’அசுரன்’ விமர்சனம்
Casting : Dhanush, Manju Warrier, Aadukalam Naren, Pasupathi, Ken, Teejey
Directed By : Vetri Maran
Music By : GV Prakash Kumar
Produced By : Kalaippuli S.Thanu
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘அசுரன்’ எப்படி என்று பார்ப்போம்.
தனுஷ் குடும்பத்திற்கும், ஆடுகளம் நரேன் குடும்பத்திற்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சினையில் தனுஷின் மூத்த மகன் கொலை செய்யப்பட, அதற்கு பழிவாங்குவதற்காக தனுஷின் இளைய மகனான கென், நரேனை கொலை செய்துவிடுகிறார். இதனால் தனுஷின் குடும்பத்தை வேறோடு அறுக்க நரேனின் ஆட்கள் கிளம்ப, அவர்களுக்கு காவல் துறையும் துணை போகிறது. அவர்களிடம் தப்பிக்க மகனுடன் காட்டில் பதுங்கும் தனுஷின் மறு உருவம் தெரிய வருவதோடு, அதுவரை வன்முறையை தவிர்த்து சமாதானத்தை நாடிய தனுஷ், தனது குடும்பத்திற்காக மீண்டும் கத்தியை கையில் எடுக்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் அத்தனையும் அதிரடி நிறைந்த சரவெடியாக திரையில் விரிகிறது.
வெக்கை நாவல் எந்த அளவுக்கு பரபரப்பாக இருக்குமோ அதைப்போலவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், வெக்கை நாவலை முழுமையாக படமாக்காமல், அதன் அடிநாதத்தை, தனது கற்பனை கதையுடன் சரியான புள்ளியில் இணைத்து ஒரு முழுமையான மண் சார்ந்த படத்தையும், அதன் மூலம் வன்முறை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
40 க்கு மேற்பட்ட வயதுடைய கதாபாத்திரத்தில் தனுஷ் கச்சிதமாக பொருந்தி போகிறார். தனது பாடி லேங்குவேச் மற்றும் கண் மூலம் சின்னசாமி என்ற கதாபாத்திரத்தை நம்முள் கடத்திவிடுபவர், இளம் வயது தோற்றத்தில் காட்டும் வீரியம் மூலம் நம்மை மெய்சிலிரிக்க வைத்துவிடுகிறார்.
தனுஷின் மனைவியாக வரும் மஞ்சு வாரியர், திருநெல்வேலி தமிழ் பேச சில இடங்களில் கஷ்ட்டப்பட்டிருந்தாலும் கரிசல் மண்ணின் பெண்ணாக மனதில் ஒட்டிக்கொள்கிறார். தனுஷின் மூத்த மகனாக நடித்திருக்கும் டிஜே அருணாசலமும், இளைய மகனாக நடித்திருக்கும் கென் கருணாஸும், கதாபாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமான தேர்வாக இருக்கிறார்கள்.
வழக்கறிஞராக வரும் பிரகாஷ்ராஜ், பசுபதி, போலீஸ் இன்ஸ்பெக்டரான இயக்குநர் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன் என அனைத்து நடிகர்களும் மண் சார்ந்த மக்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆக்ஷன் காட்சிகளில் வீசப்படும் வெடிகுண்டின் சத்தம், ஆக்ஷன் காட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட பின்னணி இசை, தனுஷ் காட்டில் பதுங்கி செல்வது என்று அனைத்து ஏரியாவிலும் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை மிரட்டல்.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் நம்மையும் கோவில்பட்டியில் பயணிக்க வைத்துவிடுகிறார். பறந்து விரிந்த காட்டுக்குள் தனுஷ் சுற்றி திரியும் போது நாமும் ஏதோ காட்டுக்குள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இவரது ஒளிப்பதிவு ஒரு முழுமையான பீரியட் படம் பார்த்த அனுபவத்தையும் கொடுக்கிறது.
பீட்டர் ஹெய்னின் ஆக்ஷன், ஆர்.ராமரின் படத்தொகுப்பு, ஜாக்கியின் கலை, பெருமாள் செல்வத்தின் உடை வடிவமைப்பு என அனைத்துமே படத்தை வேறு ஒரு உயர்த்திற்கு எடுத்துச் செல்லும் விதத்தில் அமைந்திருக்கிறது.
வெற்றிமாறனின் பெஸ்ட் படம் என்று சொல்லும் அளவுக்கு படம் தொடங்கியதில் இருந்து முடிவு வரை, படு பரபரப்பாக நகர்கிறது. அதிலும், நரேனை கென் வெட்டிய பிறகு வேகம் எடுக்கும் படம், தனுஷ் கத்தி எடுக்கும் போது பரபரப்பின் உச்சத்திற்கே சென்றுவிடுகிறது.
தலித் மக்களின் பஞ்சமி நிலங்களை மேல்தட்டு மக்கள் பறித்துக்கொண்டனர் என்பதை தைரியமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், ஜாதி பிரிவினை குறித்து அளவோடு பேசினாலும் அதை அழுத்தமாகவும், நியாயமாகவும் பேசியிருக்கிறார்.
நிலம் ஒவ்வொரு மனிதனின் உரிமை, அதை பறிக்க நினைத்தால் எதிர்த்து போராட வேண்டும், என்று சொல்லும் இயக்குநர் வெற்றிமாறன், வன்முறை காட்சிகளோடு கதையை நகர்த்தினாலும், படம் முழுவதும் வன்முறை வேண்டாம், என்பதையும் அழுத்தமாகவே வலியுறுத்தி வருகிறார்.
மொத்தத்தில், ‘அசுரன்’ அதிரடி நிறைந்த சரவெடியாக இருக்கிறது.
ரேட்டிங் 4.5/5