Mar 14, 2020 07:58 AM

'அசுரகுரு’ விமர்சனம்

b41b1991839e851dd153913a79036534.jpg

Casting : Vikram Prabhu, Mahima Nambiar, Yogi Babu, Jegan

Directed By : A.Rajdheep

Music By : Ganesh Raghavendra

Produced By : JSB Sathish

 

ரயிலில் வரும் ரிசர்வ் வங்கியின் பல கோடி ரூபாயை கொள்ளையடிக்கும் விக்ரம் பிரபு, ஹவாலா பண மோசடி கும்பலிடம் இருந்தும் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடிக்கிறார். பிறகு வங்கி ஒன்றில் இருந்து பெரிய தொகையை கொள்ளையடிக்கிறார். ரிசர்வ் வங்கியின் பணத்தை தேடி காவல் துறையும், ஹவால கும்பல் தொலைத்த பணத்தை தேடி தனியார் துப்பறியும் நிபுணர் மகிமா நம்பியாரும் பயணிக்க, இவர்களிடம் விக்ரம் பிரபு சிக்கினாரா இல்லையா, அவர் எதற்காக கொள்ளையடிக்கிறார், என்பது தான் ‘அசுரகுரு’ படத்தின் கதை.

 

ஓடும் ரயிலில் குதிப்பது, ஓடும் காரில் கொள்ளையடிப்பது என்று அட்வெஞ்சர் ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கும் விக்ரம் பிரபு, அமைதியாகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறார். திருடிய பணத்தை பறிகொடுத்துவிட்டு அவர் துடிக்கும் காட்சியில் நடிப்பில் அசத்துகிறார்.

 

ஹீரோயினாக நடித்திருக்கும் மகிமா நம்பியாருக்கு கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரத்தோடு, வித்தியாசமான மேனரிசமும் கொடுப்பட்டிருக்கிறது. தனியார் துப்பறியும் நிபுணராகவும், தைரியமான பெண்ணாகவும் நடித்திருக்கும் மகிமா நம்பியார், சிகரெட்டை புகைக்க தெரியாமல் புகைப்பது, அப்பட்டமாக தெரிந்தாலும், அவர் சிகரெட் பிடிப்பது அழகோ அழகாக இருக்கிறது.

 

மகிமா நம்பியாரின் மேல் அதிகாரியாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.பி.சதிஷ், கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, இயல்பாகவும் நடித்திருக்கிறார். அவரை ஒரே இடத்தில் உட்கார வைத்து நடிக்க வைத்ததை தவிர்த்துவிட்டு, கூடுதலான காட்சிகள் கொடுத்திருக்கலாம்.

 

யோகி பாபு, ஜெகன் ஆகியோர் வரும் இடங்கள் சிரிக்க வைக்கிறது. சுப்புராஜ், நாகினீடு ஆகியோர் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திராவின் பாடல்கள், சிமோன் கிங்கின்  பின்னணி இசை. அனைத்தும் படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் கொள்ளையர்களாக இருந்தாலே, அதற்கு பின்னாள் ஒரே மாதிரியான காரணங்கள் தான் இருக்கும். அதாவது, அவர்கள் கொள்ளையடித்த பணத்தை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த படத்தில் அப்படி ஒரு ரூட்டை தவிர்த்துவிட்டு, வித்தியாசமான கரு ஒன்றை இயக்குநர் ஏ.ராஜ்தீப் பிடித்திருக்கிறார்.

 

கோடி கோடியாக கொள்ளையடித்தாலும், அந்த பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுத்து செலவு செய்யாத விக்ரம் பிரபு, அந்த பணத்தை மற்றவர்களுக்கும் கொடுக்க மாட்டார். இப்படி விசித்திரமான குணம் கொண்ட அவர், எதற்காக இப்படி கோடி கோடியாய் கொள்ளையடிக்கிறார், என்பதை இயக்குநர் ராஜ்தீப், சுவாரஸ்யமான திரைக்கதையோடும், விறுவிறுப்பான காட்சிகளோடும் சொல்லியிருக்கிறார்.

 

கதாநாயகியை கதையின் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரமாக சித்தரித்தாலும், அவரிடம் ஏற்படும் காதலை ஒரு சில நிமிடங்களில் சொல்லியிருக்கும் இயக்குநர், அதை அழகாக சொல்லியிருக்கிறார். குறிப்பாக சிகரெட் புகைக்கும் கதாநாயகியிடம், கதாநாயகன் வைக்கும் வேண்டுகோள் வித்தியாசமாகவும், புதுஷாகவும் இருக்கிறது.

 

நாம் ஏற்கனவே பார்த்த கதையாக இருந்தாலும், முற்றிலும் புதிய வடிவத்தோடு, வித்தியாசமான கதை நகர்த்தலோடும் உருவாகியிருக்கும் இந்த ‘அசுரகுரு’ ரசிகர்களுக்கு சிறப்பான பொழுதுபோக்கு படமாக உள்ளது.

 

ரேட்டிங் 3.5/5