Jul 13, 2023 10:59 AM

’பாபா பிளாக் ஷீப்’ திரைப்பட விமர்சனம்

07d64c2a0643080386336e85beee0ff0.jpg

Casting : Suresh Chakravarthi, Abhirami, Vinodhini Vaidynathan, Rj Vigneshkanth, Ammu Abhirami, Bose Venkat, Harshath Khan, Adhirchi Arun, Subbu Panchu, Abdul Ayaz, Narendra Prasad, Madurai Muthu, Settai Sheriff, Ram Nishanth, Vishwanath Sharma, Kutty Vino

Directed By : Rajmohan Arumugam

Music By : Santhosh Dhayanidhi

Produced By : Romeo Pictures - Raahul

 

2k கிட்ஸ் என்று சொல்லப்படும் 2000-ம் ஆண்டு காலகட்ட பள்ளி மாணவர்களின்  வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள கதை, வழக்கமான மாணவர்களின் சேட்டை, மோதல், காதல் என்று பயணிக்கிறது. இதற்கிடையே, மாணவர்கள் கையில் ஒரு கடிதம் கிடைக்கிறது. அந்த கடிதத்தில், மாணவர் ஒருவர் தான் தற்கொலை செய்துக்கொள்ள இருப்பதாக எழுதியிருக்கிறார். பெயர் உள்ளிட்ட விவரம் எதுவும் இல்லாத அந்த கடிதம் எழுதிய மாணவரை கண்டுபிடித்து, அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் சக மாணவர்கள் அதை எப்படி செய்தார்கள், அவர் எதற்காக தற்கொலை முடிவு எடுத்தார், என்பதை அளவான அட்வைஸோடு, அதிகமான கலகலப்போடும் சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘பாபா பிளாக் ஷீப்’.

 

அனைவரும் பள்ளி வாழ்க்கையை கடந்து வந்திருப்பது மட்டும் இன்றி, பள்ளி வாழ்க்கையை மையப்படுத்திய பல திரைப்படங்களையும் கடந்து வந்திருக்கிறோம். அவற்றில் சில படங்கள் மட்டுமே மாணவர்கள் மனதிலும், மக்கள் மனதிலும் இடம் பிடிக்கும். அப்படி ஒரு படமாக இந்த படம் இருக்கிறதா? என்று பார்ப்போம்.

 

வகுப்பறைக்கு கைப்பேசி எடுத்துச் செல்லும் காலகட்டத்தை சேர்ந்த 2k கிட்ஸ்களின் பள்ளி வாழ்க்கையும், அதற்கு முந்தைய காலக்கட்ட பள்ளி வாழ்க்கையும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. இவர்கள் கையில் கைப்பேசி, அவர்கள் கையில் அது இல்லை, என்பது மட்டுமே வித்தியாசமே தவிற மற்றபடி படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்தும் அதே பழைய பாணியில் தான் பயணிக்கிறது.

 

மாணவர்கள் இடையே ஏற்படும் மோதல், அவர்களின் சேட்டை, அளவாக கையாளப்பட்டுள்ள காதல் ஆகியவை ஏற்கனவே நாம் பல படங்களில் பார்த்தது மட்டும் இன்றி, பழைய பாணியிலேயே இருப்பதால் நம்மை பெரிதாக ஈர்க்கவில்லை.

 

முதல் பாதி முழுவதும் பழைய பாணியில் பயணித்தாலும், திடீரென்று பறந்து வரும் அந்த தற்கொலை கடிதம் நம் கவனத்தை சட்டென்று ஈர்ப்பதோடு, அதை தொடர்ந்து வரும் நடிகை அபிராமியின் கதாபாத்திரம் மற்றும் பள்ளி மாணவியான அவரது மகளின் மரணம் ஆகியவை, இயக்குநர் ராஜ்மோகன் ஆறுமுகம் ஏதோ பெரிய விஷயத்தை பற்றி பேசப்போகிறார், என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், எதிர்பார்த்த சில நிமிடங்களிலேயே இயக்குநர் நமக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், அந்த பகுதியை பலம் இல்லாமல் சொல்லி முடித்துவிடுகிறார்.

