவுக்கு மிக சிறப்பாக நடித்துள்ளார். அதிலும், கிளைமாக்சில் ஷீலாவிடம் கண்களினால் பேசும் காட்சியில், முன்பே நடிக்க வந்திருந்தால் கமல்ஹாசனுக்கே போட்டியாக இருந்திருப்பாரோ, என்று நினைக்க வைக்கிறார்.
அளவான நடிப்பின் மூலம் சிறப்பு பெறும் நடிகை ஷீலா, இறுதிக் காட்சியில் அழுத்தமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்ப்பதோடு, ரசிகர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார்.
சந்திரஹாசனின் நண்பர்களாக நடித்திருக்கும் டெல்லி கணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, சண்முகசுந்தரம், ஜெயராவ் ஆகியோர் அளவுக்கு அதிகமாகவே நடிக்கிறார்கள். இவர்களால் நாம் பார்ப்பது திரைப்படமா அல்லது மேடை நாடகமா? என்ற கேள்வி அவ்வபோது எழுகிறது.
ரெஹானா, ராஜ் சேதுபதி, ஜெயச்சந்திரன் ஆகியோரின் கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டுமே கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.
வியாபார நோக்கத்திற்காக மட்டும் அல்லாமல், சமூகத்திற்கு நல்ல விஷயத்தை சொல்ல வேண்டும், என்ற நோக்கத்தில் இப்படத்தை இயக்கிய ஸ்டீபன் ரங்கராஜ் மற்றும் படத்தை தயாரித்த ஜிபி ஸ்டுடியோ பிலிம்ஸ் நிறுவனத்தினருக்கு பாராட்டுகள்.
உலகம் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகள் கவனத்திற்காக, இப்படி ஒரு படத்தை கொடுத்த இயக்குநர் ஸ்டீபன் ரங்கராஜ், வயதானவர்களை வைத்து கமர்ஷியல் கலந்த கருத்து சொல்லும் படமாக கொடுத்திருக்கிறார். கிளைமாக்ஸில் மிக அழுத்தமான மெசஜை சொல்லி, படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைப்பதோடு, யோசிக்க வைக்கிறார்.
நடிகர்களின் நடிப்பு மற்றும் திரைக்கதை ஓட்டத்தில் சில குறைகள் இருந்தாலும், இப்படி ஒரு படத்தை நிச்சயம் பாராட்டி வரவேற்க வேண்டும்.
ரேட்டிங் 3/5
குறிப்பு : ‘அப்பத்தாவ ஆட்டய போட்டுடாங்க’ திரைப்படம் சோனி லிவ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.