Jun 28, 2018 08:35 PM

‘அசுரவதம்’ விமர்சனம்

885b89bdeb48a7ac5cfa4e7a10969c1f.jpg

Casting : Sasikumar, Nandhitha Swetha, Vasumithran

Directed By : Marudhupandiyan

Music By : Govind Menon

Produced By : Seven Screen Studios

 

‘பிரம்மன்’, ‘தாரை தப்பட்டை’, ‘வெற்றிவேல்’, ‘கிடாரி’, ‘பலே வெள்ளையத்தேவா’, ‘கொடிவீரன்’ என்று வரிசையாக தோல்விப் படங்களை கொடுத்து வரும் சசிகுமாரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்த ‘அசுரவதம்’ அவரது தோல்விப் பயணத்திற்கு முற்றுப் புள்ளி வைக்குமா என்பதை பார்ப்போம்.

 

வில்லனால் பாதிக்கப்படும் சசிகுமார், அந்த வில்லனை சித்ரவதை செய்து கொலை செய்யும், பழிவாங்கும் கதை தான் இந்த ‘அசுரவதம்’ படத்தின் ஒன்லைன்.

 

மளிகை கடை வைத்திருக்கும் வசுமித்ரனை சசிகுமார் போனில், உன்னை கொலை செய்துவிடுவேன், என்று மிரட்டுகிறார். பிறகு அவருக்கு எப்போதும் சாவு பயத்தை காட்டுவது போல ஷாக் ட்ரீட்மெண்ட்டுகளை கொடுப்பவர் நேரடியாகவே அவரை கொலை செய்யவும் முயற்சிக்கிறார். அதில் இருந்து எஸ்கேப் ஆகும் வசுமித்ரன், பாதுகாப்புக்காக ஆட்களை சேர்த்துக்கொண்டு சசிகுமாரை எதிர்க்க, அவரோ ஒட்டு மொத்த கூட்டத்தையும் ஒரே ஆளாக விரட்டியடிக்கிறார். இதன் பிறகு போலீஸ் ஒருவரிடம் வசுமித்ரன் உதவி கேட்க, அந்த போலீஸ்காரர் விரிக்கும் வலையில் சசிகுமார் சிக்கினாரா இல்லையா, வசுமித்ரனை கொன்றாரா இல்லையா, சசிகுமாரின் இந்த பழிவாங்கும் படலத்தின் பின்னணி என்ன, என்பது தான் ‘அசுரவதம்’ படத்தின் மீதிக்கதை.

 

சமூகத்தில் நடக்கும் ஒரு பிரச்சினையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், அந்த பிரச்சினைப் பற்றி விரிவாக பேசாமல், சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இப்படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் மருதுபாண்டியன், முதல்பாதி முழுவதும் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு, இரண்டாம் பாதியில் அதை மெயிண்டெய்ன் பண்ண ரொம்பவே கஷ்ட்டப்பட்டிருக்கிறார்.

 

படத்திற்கு படம் நட்பு, பாசம், குடும்ப உறவுகள் பற்றி பேசி வரும் சசிகுமாருக்கு இந்த படம் புதிய முயற்சி தான். இந்த படத்திலும் குடும்ப உறவு என்ற எப்பிசோட் இருந்தாலும், அது தான் படத்தின் முக்கிய அம்சமாக இருந்தாலும், அதை ஊறுகாய் அளவுக்கு காட்டியிருக்கும் இயக்குநர் படம் முழுவதும் சசிகுமாரை ஆக்‌ஷன் மோடிலே வைத்திருக்கிறார். பெரிய அளவில் வசனங்கள் இல்லை என்றாலும், பெருஷாக எதையோ சொல்லப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பையும், அது என்னவாக இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பையும் படத்தின் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை ரசிகர்களிடம் திரைக்கதை மட்டும் இன்றி, சசிகுமாரின் நடிப்பும் ஏற்படுத்துகிறது.

 

வில்லனாக நடித்திருக்கும் வசுமித்ரன், எந்தவித இமேஜும், எந்தவித அடையாளமும் இன்றி ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார். உயிர் பயம் என்றால் என்ன? என்பதை தனது நடிப்பின் மூலம் பல இடங்களில் காட்டியிருப்பவர், சில காட்சிகளில் கொஞ்சம் ஓவராகவும் நடித்திருக்கிறார்.

 

நந்திதா தான் படத்தின் ஹீரோயின், ஆனால் அவரைப் பற்றி சொல்ல படத்தில் ஒன்னும் இல்லை. அவரைப் பற்றி மட்டும் அல்ல, படத்தில் நடித்திருக்கும் சசிகுமார், வசுமித்ரன் இருவரையும் தவிர, மற்ற 6 கதாபாத்திரங்கள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. காரணம் மொத்த படமும் இரண்டு கதாபாத்திரங்களை சுற்றியே நகர்கிறது.

