Mar 02, 2023 06:35 PM

’அரியவன்’ திரைப்பட விமர்சனம்

473b0635a48b5bc5a707a482291a8ea2.jpg

Casting : Ishaan, Prranali, Daniel Balaji, Super Good Subramani, Sathyan, Kalki, Rama

Directed By : Mithran R.Jawahar

Music By : James Vasanthan

Produced By : MGP Mass Media

 

கபடி வீரரான நாயகன் இஷானும், நாயகி பிரனாலியும் காதலிக்கிறார்கள். பிரனாலியின் தோழி ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார். அதில் இருந்து அவரை காப்பாற்றும் முயற்சியில் இஷான் ஈடுபடும் போது, நாயகியின் தோழியை போல் பல பெண்கள் அந்த பிரச்சனையில் சிக்கிக்கொண்டிருக்கும் உண்மை தெரிய வருவதோடு, அதன் அதிர்ச்சிகரமான பின்னணியும் தெரிய வருகிறது. அதில் இருந்து அனைத்து பெண்களையும் காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் நாயகன் இஷான் அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா? அந்த பிரச்சனை என்ன? என்பதை சொல்வது தான் ‘அரியவன்’ படத்தின் கதை.

 

அறிமுக நாயகன் இஷான், கதாபாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமான தேர்வாக இருக்கிறார். ஆறடி உயரத்தில் சண்டைக்காட்சிகளில் அதிரடி காட்டுபவர், காதல், செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாவிலும் அசரடிக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் இஷானின் ஒவ்வொரு அடியும் அமர்க்களம். அதிலும், அவரது கராத்தே உடல் மொழியும், கால்களின் இயக்கமும் அர்ஜுனையும், விஜயகாந்தையும் நினைவு படுத்துகிறது. சில இடங்களில் மட்டும் சிறு சிறு ரியாக்‌ஷன்களில் சற்று தடுமாறியிருக்கிறார். அதனை  சரி செய்துக்கொண்டால் இஷான் கோலிவுட்டின் நிரந்தர ஆக்‌ஷன் ஹீரோ ஆவது உறுதி.

 

நாயகியாக நடித்திருக்கும் பிரனாலி குடும்ப பாங்கான முகத்தோடும், அளவான நடிப்போடும் கவர்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் டேனியல் பாலாஜி, வழக்கம் போல் தனது அதிரடியான வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். சில இடங்களில் சற்று ஓவராக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்திருந்தாலும், தனது நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

சத்யன், கல்கி, சூப்பர் குட் சுப்பிரமணி என்று மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென்று இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் ரசிக்க வைக்கிறது.

 

ஜேம்ஸ் வசந்தனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர், தமிழகத்தில் நடந்த பாலியல் குற்ற சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். 

 

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களும், அதன் பின்னணி பற்றிய பல அதிர்ச்சிகரமான சம்பவங்களை காட்சிகளாக்கியிருக்கும் இயக்குநர் மிதரன் ஆர்.ஜவஹர் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் படத்தை இயக்கியிருக்கிறார்.

 

பாதிக்கப்பட்ட பெண்களை ஹீரோ காப்பாற்றினாலும், படத்தில் வரும் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர், பெண்களின் பயம் தான் அவர்களின் முதல் எதிரி என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

 

சில இடங்களில் சில குறைகள் இருந்தாலும், சமூகத்திற்கு தேவையான ஒரு விஷயத்தை எந்தவித நெருடலும் இல்லாமல் சொல்லிய விதம் பாராட்டும்படி இருப்பதோடு, முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக ரசிக்கவும் வைக்கிறது.

 

மொத்தத்தில், ‘அரியவன்’ அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 3.5/5