Mar 19, 2025 04:43 PM

’அஸ்திரம்’ திரைப்பட விமர்சனம்

d17fddc63ae09d00597b6fed9e146f44.jpg

Casting : Shaam, Nira, Nizhalgal Ravi, Arul D.Shankar, Jeeva Ravi, JR Martin

Directed By : Aravind Rajagopal

Music By : Sundaramurthy KS

Produced By : Best Movies - Dhanashanmugamani

 

விசித்திரமான முறையில் நடக்கும் தொடர் தற்கொலைகளின் பின்னணியில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதை உணர்ந்து, அந்த வழக்கை விசாரிக்க விருப்பம் தெரிவிக்கிறார் காவல்துறை அதிகாரி ஷாம்.  உயர் அதிகாரி அவருக்கு அனுமதி வழங்க, சுமந்த் என்ற காவலரின் உதவியோடு தனது விசாரணையை தொடங்கும் ஷாமுக்கு எந்தவித துப்பும் கிடைக்காத நிலையில், கல்லூரி நண்பர் ஒருவர் அவரை சந்திக்கிறார். ஷாம் விசாரித்துக் கொண்டிருக்கும் தற்கொலை சம்பவங்கள் பற்றி இதுவரை தெரியாத பல தகவல்களை சொல்வதோடு, திடீரென்று அவரும், அவரை தேடி அங்கே வரும் மற்றொருவரும் அதே முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனால், காவல்துறையில் பெரும் பரபரப்பு ஏற்படுவதோடு, அந்த வழக்கில் இருந்து ஷாம் விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார். 

 

பணியில் இல்லை என்றாலும், தன்னை சுற்றி நடக்கும் தொடர் தற்கொலை சம்பவங்களுக்கும், அது பற்றிய சில தடயங்கள் மற்றும் தகவல்கள் தன்னை தேடி வருவதற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது, என்பதை கண்டுபிடிக்கும்  ஷாம், அதன் முழுமையான பின்னணியை கண்டுபிடிக்க முயலும் போது, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. அது என்ன? என்பதை நிமிடத்துக்கு நிமிடம் திக் திக் அனுபவம் கொடுக்கும் வகையில் சொல்வதே ‘அஸ்திரம்’.

 

காக்கி சீருடை அணியாத காவல்துறை அதிகாரியாக வலம் வந்தாலும், கம்பீரமான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கும் ஷாம், குழந்தை இல்லாத தனது மனைவிக்கு ஆறுதலும், தைரியமும் சொல்லிவிட்டு தனியாக நின்று வருந்தும் காட்சியில் அசத்தலான நடிப்பு மூலம் கைதட்டல் பெறுகிறார்.

 

கதாநாயகியாக நடித்திருக்கும் நிராவுக்கு திரைக்கதையில் முக்கிய பங்கு இல்லை என்றாலும், காவல்துறை அதிகாரி என்ற அடையாளத்தை தாண்டி, ஷாமின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அதில் ஏற்படும் இழப்புகளை ரசிகர்களிடம் கடத்துவதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்..

 

சுமந்த் என்ற கதாபாத்திரத்தில் காவலராக நடித்திருப்பவர் புதுமுகம் என்ற அடையாளமே தெரியாத வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார். திரைக்கதையின் மையப்புள்ளி கதபாத்திரத்தை மிக நேர்த்தியாக கையாண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

 

மனநல மருத்துவராக நடித்திருக்கும் நிழல்கள் ரவி, காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் அருள் டி.சங்கர், ஜீவா ரவி, ஜே.ஆர்.மார்டின் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது பணியை சிறப்பாக செய்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். 

 

இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. 

 

ஒளிப்பதிவாளர் கல்யாண் வெங்கட்ராமன், தற்கொலை தொடர்பாக ஷாம் விசாரிக்க தொடங்கியது முதலே திரைக்கதையில் இருக்கும் படபடப்பை ரசிகர்களிடத்திலும் கடத்திவிடுகிறார்.

 

பல கதாபாத்திரங்கள், அவர்கள் தொடர்புடைய பல திருப்பங்கள் திரைக்கதையில் இருந்தாலும், அனைத்தையும் பார்வையாளர்கள் எளிதியில் புரிந்துக் கொள்ளும்படியும், யூகிக்க முடியாதபடியும் காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் பூபதி ஜப்பான் மன்னனின் கதையை மட்டும் திரும்ப திரும்ப சொல்வதை தவிர்த்திருக்கலாம்.

 

எழுதி இயக்கியிருக்கும் அரவிந்த் ராஜகோபால், ஜப்பான் மன்னன் பற்றிய ஒரு கதையை வைத்துக் கொண்டு விறுவிறுப்பான மற்றும் சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். நாயகனை மட்டுமே பிரதானப்படுத்தாமல், வில்லன் மற்றும் மற்ற வேடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்ட திரைக்கதை படத்திற்கு மிகப்பெரிய பலம்.

 

வழக்கை விசாரிக்கும் நாயகனுக்கு, வில்லனே துப்பு கொடுப்பதும், அததற்கான காரணமாக சொல்லப்படும் பிளாஷ்பேக் மற்றும் அதைச்சார்ந்த திருப்பங்கள் யூகிக்க முடியாதபடி பயணிப்பதோடு, படத்தின் இறுதிக்காட்சி வரை அடுத்தது என்ன நடக்கும்  ? என்ற எதிர்பார்ப்போடும் படம் பார்க்க வைக்கிறது.

 

படத்தின் மையப்புள்ளியாக சொல்லப்படும் ஜப்பான் மன்னனின் கதையை பல கதாபாத்திரங்கள் திரும்ப திரும்ப சொல்வது மட்டும் சற்று சலிப்படைய செய்தாலும், அதை தவிர்த்துவிட்டு பார்த்தால் முழு படமும் சீட் நுணியில் உட்கார வைப்பது உறுதி.

 

மொத்தத்தில், ‘அஸ்திரம்’ நிச்சயம் ரசிகர்களை தாக்கும்.

 

ரேட்டிங் 3.5/5