 

சசிகுமார், வசுமித்ரனை கொலை செய்ய முயற்சிக்க, சசிகுமாரை யார் என்றே அறியாத வசுமித்ரன் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள அவரிடம் இருந்து பல முறை தப்பித்து ஓடும்போது, நிச்சயம் ஒரு பிளாஷ் பேக் இருப்பது நமக்கு தெரிந்து விடுகிறது. அது என்னவாக இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பை படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரசிகர்களிடம் இயக்குநர் மருதுபாண்டியன் ஏற்படுத்தினாலும், சில காட்சிகளுக்கு பிறகு, ஒரே காட்சியை திரும்ப திரும்ப பார்ப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்தி விடுகிறார்.

 

பாட்டு, காமெடி, தேவையில்லாத கதாபாத்திரங்களின் வசனம் என்று எந்த கூடுதல் பிட்டிங்கும் இல்லாமல் டைடிலுக்கு முன்னாடியே நம்மை கதைக்குள் அழைத்துச் செல்லும் இயக்குநர், சின்ன விஷயத்தை பெரிய விஷயமாக சித்தரிப்பதற்காக திரைக்கதையை பரபரப்பாக அமைத்திருந்தாலும், சசிகுமார் - வசுமித்ரன் என்ற இரண்டு கதாபாத்திரங்களை வைத்தே கதை பயணிப்பதால் பரபரப்பான காட்சிகள் கூட ஏதோ ஆமை வேகத்தில் நகர்வதை போல தோன்றுகிறது.

 

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும், கோவிந்த் மேனனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறது. 

 

படத்தில் மொத்தமே 8 கதாபாத்திரங்கள் தான் நடித்திருக்கிறார்கள். அந்த 8 கதாபாத்திரங்களில் சசிகுமார், வசுமித்ரன் இவர்கள் இரண்டு பேரை தவிர மற்ற கதாபாத்திரங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இது திரைக்கதை யுக்தி என்று எடுத்துக்கொண்டாலும், இந்த யுக்தி மூலம் படம் ஓரளவுக்கு மேல் போரடிக்க ஆரம்பித்துவிடுகிறது. பிறகு பிளாஷ்பேக் ஓப்பன் ஆன உடன் என்ன நடந்திருக்கும் என்றும் ரசிகர்கள் யூகித்து விடுகிறார்கள்.

 

அதேபோல், படத்தின் ஆரம்பத்தில் இருந்தே வில்லனை சுற்றி வரும் சில வசனங்களில், பாலியல் சம்மந்தப்பட்டிருப்பதால், கதையின் பின்னணியும் பாலியல் சம்மந்தமாக தான் இருக்கும் என்றும் யூகித்துவிட முடிகிறது.

 

வசுமித்ரனுக்கு சசிகுமார் கொடுக்கும் டார்ச்சர்களின் போது, அவர் மீது நமக்கு லேசாக பரிதாபம் ஏற்பட்டாலும், அவரை சசிகுமார் கொலை செய்வதற்கான காரணத்தை சொல்லும் போது, இதைவிட இன்னும் அதிகமாக அவரை டார்ச்சர் செய்து கொலை செய்ய வேண்டும், என்ற எண்ணம் தோன்றுகிறது. அப்படி அவர் என்ன செய்தார் என்பதும், அந்த விஷயத்தை இயக்குநர் கையாண்ட விதமும் தான் இப்படத்தின் பலம். அதே போல், வசுமித்ரனால் சசிகுமார் மட்டும் அல்ல மேலும் பல பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும், வசுமித்ரன் போன்றவர்கள் இதுபோன்ற தவறுகளை திரும்ப திரும்ப செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும், ஒரே காட்சியின் மூலம், எந்தவித வசனமும் இல்லாமல் சொல்லியிருக்கும் விதம் சபாஷ் சொல்ல வைக்கிறது.

 

இப்படி கிளைமாக்ஸில் வரும் ஒரு குறிப்பிட்ட எப்பிசோட் மட்டுமே படத்தை ஒரு முறை பார்க்கலாம், என்று சொல்ல வைக்கிறதே தவிர, மற்றபடி படம் என்னவோ ரொம்ப டிரையாக தான் இருக்கிறது.

 

மொத்தத்தில், ‘அசுரவதம்’ என்ற தலைப்புக்கு ஏற்ற படமாக இருந்தாலும், கருவுக்கான கதையை சொல்லும் படமாக இல்லை. 

 

ரேட்டிங் 2 / 5