’அருவா சண்ட’ திரைப்பட விமர்சனம்
Casting : V.Raja, Malavika Menon, Aadukalam Naren, Saranya Ponvannan, Soundarrajan, Kanjsa Karuppu, Kadhal Sukumar
Directed By : Aadhiraajan
Music By : Dharankumar
Produced By : WSP White Screen Productions
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நாயகன் ராஜா சரியாக படிக்கவில்லை என்றாலும் கபடி விளையாட்டில் கெட்டிக்காரர். அவரது அம்மா சரண்யாவுக்கும் தன் மகன் பெரிய கபடி வீரராக உருவாகி சாதிக்க வேண்டும் என்பது கனவு. தனது அம்மாவின் கனவை நிறைவேற்றும் முயற்சியில் கடுமையாக உழைக்கும் நாயகனுக்கு, பணக்கார வீட்டு பெண்ணான நாயகி மாளவிகா மேனன் உதவி செய்கிறார்.
நாயகியின் உதவியால் கபடி வீரராக உயரத்தை தொடும் நாயகனுக்கு, அவர் மீது காதல் ஏற்பட, மாளவிகா மேனனும் அவரை காதலிக்கிறார். ஆனால், இவர்களது காதலுக்கு சாதி தடையாக வர, அந்த தடையை உடைத்து காதல் ஜோடி ஒன்று சேர்ந்ததா? இல்லையா?, நாயகன் அம்மாவின் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே ‘அருவா சண்ட’.
படத்தை தயாரித்திருப்பதோடு, நாயகனாகவும் நடித்திருக்கும் வி.ராஜா, தன்னால் முடிந்த வரை நடிக்க முயற்சித்திருக்கிறார். முதல் படம் என்பதால் அவரது நடிப்பில் இருக்கும் குறைகளை தவிர்த்துவிட்டு நிறைகளை மட்டும் பார்த்தால், அவர் தன் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்லலாம். கபடி விளையாடும் காட்சியில் கைதட்டல் பெறும் விதத்தில் நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மேனன், கதையோடு பயணிக்கும் வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். இறுதிக் காட்சியில் அவரது முடிவு சாதி வெறிப்பிடித்தவர்களுக்கு சவுக்கடியாக இருக்கிறது.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணனின் அனுபவ நடிப்பு கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது. தனது கனவை நிறைவேற்றாத மகனின் கனவை அவர் நிறைவேற்றும் விதம் கலங்க வைக்கிறது.
நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் நரேன் சாதி வெறிப்பிடித்தவர்களை பிரதிபலிக்கும் வேடத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
செளந்தர்ராஜா, காதல் சுகுமார், கஞ்சா கருப்பு என மற்ற நடிகர்களும் கதைக்கான கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
சந்தோஷ் பாண்டியனின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், மக்களின் ஆக்ரோஷத்தை நேர்த்தியாக படமாக்கியிருப்பதோடு, கபடி விளையாட்டை இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
தரண்குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
சாதி பாகுபாட்டால் பாதிக்கப்படும் காதல் ஜோடியும், சிதையும் ஏழைகளின் கனவுகளையும் கதையாக்கி இயக்கியிருக்கும் இயக்குநர் ஆதிராஜன், நேர்த்தியான காட்சி அமைப்புகளினாலும், கூர்மையான வசனங்களினாலும் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
சாதி பற்றி பேசும் காதல் படங்கள் பல வந்திருந்தாலும், வித்தியாசமான க்ளைமாக்ஸ் மூலம் சாதி வெறிப்பிடித்தவர்களுக்கு சாட்டையடி கொடுத்து மெசஜ் சொல்லியிருக்கும் இயக்குநர் ஆதிராஜன், கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த அனைத்து தரப்பினருக்குமான பொழுதுபோக்கு படமாகவும் கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘அருவா சண்ட’ அனைவரையும் ரசிக்க வைக்கும்.
ரேட்டிங் 3/5