 

சர்ச்சை விஷயங்களை தொடாமல் திரைக்கதையை கையாள நினைத்திருக்கும் இயக்குநர் ராஜ்மோகன் ஆறுமுகம், மாணவர்களுக்கு அளவாக அறிவுரை சொல்லி, காமெடியாக படத்தை நகர்த்தி செல்லலாம் என்று முடிவு செய்திருக்கிறார். ஆனால், அதையும் ஒரு திரைப்படமாக அல்லாமல் யுடியுப் வீடியோ போல் காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.

 

மாணவர்கள் அறிமுகம், அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்களில் இடம்பெறும் வசனங்கள், ஆசிரியர்கள் பேசும் நகைச்சுவை வசனங்கள் மற்றும் கடைசி பெஞ்ச் மாணவர்களின் குமுறல் உள்ளிட்ட அனைத்துமே அக்மார்க் யுடியுப் வீடியோ போல் இருப்பதால் இயக்குநர் ராஜ்மோகன், இதை படமாக எடுக்காமல் யுடியுப் தொடராக எடுத்திருக்கலாம்.

 

இப்படி முழு படத்தையும் யுடியுப் வீடியோவாக எடுத்திருந்தாலும், மாணவர்களின் தற்கொலை அல்லது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தால் பாதிக்கப்படும் மாணவர்கள், எந்த விஷயமாக இருந்தாலும் சக மாணவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும், என்ற ஒரு விஷயம் மட்டுமே நம் மனதை தொடுகிறது. ஆனால், இந்த ஒரு விஷயத்திற்காக முழு படத்தையும் பாராட்ட மனம் வரவில்லை.

 

பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ஹர்ஷத் கான், அதிர்ச்சி அருண், அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், சேட்டை ஷெரிப், ராம் நிஷாந்த், குட்டி வினோ என அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான  தேர்வாக இருப்பதோடு, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

 

பள்ளி ஆசிரியர்களாக நடித்திருக்கும் மதுரை முத்து, போஸ் வெங்கட், வினோதினி மற்றும் அபிராமி ஆகியோர் சொல்லிக் கொடுத்ததை சொதப்பாமல் செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசன், கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, பாடல் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார்.

 

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைத்தாலும், எங்கேயோ கேட்டது போல் நினைக்க வைக்கிறது. பின்னணி இசை பல காட்சிகளுக்கு பலமாகவும், சில காட்சிகளுக்கு பலவீனமாகவும் உள்ளது.

 

படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி, “சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்” என்ற ரீதியில் என்ன இருந்ததோ, அதை வைத்து வேலை செய்திருக்கிறார்.

 

இயக்குநர் ராஜ்மோகன் ஆறுமுகம் திறமையான பேச்சாளர் மட்டும் இன்றி நகைச்சுவையாக எழுதக்கூடிய வல்லமை படைத்தவர் என்பது வசனங்களில் தெரிகிறது. ஆனால், அதை சினிமா மொழியுடன் சரியான முறையில் இணைத்து சுவாரஸ்யமான திரைப்படமாக கொடுக்க தவறியிருப்பதை மறுக்க முடியாது.

 

மொத்தத்தில், 2000-ம் ஆண்டு காலகட்ட பள்ளி மாணவர்களின் வாழ்க்கை கதைக்கு, 17 ஆம் நூற்றாண்டில் அறிமுகமான பள்ளி பாசுரத்தை தலைப்பாக தாங்கி வந்திருக்கும் இந்த  ‘பாபா பிளாக் ஷீப்’ கருப்பு ஆடு மட்டும் அல்ல பழைய ஆடு.

 

ரேட்டிங் 3/5