Dec 16, 2017 08:52 AM

‘அருவி’ விமர்சனம்

04b5ddd07086cf8bb028693c8ddd42a8.jpg

Casting : Athithi Balan

Directed By : Aditi Balan as aruvi, Lakshmi Gopalswami, Madhankumar Dhakshinamoorthy*

Music By : Bindhu Malini, Vedanth Bharadwaj

Produced By : SR Prakashbabu, S R Prabhu

 

குடும்பத்தார் கொடுக்கும் சுதந்திரத்தால் சந்தோஷமாக சுற்றி வரும் இளம் பெண் அதிதி, எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட, அதனால் அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தான் அருவி படத்தின் கதை.

 

ஒழுக்கமாக இருக்கும் அதிதிக்கு எப்படி எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டது என்பது ஒரு புறம் இருக்க, அவர் மீது அன்புகாட்டி வந்த குடும்பம் அதன் பிறகு அவரிடம் நடந்து கொள்ளும் விதமும், அதனால் வீட்டை விட்டு வெளியேறும் அதிதி, மக்களை எதிர்கொள்ளும் விதத்தை திரைக்கதையாக்கி இருக்கும் இயக்குநர், தற்போது டிவி-க்களில் ஒளிபரப்பாகி வரும் குடும்ப பிரச்சினை நிகழ்ச்சியை திரைக்கதையில் சேர்த்து படத்திற்கு பரபரப்பை கூட்டியிருக்கிறார்.

 

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பின்னணியை காரசாரமாக பேசுவது போல படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், அறிவுரை கூறும் படமாக அல்லாமல், பொழுதுபோக்கு படமாக இருக்க வேண்டும் என்பதில் ரொம்பவே கவனமாக இருந்திருக்கிறார். அதற்காக அவர் டிவியில் ஒளிபரப்பாகும் குடும்ப பிரச்சினை நிகழ்ச்சி பற்றி சொல்லியிருக்கும் விஷயங்களும், அந்த நிகழ்ச்சியில் அதிதி காட்டும் அதிரடியும் திரையரங்கில் சிரிப்பு சரவெடியாக இருக்கிறது.

 

இப்படத்தின் ஹீரோவாகவும், ஹீரோயினாகவும் நடித்துள்ள அதிதி பாலனுக்கு இது தான் முதல் படம். ஆனால், அவர் நடிப்பும், பாடி லேங்குவேச்சும் அவரை அனுபவம் வாய்ந்த நடிகையாக காட்டுகிறது. ஒட்டு மொத்த படத்தையும் தனது முதுகில் சுமக்கும் அதிதி, படம் முழுவது நிமிர்ந்து நிற்கிறார்.

 

ஒட்டு மொத்த திரையரங்கே, யாருப்பா அந்த பெண்? என்று கேட்கும் அளவுக்கு வார்த்தையாலும், நடிப்பாலும் விளாசும் அதிதி மட்டும் அல்ல, படத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்த நடிகர்கள் கூட இந்த ‘அருவி’ யை பார்ப்பவர்கள் பிரமிக்க செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் பயன்படுத்திய லைட்டிங்கும், அதிதிக்காக அவர் கையாண்ட வண்ணமும் படத்தோடு நம்மை ஒன்றிவிட செய்கிறது. பிந்து மாலினி - வேதாந்த் பரத்வாஜ் ஆகியோரது பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

 

யாருப்பா இந்த இயக்குநர்? என்று முதல் படத்திலேயே அனைவர் மனதிலும் கேள்வி எழுப்பியுள்ள அருண் பிரபு புருஷோத்தமன், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் எத்தகைய பிரச்சினைகளை சந்திப்பார், என்பதை சோகமும், விவேகமும் நிறைந்த திரைக்கதையாக மட்டும் அல்லாமல், நகைச்சுவை கலந்தும் சொல்லியிருக்கிறார். 

 

கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர் தேர்வு மற்றும் அவர்களது நடிப்பு, சாட்டையால் விளாசுவது போன்ற வசனங்கள், சோகத்திலும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் காட்சி அமைப்பு என்று விறுவிறுப்புக்கும், சுவாரஸ்யத்திற்கும் பஞ்சம் இல்லாமல் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்.

 

மொத்தத்தில், தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படங்கள் என்ற பட்டியல் தயாரித்தால் அதில் ’அருவி’ க்கு முக்கிய இடம் உண்டு.

 

ஜெ.சுகுமார்