‘அவளுக்கென்ன அழகியமுகம்’ விமர்சனம்
Casting : Poovarasan, Anupama Prakash, Yogi Babu, Poser Star Srinivasan
Directed By : A.Kesavan
Music By : DAVID SHOWRRN
Produced By : M.S.KATHIRAVAN
எம்.எஸ்.கதிரவன் தயாரிப்பில், முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகியுள்ள ‘அவளுக்கென்ன அழகியமுகம்’ எப்படி என்பதை பார்ப்போம்.
காதலில் தோல்வியடைந்த மூன்று பேர், பிரிந்த காதலர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ண, அந்த நேரத்தில் காதலில் தோல்வியடைந்த ஹீரோ பூவரசனை சந்திக்கிறார்கள். தங்களைப் போல வேறு யாரும் காதலில் தோல்வியடைய கூடாது, என்று கருதும் அந்த மூன்று பேரும், எப்படியாவது ஹீரோவின் காதலை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக, பூவரசனின் காதலியை தேடி செல்கிறார்கள். செல்லும் வழியில் மூவரும் தங்களது காதல் கதையையும், அது தோல்வியில் முடிந்த கதையையும் சொல்ல, இறுதியில் ஹீரோ பூவசரன் தனது காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா, என்பது தான் ‘அவளுக்கென்ன அழகியமுகம்’ படத்தின் மீதிக்கதை.
இளைஞர்களை கவரும் விதத்தில் இளைமை துள்ளலோடு திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் காதல் பிளஸ் காமெடி என்று படத்தை ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார்.
ஹீரோ பூவரசன் தோற்றத்தில் இருக்கும் இளமையை நடிப்பிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி அனுபமா பிரகாஷ், பார்த்த உடனே காதல் தீயை பற்ற வைக்கும் அளவுக்கு அழகாக இருக்கிறார். ஹீரோவின் நண்பர்களாக நடித்தவர்களும், அவர்களின் காதலிகளாக நடித்தவர்களும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
யோகி பாபு, வரும் காட்சிகள் குறைவு என்றாலும், காமெடி ரொம்பவே அதிகமாக இருக்கிறது. கூட பவர் ஸ்டார் சீனிவாசனும் தனது பங்குக்கு தனது கோமாளித்தன நடிப்பால் நம்மை சிரிக்க வைக்கிறார்.
எளிமையான கதை என்றாலும், அதை திரைக்கதையாக்கிய விதத்தில் காதலையும், காமெடியையும் சேர்த்து இளைஞர்களுக்கான ஒரு படத்தை இயக்குநர் ஏ.கேசவன் கொடுத்திருக்கிறார். இளைஞர்களை டார்க்கெட் செய்து திரைக்கதை எழுதப்பட்டிருந்தாலும், எந்தவித நெருடலும் இல்லாமல் அனைத்து தரப்பினரும் பார்க்கும்படி காட்சிகளை கண்ணியமான முறையில் கையாண்டிருக்கும் இயக்குநர், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்.
டேவிட் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளது. பின்னணி இசையும் ஓகே தான். நவநீதனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, நான்கு காதல் கதைகளையும் வெவ்வேறு லைட்டிங்கில் காட்டியிருப்பது ரசிக்கும்படி உள்ளது.
படத்தில் நடித்தவர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள் என்றாலும் அவர்களை கையாண்ட விதம், படம் முழுவதும் காதல் மற்றும் காதல் தோல்வியை சுற்றியே காட்சிகள் நகர்த்தப்பட்டாலும், சுவாரஸ்யமான திரைக்கதையும், புதுவிதமான காட்சிகளும் படத்தை ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில், ‘அவளுக்கென்ன அழகியமுகம்’ இளைஞர்களுக்கான படம்.
ரேட்டிங் 3/5