’அரண்மனை 3’ விமர்சனம்
Casting : Arya, Rashi Khanna, Sundar.C, Andrea, Vivek, Yogi Babu
Directed By : Sundar.C
Music By : C.Sathya
Produced By : Cinemax and Benzz Media
ஜமீன்தார் சம்பத்ராஜின் அரண்மனையில் இருக்கும் பேய், அவரது மகளான நாயகி ராஷி கண்ணாவை கொலை செய்ய முயற்சிக்கிறது. மறுபக்கம் ராஷி கண்ணாவை காதலிக்கும் ஆர்யா, சம்பத்ராஜின் உதவியாளர்களை கொலை செய்கிறார். இந்த கொலைகளுக்கான காரணமும், அரண்மனையில் இருக்கும் ஆவியின் பின்னணியும் தான் ‘அரண்மனை 3’ படத்தின் கதை.
அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்கள் வரிசையில், நட்சத்திரப் பட்டாளம் மற்றும் திகில் காட்சிகளின் மிரட்டல் என ‘அரண்மனை 3’-யையும் இயக்கியிருக்கும் சுந்தர்.சி, இதில் சற்று கூடுதலாக கிராபிக்ஸ் காட்சிகளை நேர்த்தியாக கையாண்டு ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.
படத்தின் நாயகன் ஆர்யா, என்று சொன்னாலும், மிக முக்கியமான காட்சிகளில் அவர் காணாமல் போவது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், ஆர்யா எங்கே? என்ற கேள்வி படம் பார்ப்பவர்கள் மனதில் தோன்றாத வகையில், மற்ற நட்சத்திரங்கள் படத்தை நகர்த்தி செல்கிறார்கள்.
முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சுந்தர்.சி, தனது வேலையை மிகச்சரியாக செய்திருக்கிறார். அவர் பேய் இருப்பதை உணரும் காட்சிகள் மிரட்டல்.
ராஷி கண்ணா, ஆண்ட்ரியா என இரண்டு நாயகிகளும் கொடுத்த வேலையில் குறை வைக்கவில்லை.
யோகி பாபு மற்றும் விவேக்கின் கூட்டணி ரசிகர்களை சிரிக்க வைக்கும் வேலையை மிகச்சரியாக செய்திருக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து மனோபாலா, நளினி, மைனா ஆகியோரது கூட்டணி கூடுதலாக சிரிக்க வைக்கிறார்கள்.
சம்பத்ராஜ், வேல ராமமூர்த்தி, மதுசூதன ராவ், சாக்ஷி அகர்வால், வின்செண்ட் அசோகன் ஆகியோரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்து மனதில் நிற்கிறார்கள்.
இசையமைப்பாளர் சி.சத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாகவும், பின்னணி இசை பயமுறுத்தும் ரகமாகவும் இருக்கிறது.
யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் அரண்மனை மட்டும் இன்றி படத்தின் அனைத்து காட்சிகளும் பிரம்மாண்டமாக இருக்கிறது.
எத்தனை நடிகர்கள் இருந்தாலும், அவர்களை சரியான முறையில் பயன்படுத்துவதோடு, திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு காட்சிகளை வடிவமைக்கும் திறன் படைத்த இயக்குநர் சுந்தர்.சி, படத்தின் ஆரம்பம் முதல் முடியும் வரை, காமெடியையும், திகிலையும் கலந்துக்கட்டி மிரட்டுகிறார்.
நட்சத்திரங்களின் காமெடி கலாட்டாக்கள் ரசிக்க வைத்தாலும், சில இடங்களில் காட்சிகளின் நீளத்தை வெட்டி, படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம், என்று தோன்றுகிறது. இருந்தாலும், படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகளின் நேர்த்தி அந்த குறையை மறைத்து விடுகிறது.
அரண்மனையில் பேய் இருப்பதை படத்தின் ஆரம்பத்தில் சொல்லி விடுகிறார்கள். இருந்தாலும், அந்த பேயின் பின்னணியில் இருக்கும் சஸ்பென்ஷ், முழு படத்தையும் ஆர்வத்துடன் பார்க்க வைப்பதோடு, அடுத்தது என்ன நடக்கும், என்ற எதிர்ப்பார்ப்பையும் படம் முழுவதும் ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில், ‘அரண்மனை 3’ அலற வைக்கும் காமெடி கலாட்டா
ரேட்டிங் 4/5