Mar 26, 2025 06:59 PM

’அறம் செய்’ திரைப்பட விமர்சனம்

e46d1e372f67147a74e474bfdec0df3d.jpg

Casting : Balu S.Vaithyanathan, Anjana Kirthi, Megali Meenakshi, Lollu Sabha Jeeva, Bayilvan Ranganathan, Jaguar Thangam

Directed By : Balu S.Vaithyanathan

Music By : Srikanth Deva

Produced By : Tharagai Cinemas

 

மருத்துவ மாணவரான நாயகன் பாலு எஸ்.வைத்தியநாதன், தான் படிக்கும் அரசு மருத்துவக் கல்லூரி தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சக மாணவர்களுடன் சேர்ந்து போராடுகிறார்.  இதனால், அவருக்கு பல்வேறு மிரட்டல்கள் வருகிறது. 

 

மறுபக்கம், நாயகி அஞ்சனா கிர்த்தி அறம் செய் என்ற அரசியல் அமைப்பின் மூலம், நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனால், அவருக்கும் பல்வேறு எதிர்ப்புகள் வருகிறது. இதனால், தங்கள் தரப்பில் பல இழப்புகளை சந்தித்தாலும், கொள்கையில் உறுதியாக நிற்கும் இவர்களின் போராட்டம் வென்றதா?, என்பது தான் படத்தின் கதை. 

 

கதை, வசனம், திரைக்கதை எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பாலு எஸ்.வைத்தியநாதன், சமூகப்பிரச்சனைப் பற்றி பேசுவதற்கு பதிலாக சமூகமே பிரச்சனையில் தான் இருக்கிறது, என்ற ரீதியில் படம் முழுவதும் பல விசயங்களை, பல மணி நேரம் பேசியிருக்கிறார். 

 

மாணவர்களுடன் சேர்ந்து அகிம்சை வழியில் போராடும் காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும்  பாலு எஸ்.வைத்தியநாதன், அவ்வபோது மேகாலியுடன் டூயட் பாடல் பாடி, தனது நாயகன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க முயற்சித்திருக்கிறார்.

 

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்..” என்ற பாரதியாரின் கவிதையை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் அஞ்சனா கிர்த்தி நடித்திருக்கிறார். சில இடங்களில் அவரது நடிப்பில் செயற்கைத்தனம் தெரிந்தாலும், அவரது தோற்றம் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

 

காமெடி நடிகராக நடித்து எடுபடாமல் போன லொள்ளு சபா ஜீவா, இந்த படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்து எடுபடாமல் போயிருக்கிறார். 

 

பாலு எஸ்.வைத்தியநாதனின் காதலியாக நடித்திருக்கும் மேகாலி, பாடல்களுக்கு நடனம் ஆட மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.

 

ஜாக்குவார் தங்கம், பயில்வான் ரங்கநாதன், அமைச்சர் சொப்பன சுந்தரியாக நடித்திருக்கும் நடிகை என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் ஒரே இடத்தில் நின்று, மூச்சு இறைக்க பேசுவதையே நடிப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். 

 

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் சில இடங்களில் கவனிக்க வைத்தாலும், பல இடங்களில் சுமார் ரகமாகவே பயணிக்கிறது.

 

”அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்ற பழமொழிப் போல், இயக்குநர் பாலு எஸ்.வைத்தியநாதன் சொல்ல முயற்சித்திருக்கும் கருத்துகள் சமூகத்திற்கு அவசியமானது என்றாலும்,  அதை அளவுக்கு அதிகமான பேச்சுக்கள் மூலமாகவும், நீளமான காட்சிகள் மூலமாகவும் சொன்னது, பார்வையாளர்களை ஆத்திரப்பட வைத்துவிட்டது.

 

நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட அனிதா பற்றி பல திரைப்படங்களில் பேசியிருக்கிறார்கள், ஆனால் இந்த படத்தில் அந்த அனிதாவையே பேச வைத்திருக்கும் காட்சி பாராட்டும்படி இருக்கிறது. இப்படி சில காட்சிகள் இருந்தாலும், படத்தின் நீளம் 3 மணி நேரத்திற்கு மேலாக இருப்பது ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதித்து விடுகிறது. 

 

மொத்தத்தில், ‘அறம் செய்’ ரசிகர்களை வச்சி செய்கிறது.

 

ரேட்டிங் 2/5