’அறமுடைத்த கொம்பு’ திரைப்பட விமர்சனம்
Casting : Anand, Jessy, Simson Devaraj
Directed By : Jackson
Music By : Al Rubion
Produced By : US Fruits - Thangadurai
சொந்த ஊரில் பாதிக்கப்பட்ட நாயகன் ஆனந்த், சக மனிதர்களை வெறுத்து தனது வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்கான வழியை தேடும் போது, வேலியூர் என்ற கிராமத்தை சேர்ந்த சில மனிதர்களால் அரவணைக்கப்படுகிறார். அந்த ஊர் மக்களின் அக்கறை மற்றும் நாயகி ஜெஸ்சியின் காதலால் தொலைத்த தனது மகிழ்ச்சியை மீட்டெடுக்கும் ஆனந்த், புதிய வாழ்க்கையை தொடங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடும் ஒரு சம்பவம் நடக்கிறது. அது என்ன? அதனால் நாயகனுக்கு என்ன நடக்கிறது? என்பது தான் ‘அறமுடைத்த கொம்பு’ படத்தின் மீதிக்கதை.
சிறிய பட்ஜெட்டில் ஒரு ஜனரஞ்சமான படம் எடுக்க வேண்டும், அதே சமயம் அதில் மக்களுக்கான நல்ல கருத்தையும் சொல்ல வேண்டும் என்ற முயற்சியில் இப்படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் ஜாக்சன், சமூக நீதிபேசும் திரைக்கதையை எந்த ஒரு தரப்புக்கும் ஆதராவாக கையாளாமல், சமமாக கையாண்டு ஒட்டு மொத்த சமூகத்திற்குமான படமாக கொடுத்திருக்கிறார்.
நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த், நாயகியாக நடித்திருக்கும் ஜெஸ்சி இருவரும் புதுமுகங்கள். இருவரும் நடிகர்களாக அல்லாமல் நம் அருகே வாழும் சக மனிதர்களாக இருப்பதோடு, படத்திலும் அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். முதல் படத்திலேயே இருவரும் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் பக்குவமாக நடித்து கவனம் பெறுகிறார்கள்.
வில்லனாக நடித்திருக்கும் சிம்சன் தேவராஜ், வேட்டியின் வண்ணத்திற்கு ஏற்ப நெத்தியில் பட்டை போட்டுக்கொண்டு வலம் வரும் வெட்டி ஆபிசர் வேடத்தில் நடித்திருக்கும் நடிகர், வேலியூர் பெரிய மனிதராக நடித்திருப்பவர், மூன்று திருநங்கைகள் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், இயல்பான நடிப்பு மூலம் காட்சிகளுடன் ஒன்றி பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
அல் ரூபியானின் இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. வினோத் சிங்கின் வசனங்கள் காமெடி காட்சிகளில் சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறது.
ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் ஜாக்ஸன், கமர்ஷியல் படம் என்றாலும் அதில் மக்களுக்கு நல்ல மெசஜ் ஒன்றை சொல்லும் விதமாக படத்தை இயக்கியிருக்கிறார்.
சாதி பிரச்சனை பற்றி படத்தில் பேசப்பட்டாலும், குறிப்பிட்ட ஒரு தரப்புக்கு ஆதரவாக பேசாமல், இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் காட்சிகளை கையாண்டு ஒட்டு மொத்த சமூகத்திற்கான ஒரு படமாக கொடுத்திருக்கிறார்.
நாயகி கதாபாத்திரத்தை கையாண்ட விதம் கைதட்டல் பெறுகிறது. குறிப்பாக, நாயகி குளிக்கும் போது அவரை வில்லன் வீடியோ எடுத்து மிரட்ட, அதற்கு நாயகி கொடுக்கும் பதிலடி, இதுவரை எந்த திரைப்படத்திலும் வைக்காத காட்சியாக இருப்பதோடு, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களுக்கு சரியான சாட்டையடியாகவும் இருக்கிறது.
சாதியை மட்டும் இன்றி மதத்தையும் சில தனிமனிதர்கள் தங்களது ஆதாயத்திற்காக எப்படி தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை மாடு ஒன்றின் மூலம் அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஜாக்ஸன், பொருளாதார ரீதியாக மேக்கிங்கில் சற்று தடுமாறியிருந்தாலும், ஒரு இயக்குநராக ஒரு கதையை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.
மொத்தத்தில், மக்களை மகிழ்ச்சியோடு ரசிக்க வைக்கும் படமாக மட்டும் இன்றி, சிந்திக்க வைக்கும் ஒரு பாடமாகவும் இருக்கும் ‘அறமுடைத்த கொம்பு’ அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3.5/5