Feb 17, 2023 07:10 AM

’பகாசூரன்’ திரைப்பட விமர்சனம்

97dd6f2c0564faf2222e38aebc9ba9bb.jpg

Casting : Selvaraghavan, Natty Natraj, Tharakshi, Radharavi, Devadarshini, Rams, K.Rajan, PL Thenappan, Mansoor Alikhan, Cool Suresh, Kunanidhi

Directed By : Mohan.G

Music By : Sam CS

Produced By : GM Film Corporation

 

சிவபக்தரான செல்வராகவன் கல்லூரி பேராசியர், கல்லூரி மாணவிகள் விடுதியின் காப்பாளர் மற்றும் விடுதி காவலர் ஆகியோரை ஒவ்வொருவராக கொலை செய்கிறார். மறுபக்கம் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி நட்டி நட்ராஜ், தனது அண்ணன் மகளின் மர்மமான மரணம் குறித்து விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. அதை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபடும் நட்டி, இதுபோல் பல இளம்பெண்கள் மர்மமான முறையில் இறந்திருப்பதையும், இதற்கு பின்னணியில் பெரிய மனிதர்கள் இருப்பதையும் கண்டுபிடிக்கிறார்.

 

தகுந்த ஆதாரங்களுடன் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதோடு, அவர்களின் முகத்திரையை மக்கள் முன்பு கிழிக்க முடிவு செய்யும் நட்டி, அதற்கான முயற்சியில் ஈடுபடும் போது, செல்வராகவனும் இப்படி ஒரு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்துக்கொள்கிறார். செல்வராகவனின் உதவியோடு குற்றவாளிகளின் முகத்திரையை கிழிக்க முடிவு செய்யும் நட்டி, செல்வராகவனை சந்திக்க முயற்சிக்க, அவர் செல்வராகவனை சந்தித்தாரா? இவர்களது பிரச்சனையின் பின்னணியில் இருக்கும் அந்த மர்மம் என்ன?, அதற்கு காரணமான பெரும் புள்ளிகளுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்தார்களா? இல்லையா? என்பது தான் ‘பகாசூரன்’ படத்தின் கதை.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் செல்வராகவன், பாதிகப்பட்ட பரிதாபமிக்க மனிதர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருந்தாலும், ஆக்ரோஷமிக்க சிவபக்தர் வேடத்தில் பல இடங்களில் பொருத்தம் இல்லாதவராக இருக்கிறார். குறிப்பாக ”சிவ  சிவாயம்...” பாடலின் உதடு அசைவில் தொடங்கி, தன் மகளை சீரழித்தவர்களை வதம் செய்வது வரை, பல இடங்களில் அவருடைய நடிப்பு கதாபாத்திரத்துடன் ஒன்றாமல் போவது பெரும் ஏமாற்றமளிக்கிறது. 

 

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜின் கதாபாத்திரத்தை, மர்மங்களை கண்டுபிடிக்கும் விசாரணை அதிகாரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர் ஏற்கனவே போலீஸ் வேடத்தில் நடித்திருப்பதால், சற்று வித்தியாசத்தை காட்டுவதோடு, அவரது கதாபாத்திரத்தை சம காலத்திற்கு ஏற்ப யூடியூபராகவும் சித்தரித்தரிப்பது கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.  நட்டி நட்ராஜும் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

 

செல்வரகாவனின் மகளாக நடித்திருக்கும் தாராக்‌ஷி, வில்லனாக நடித்திருக்கும் ராதாரவி, கே.ராஜன், கூல் சுரேஷ் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தில் குறை இல்லாமல் நடித்திருக்கிறார்கள்.

 

ஒரு பாடலுக்கு வரும் மன்சூரலிகான், ராம்ஸ், சசி லையா, அருணோதயன், குட்டி கோபி, தேவதர்சினி, பி.எல்.தேனப்பன், குணாநிதி என சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பவர்கள் கூட அளவான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஃபருக் ஜே பாட்ஷா காட்சிகளை நேர்த்தியாக படமாக்கி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும் கதையின் வலிமையை ரசிகர்களிடம் எளிதியில் கடத்தி விடுகிறது.

 

சாம் சி.எஸ் பின்னணி இசை மிரட்டல். படம் சொல்ல வரும் ஆபத்துக்களையும், பாதிக்கப்பட்டவர்களின் ஆதங்கம் மற்றும் ஆக்ரோஷம் இரண்டையும் பின்னணி இசை மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கும் சாம் சி.எஸ், பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

 

எஸ்.தேவராஜின் படத்தொகுப்பு படத்தை போரடிக்காமல் நகர்த்தி செல்வதோடு, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடும் காட்சிகளை பயணிக்க வைத்திருக்கிறது.

 

‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்கள் மூலம் தனக்கென்று தனி பாதை வகுத்துக்கொண்ட இயக்குநர் மோகன்.ஜி-யை ‘பகாசூரன்’ அனைவருக்குமான பாதையில் பயணிக்க வைத்திருக்கிறது. 

 

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற செயல்களுக்கு பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிக்கரமான உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பதோடு, அதில் சிக்கிக்கொள்ளாமல் பெண்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்ற விழிப்புணர்வையும் கொடுத்திருக்கும் இயக்குநர் மோகன்.ஜி-யை இதற்காக தனியாக பாராட்டலாம்.

 

க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை மனிதர்களின் உணர்வுகளுடன் தொடர்புபடுத்தி கதை சொல்வதோடு, அதை போரடிக்காமல் நகர்த்தும் விதமாக திரைக்கதையையும், காட்சிகளையும் வடிவமைத்திருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, படத்தை வேகமாகவும் நகர்த்தி செல்கிறார்.

 

முதல் பாதி முழுவதும் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடு நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் என்ன நடக்கப்போகிறது என்பதை யூகிக்க முடிவதும், செல்வராகவனின் தடுமாற்றம் மிக்க நடிப்பும் படத்தை தொய்வடைய செய்கிறது.

 

இருப்பினும், கல்வியில் மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கும் ஸ்மார்ட்போன், இண்டர்நெட் ஆகியவை மாணவர்களின் அழிவிலும் எத்தகைய பங்கு வகிக்கிறது என்ற உண்மையை படம் மிக அழுத்தமாக பதிவு செய்திருப்பதால் குறைகள் பற்றி ரசிகர்கள் மறந்துவிடுகிறார்கள்.

 

பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் செல்போன்கள் மூலம் அவர்களை சுற்றியிருக்கும் ஆபத்துகளை எச்சரிக்கையாகவும், அறிவுரையாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, சமுதாயத்திற்கு தேவையான ஒரு விஷயத்தை, முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

 

மொத்தத்தில், ‘பகாசூரன்’ நிச்சயம் அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 3.5/5