Sep 22, 2023 06:20 AM

’ஆர் யூ ஓகே பேபி’ திரைப்பட விமர்சனம்

34eec3571b3b9013c6f26480db7e7269.jpg

Casting : Samuthirakani, Abhirami, Lakshmy Ramakrishnan, Mysskkin, Aadukalam Naren, Paval Navaneethan, Mullaiarasi, Robo Shankar, Ashok, Anupama Kumar

Directed By : Lakshmy Ramakrishnan

Music By : Ilaiyaraaja

Produced By : Dr.Ramakrishnan

 

திருமணம் ஆகாமல் லிவிங் டூ கெதர் முறையில் வாழும் முல்லையரசி - அசோக் ஜோடிக்கு பெண் குழந்தை பிறக்கிறது. வறுமை காரணமாக குழந்தை இல்லாத சமுத்திரக்கனி - அபிராமி தம்பதிக்கு பணம் பெற்றுக்கொண்டு இந்த குழந்தையை முல்லையரசி - அசோக் ஜோடி கொடுத்து விடுகிறார்கள். ஒரு வருடத்திற்குப் பிறகு தத்துக்கொடுத்த தன் குழந்தை மீண்டும் தனக்கு வேண்டும் என்று நினைக்கிறார் முல்லையரசி. அதற்காக அவர் பல முயற்சிகள் செய்தும் குழந்தையை திரும்ப பெற முடியாமல் போக, இறுதியில், மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் ‘சொல்லாததும் உண்மை’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனை அனுகுகிறார்.

 

குழந்தை மற்றும் பெற்ற தாயை வைத்து நிகழ்ச்சியை உணர்ச்சிகரகமாக லட்சுமி ராமகிருஷ்ணன் நகர்த்தினாலும், பிரச்சனைக்கு அவரால் தீர்வு காண முடியவில்லை. இதற்கிடையே, இந்த பிரச்சனையில் நுழையும் காவல்துறை, குழந்தை தத்து கொடுத்ததில் சட்ட மீறல் இருப்பதாக கூறி, சமுத்திரக்கனி - அபிராமி தம்பதி மீது வழக்குப் பதிவு செய்வதோடு, அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டு காப்பகத்தில் சேர்த்துவிடுகிறது. பிறகு நீதிமன்றம் இந்த வழக்கை எப்படி கையாளுகிறது?, இந்த பிரச்சனையை உணர்ச்சிகரமாக அணுகிய லட்சுமி ராமகிருஷ்ணனின் தொலைக்காட்சி நிகழ்ச்சி வடிமைப்பாளர்கள் இதை எப்படி வியாபாரமாக்க பார்க்கிறார்கள்?, இறுதியில் குழந்தை யாருக்கு கிடைத்தது? போன்ற கேள்விகளுக்கான பதிலை உண்மைக்கு நெருக்கமாக சொல்வது தான் ‘ஆர் யூ ஓகே பேபி’.

 

மக்களின் வாழ்வியலை மிக எதார்த்தமான திரைப்படங்களாக கொடுத்து வரும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பின்னால் நடக்கும் வியாபார அணுகுமுறைகளை வெட்ட வெளிச்சமாக்கும் முறையில் இப்படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருப்பதோடு, நம் நாட்டில் குழந்தை தத்தெடுப்பில் இருக்கும் சிக்கல்கள் பற்றியும் விரிவாக பேசியிருக்கிறார்.

 

குழந்தை இல்லாத தம்பதியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி மற்றும் அபிராமி இருவரும் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறைந்த வசனங்கள் பேசி நிறைவான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தின் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் கடத்தியிருக்கும் சமுத்திரக்கணியின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

 

குழந்தை இல்லாத தாய்மார்களின் வலிகளை உணர்த்தும் வகையில் நடித்திருக்கும் அபிராமியின் நடிப்பு மிரட்டல். அதிலும், வளர்ப்பு பிள்ளைக்காக தாய்ப்பால் சுரக்க வைக்கும் காட்சி நெகிழ்ச்சியின் உச்சமாக இருக்கிறது.

 

திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் முல்லையரசியின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. ஒரு பக்கம் வறுமை மறுபக்கம் கொடுத்த குழந்தையை திரும்ப பெறுவதற்கான உணர்ச்சிகரமான போராட்டம் என்று அனைத்து உணர்சிகளையும் மிக இயல்பாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

 

முல்லையரசியின் காதலனாக நடித்திருக்கும் அசோக், நீதிபதியாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட அனைவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, தங்களது நடிப்பால் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.

 

கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, கதைக்களத்தோடு பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கும் வகையில் காட்சிகளை இயல்பாக படமாக்கியிருக்கிறது.

 

இளையராஜாவின் இசை உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் பயணித்திருக்கிறது.

 

சி.எஸ்.பிரேம் குமாரின் நேர்த்தியான படத்தொகுப்பு அழுத்தமான கதையை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறது.

 

தான் சொல்ல நினைத்ததை எந்தவித சமரசமும் இன்றி உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதிலும், இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அடிதட்டு மக்களை மையப்படுத்தியே நடக்கின்றன என்ற உண்மையை உரக்க சொல்லியிருப்பவர், அதன் பின்னணியை நடுநிலையோடு சொல்லி பாராட்டு பெறுகிறார்.

 

படத்தை இயக்கியிருப்பதோடு, தொலைக்காட்சி நிகழ்ச்சியியை நடுத்துபவராகவும் நடித்திருப்பவர், அந்த நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் அதன் பின்னணியில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை தைரியமாக வெளிப்படுத்தியிருப்பது புருவத்தை உயர்த்த செய்திருக்கிறது.

 

குழந்தையில்லா தம்பதியின் வலி மற்றும் குழந்தை தத்தெடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் போன்றவை பற்றி மிக தெளிவாக பேசி மக்களிடம் புரிதலை ஏற்படுத்தியிருக்கும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், சட்டம் மற்றும் சமூகம் இப்படிப்பட்ட பிரச்சனைகளை எப்படி கையாளுகிறது என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையோடு, நிரந்த தீர்வு காண வேண்டியதின் முக்கியத்துவத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘ஆர் யூ ஓகே பேபி’ பேசப்பட வேண்டிய பிரச்சனை மட்டும் அல்ல மக்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படமும் கூட.

 

ரேட்டிங் 3.5/5