’பேச்சுலர்’ (Bachelor) விமர்சனம்
Casting : GV Prakash Kumar, Dviyabharathi, Bhagavathi Perumal, Mysskin, Munishkant
Directed By : Sathish Selvakumar
Music By : Siddhu Kumar, Dhibu Ninan Thomas, AH Kaashif
Produced By : G.Dillibabu
பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஜி.வி.பிரகாஷும், திவ்யபாரதியும் ஒரே வீட்டில் தங்குகிறார்கள். நண்பர்களாக பழகும் இருவரும் நெருக்கமாக பழக தொடங்குவதோடு உடலுறுவிலும் அடிக்கடி ஈடுபட, திவ்யபாரதி கர்ப்பமடைந்து விடுகிறார். ஜிவி பிரகாஷ்குமார் கருகலைப்பு செய்துவிடலாம் என்று கூற, திவ்யபாரதியோ குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார். இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் ‘பேச்சுலர்’ (Bachelor) படத்தின் கதை.
பேச்சுலர் வாழ்க்கையோடு, பெங்களூர் இளைஞர்களின் வாழ்க்கையையும் சேர்த்து முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான ஒரு படமாக இயக்குநர் சதிஷ் செல்வகுமார் கொடுத்திருக்கிறார்.
நடிப்பு மற்றும் தோற்றம் இரண்டிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கும் ஜிவி பிரகாஷ்குமார், குறைவான வசனங்கள் பேசினாலும், முக பாவனைகள் மூலமாகவே பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் திவ்யபாரதி, முதல் படத்திலேயே மிக அழுத்தமான கதாப்பாத்திரத்தை திறம்பட கையாண்டு பாராட்டு பெறுகிறார். பல இடங்களில் ஜி.வி.பிரகாஷையே மிஞ்சும் திவ்யபாரதி, தனது நடிப்பு மூலம் கைதட்டல் பெறுகிறார்.
பகவதி பெருமாள் உள்ளிட்ட ஜி.வி.பிரகாஷ்குமாரின் நண்பர்களாக நடித்த நடிகர்கள் அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். முனிஷ்காந்த், இயக்குநர் மிஷ்கின் ஆகியோரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார்கள்.
சித்து குமார், திபு நினன் தாமஸ், ஏ.எச்.காஷிப் ஆகியோரது இசையில் பாடல்கள் கதையோடு பயணிக்கிறது. சித்து குமாரின் பின்னணி இசை கதாப்பாத்திரமாகவே வலம் வருகிறது.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. பேச்சுலர்களின் அழுக்கு அறையையும், பெங்களூர் ஐடி ஊழியர்களின் ஹைடெக் அறையையும் நேர்த்தியாக படமாக்கியிருப்பவர், இரவுக்காட்சிகளை வியப்படையும் விதத்தில் படமாக்கியிருக்கிறார்.
கதை எழுதி இயக்கியிருக்கும் சதிஷ் செல்வகுமார், ஒரு பெண்ணின் காதல் தோல்வியை, வித்தியாசமான கோணத்திலும், ஐடி துறை இளைஞர்களின் வாழ்க்கை சூழலோடும் சேர்த்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.
திரைக்கதை மற்றும் காட்சிகளை இயல்பாக கையாண்டிருக்கும் இயக்குநர் சதிஷ் செல்வகுமார், இரண்டாம் பாதியில் சற்று தேவையில்லாத காட்சிகளை வைத்து படத்தின் நீளத்தை அதிகரிக்க செய்திருப்பது படத்தின் குறையாக இருக்கிறது. இருந்தாலும், இயக்குநர் காட்சிகளை கையாண்ட விதம் அந்த குறையை போக்கி முழு படத்தையும் ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் ‘பேச்சுலர்’ சினிமா ரசிகர்களை ரசிக்கவும், இளைஞர்களை கொண்டாடவும் வைக்கிறது.
ரேட்டிங் 3.5/5