’ஏ.ஆர்.எம்’ (Ajayante Randam Moshanam - ARM) திரைப்பட விமர்சனம்
Casting : Tovino Thomas, Krithi Shetty, Aishwarya Rajesh, Surabhi Lakshmi, Basil Joseph, Rohini, Harish Uthaman Nisthar Sait, Jagadish, Pramod Shetty, Aju Varghese, Sudheesh
Directed By : Jithin Laal
Music By : Dhibu Ninan Thomas
Produced By : Magic Frames - Listin Stephen, Dr. Zachariah Thomas
அரசாங்க பணிக்காக தேர்வு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கும் நாயகன் டோவினோ தாமஸ். அவரது தாத்தா, ஊர் கோவிலில் இருக்கும் பழம்பெரும் அதிசய விளக்கை திருட முயன்றதால், அவரையும் ஊர் மக்கள் திருடனாகவே பார்த்து அவ்வபோது அவமானப்படுத்துகிறார்கள். இதற்கிடையே, அதிசய விளக்கு பற்றி ஆவணப்படம் எடுக்க அந்த ஊருக்கு வரும் ஹரிஷ் உத்தமன் அந்த விளக்கை திருட திட்டம் போடுவதோடு, அதை டோவினோ தாமஸ் மூலமாகவே செய்யவும் முயற்சிக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை சிறப்பான மேக்கிங் மூலம் மிக சுவாரஸ்யமாக சொல்வதே ‘ஏ.ஆர்.எம்’.
ஒரு சிலையை மையக்கருவாக வைத்துக்கொண்டு 1900, 1950 மற்றும் 1990 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் பயணிக்கும் கதையை ஃபேண்டஸி ஜானரில் சொன்னது மட்டும் இன்றி, சமத்துவத்தை வலியுறுத்தும் படைப்பாகவும் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜிதின் லால்.
’அஜயனின் ரெண்டாம் மோஷனம்’ (அஜயனின் ரெண்டாவது திருட்டு) என்ற மலையாள வாக்கியத்தின் சுருக்கம் தான் ‘ஏ.ஆர்.எம்’. கதை கேரளாவில் நடப்பது போலவும், மலையாள கலாச்சாரத்தை மையப்படுத்தியதாக இருந்தாலும், கதைக்கருவும், அதற்கான திரைக்கதை, காட்களின் வடிவமைப்பு மற்றும் படத்தில் பேசப்பட்டிருக்கும் சமத்துவ அரசியல் என அனைத்தும் மொழிகளை கடந்து
அனைத்து மக்களும் கொண்டாடும் சிறப்பான திரை மொழி மற்றும் காட்சி மொழி படைப்பாக கவர்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் டோவினோ தாமஸ், காதல், வில்லத்தனம், வெள்ளந்தியான சுபாவம் என அனைத்தையும் மிக இயல்பாக கையாண்டு ரசிகர்களை ஈர்ப்பவர் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், இந்த படத்தில் மணியன் என்ற கதாபாத்திரத்தில் ஆக்ரோஷம் நிறைந்த மனிதராக நடிப்பிலும், உடல் மொழியிலும் மிரட்டியிருக்கிறார். தாத்தா செய்த தவறுக்காக தன்னையும் திருடனாக பார்க்கும் ஊர் மக்கள் முன்னிலையில் தனது இயலாமையை வெளிப்படுத்தும் அஜயன் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடம் இறக்கத்தை சம்பாதிப்பவர், குஞ்சிக்கெழு என்ற கதாபாத்திரத்தில் வீரமும், விவேகமும் நிறைந்த மனிதராக நடிப்பில் நிதானத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படி மூன்று கதாபாத்திரங்களுக்கும் தோற்றம் மூலமாக வெளிக்காட்டிய வேறுபாடுகளை விட, நடிப்பு மூலம் டோவினோ தாமஸ் வெளிக்காட்டியிருக்கும் வேறுபாடு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
நாயகிகளாக நடித்திருக்கும் கிரித்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லக்ஷ்மி என மூன்று பேரும் மூன்று காலக்கட்டங்களுக்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, அவர்களின் நடிப்பும் கதாபாத்திரத்தை போல் அளவாக அமைந்திருக்கிறது.
பசில் ஜோசப், ரோஹினி, ஹரிஷ் உத்தமன், நிஷ்தர் சையத், ஜெகதீஷ், பிரமோத் ஷெட்டி, அஜு வர்கீஸ், சுதீஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஒட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக மூன்று காலக்கட்டங்களை தனது பீஜியம் மூலமாக வேறுபடுத்தி காட்டியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜான் அழகான கேரள பகுதிகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் சமீர் மொஹமத், மூன்று கதாபாத்திரங்களையும், மூன்று காலக்கட்டங்களையும் நான் லீனர் முறையில் தொகுத்தாலும், ரசிகர்களுக்கு எந்தவித குழப்பமும் ஏற்படாத வகையில் மட்டும் இன்றி எந்த இடத்திலும் படம் தொய்வடையாதவாறு காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விக்ரம் மோர் மற்றும் பீனிக்ஸ் பிரபு, களரி சண்டைக் காட்சியை வடிவமைத்த பி.வி.சிவகுமார் குருக்கள் ஆகியோரது பணியும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. சலீம் லஹிரின் தலைமையில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளும் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.
ரமேஷ், அகரன் மற்றும் கைலாஷ் ஆகியோரது வசனங்கள் மிக எளிமையாகவும், சுருக்கமாகவும் இருந்தாலும், திரைக்கதைக்கு வலிமை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. குறிப்பாக மலையாள படம் பார்க்கிறோம் என்ற உணர்வே ஏற்படாத வகையில் தமிழ் வசனங்கள் இடம்பெற்றிருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.
அறிமுக இயக்குநர் ஜிதின் லால், ஒரு சிலையை வைத்துக்கொண்டு இரண்டரை மணி நேரம் பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விடுவதோடு, பாட்டி கதை சொல்ல ஆரம்பிக்கும் முதல் காட்சியிலேயே நம்மை கதைக்குள் பயணிக்க வைத்துவிடுகிறார்.
கதை சொல்லல் மற்றும் காட்சிப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நம்மை இருக்கையில் கட்டுப்போட்டு விடும் இயக்குநர், படத்தின் சில இடங்களில் அரசியல் பேசினாலும், அதை அளவாக கையாண்டு அனைத்து மக்களையும் ரசிக்க வைத்து மகிழ்விக்க வைத்ததில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘ஏ.ஆர்.எம்’ திரையரங்கில் பார்க்க கூடிய சிறப்பான காட்சி மொழி படைப்பு.
ரேட்டிங் 4.5/5