Jan 25, 2023 09:17 AM

’அயலி’ இணையத் தொடர் விமர்சனம்

3651a5d0f042c8385e2a5abdede4fc31.jpg

Casting : Abinayashree, Anumol, ARUVI Madhan, Lingaa, Singampuli, TSR Srinivasamoorthy, Lovelyn, Gayathri, Thara, Melodi, Pragadheeswaran

Directed By : Muthu Kumar

Music By : Revaa

Produced By : Kushmavathi

 

பெண் பருவமெய்திய சில மாதங்களிலேயே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும், என்ற கட்டுப்பாடு கொண்ட கிராமம் வீரபண்ணை. இந்த கட்டுப்பாட்டினால் அந்த கிராமத்தில் எந்த ஒரு பெண்ணும் 9ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத சூழலில், 8ம் வகுப்பு மாணவி அபிநயஸ்ரீ, நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அவரது ஆசை நிறைவேறாது என்று சக தோழிகள் சொல்ல, தனது கிராமத்து பழக்க வழக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை தகர்ந்தெரிந்து தனது இலக்கை நோக்கி முன்னேறுவதில் அபிநயஸ்ரீ முனைப்பு காட்டுகிறார்.

 

அபிநயஸ்ரீ நினைத்தது  போல் படித்தாரா? இல்லையா? அவரது செயல்பாடுகளினால் அந்த கிராமத்தில் மாற்றம் ஏற்பட்டதா? இல்லையா? என்பதை கலாச்சாரம், பழைய காலத்து பழக்க வழக்கங்கள் போன்ற கட்டமைப்புகளால் முடக்கி வைக்கப்பட்ட பெண்களுக்கு மட்டும் இன்றி பிற்போக்கு சிந்தனையோடு இருக்கும் அனைவருக்கும் முற்போக்கு சிந்தனைகளை புகட்டும் விதமாக சொல்லியிருப்பதே ‘அயலி’.

 

கதை 1990ம் காலக்கட்டத்தில் நடக்கிறது. அந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு இப்படியான கட்டுப்பாடுகள் சகஜம் என்றாலும், தற்போதைய 21ம் நூற்றாண்டிலும் பெண்கள் பல வகைகளில் ஒடுக்கப்படுகிறார்கள், என்பதை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள்.

 

கதை பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்தாலும், திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள், ஒட்டு மொத்த சமூகத்தின் மீது இருக்கும் குறையை சுட்டிக்காட்டி, அதை களைய வேண்டும் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

 

குறிப்பாக, பெண் பருவமெய்தலை வைத்துக்கொண்டு சடங்கு, சம்பிரதாயம் என்று இன்னும் பழமையோடு வாழும் மக்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கும் இயக்குநர், எவ்வளவு சாதாரணமான ஒரு விஷயத்தை மூட நம்பிக்கையால் எவ்வளவு பெரிய விஷயமாக்கி மக்களை முட்டாளாக்குகிறார்கள், என்பதையும் புரிய வைத்திருக்கிறார். இப்படி படத்தில் இடம்பெறும் காட்சிகளும், வசனங்களும் மூட நம்பிக்கையில் மூழ்கியிருப்பவர்களின் மனதை மாற்றும்படியும், கொண்டாடும்படியும் இருக்கிறது.

 

தமிழ்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநயஸ்ரீ, தனது லட்சியத்தை நோக்கி தைரியமாக பயணிப்பதும், இடையில் வரும் தடைகளை தனது குழந்தை தனத்தோடு தகர்த்தெறிந்து தொடர் வெற்றி பெறுவது, என்று அந்த கதாபாத்திரமாக நம் மனதில் பதிந்து விடுகிறார். சட்டையில் இருக்கும் சிவப்பு வண்ணத்தை பார்த்து அதிர்ச்சியடைபவர்களுக்கு “இங்கு” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு கடந்து போவதும், “இங்குனு சொன்னா நம்புறானுங்க, முட்டாளுங்க” என்று அசால்டாக வசனம் பேசும் இடங்களில் கைதட்டல் பெறுகிறார்.

 

தமிழ்செல்வியின் அம்மாவாக நடித்திருக்கும் அனுமோல், காலம்காலமாக கனவுகளை மறைத்து கணவனுக்கு நல்ல மனைவியாக இருந்தால் போதும் என்று வாழ்ந்து வரும் பெண்களை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் தனது மகளின் செயலுக்கு பயப்படுபவர் பிறகு அவருக்கு ஆதரவாக களத்தில் இறங்கி கேட்கும் கேள்விகள் அனைத்தும் நெத்தியடி.

 

தமிழ்செல்வியின் அப்பாவாக நடித்திருக்கும் அருவி மதன், பாசக்கார தந்தையாக நடித்தாலும், பழக்க வழக்கங்களை மாற்ற நினைக்க கூடாது என்று சொல்லும் இடத்தில் பெண்களை ஒடுக்கும் குணம் கொண்ட ஆண் திமிரை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் லிங்கா, எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தி அசத்தி விடுகிறார். மக்களை எப்படி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு அரசியல் செய்ய வேண்டும் என்பதை தனது வேடத்தின் மூலம் மிக தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறார்.

 

சிங்கம்புலி, வாத்தியார் வேடத்தில் நடித்திருக்கும் டி.எஸ்.ஆர்.சீனிவாசமூர்த்தி ஆகியோர் வரும் காட்சிகள் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும், சிங்கம்புலி சீனிவாசமூர்த்தியை கலாய்க்கும் இடங்களில் சிரிக்க தெரியாதவர்கள் கூட சிரித்து விடுவார்கள்.

 

காயத்ரி, லவ்லின், தாரா, பிரகதீஷ்வரன் என தொடரில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும், நடிகைகளும் கிராமத்து மக்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். 

 

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லக்‌ஷ்மி பிரியா சந்திரமெளி மற்றும் பக்ஸ் பகவதி வரும் காட்சிகள் கூட கவனம் பெறும் வகையில் இருப்பது தொடரின் கூடுதல் பலம்.

 

வீரபண்ணை கிராமத்தையும், மக்களையும் மிக இயல்பாக படமாகியிருக்கும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி, காட்சிகளுடன் பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கிறார்.

 

ரேவாவின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசை கதைக்கு ஏற்ற பயணித்திருப்பதோடு, காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

வீணை மைந்தன், சச்சின் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருக்கிறார்கள். பெண் கல்வியை மையப்படுத்திய ஒரு கதையை 8 பாகங்களாக மிக சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருப்பதோடு, அதை சுவாரஸ்யமாக நகர்த்தியும் சென்ற இவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். அதிலும், வசனங்கள் அனைத்தும் பகுத்தறிவு சிந்தனையோடு இருக்கிறது.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் முத்துக்குமார், பெண் கல்விக்கு ஆதரவாக பேசினாலும், அதை வைத்துக்கொண்டு ஒட்டு மொத்த சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி அவற்றுக்கு தீர்வும் சொல்லியிருக்கிறார். 

 

கடவுளை வைத்து மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களை முட்டாளாக்கி ஆதாயம் தேடுபவர்களை தோலுறித்திருக்கும் இயக்குநர் முத்துக்குமார், ஒவ்வொரு பகுதிகளையும் சிந்திக்கும்படி மட்டும் இன்றி சிரிக்கும்படியும் இயக்கியிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘அயலி’ அனைவரும் பார்க்க வேண்டிய இணையத் தொடர்.

 

ரேட்டிங் 4.5/5