Nov 03, 2022 07:10 PM

’பனாரஸ்’ திரைப்பட விமர்சனம்

d9c54e103e8fe3ed0cd2a9261156019c.jpg

Casting : Zaid Khan, Sonal Monteiro, Sujay Shastry, Devaraj, Achyuth Kumar

Directed By : Jayatheertha

Music By : B. Ajaneesh Loknath

Produced By : Tilakraj Ballal, Muzammil Ahmed Khan

 

நாயகன் ஜையீத் கான் விளையாட்டாக செய்த ஒரு விஷயம் நாயகி சோனல் மோண்டோரியோவின் வாழ்க்கையில் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால் அவர் தனது கல்லூரி படிப்பையும், தனது லட்சியத்தை பாதியில் விட்டுவிட்டு காசி பனாரஸில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிடுகிறார். தவறை உணர்ந்த நாயகன், நாயகியை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்பதற்காக அவரை தேடி பனாரஸ் செல்கிறார். 

 

பனாரஸுக்கு சென்று சோனல் மோண்டோரியோவை சந்திக்கும் ஜையீத் கான், திடீரென்று உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார். தனது பிரச்சனைக்கான தீர்வை தேடி அலையும் அவர், சோனல் மோண்டோரியா மற்றும் அவரது குடும்பத்தாரின் உயிருக்கு ஆபத்து இருப்பதையும் தெரிந்துக்கொள்ள, அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதை எதிர்பார்க்காத ட்விஸ்ட் மூலம் சொல்லியிருப்பது தான் ‘பனாரஸ்’.

 

வேகம், துடிதுடிப்பு நிறைந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் நாயகன் ஜையீத் கான், புதுமுகம் என்பது தெரியாதவாறு நடித்திருக்கிறார். டைம் டிராவலர் மூலம் எதிர்காலத்துக்கு சென்று வந்திருக்கிறேன், என்று கூறி நாயகியை நம்ப வைக்கும் காட்சியில் ரசிகர்களிடம் கவனம் பெறுபவர், இறுதிக்காட்சி வரை தனது ஒவ்வொரு அசைவுகளிலும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் சோனல் மோண்டோரியோ பேரழகி இல்லை என்றாலும் பார்த்ததும் ஈர்க்க கூடிய வகையில் இருக்கிறார். நான் தான் உன் கணவன் என்று ஜையீத் கான் சொன்னதும், அதை நம்பவும் முடியாமல் அதே சமயம் தவிர்க்கவும் முடியாமல் அவர் தயங்கும் காட்சிகள் அழகு. 

 

சாம்பு என்ற வேடத்தில் நடித்திருக்கும் சுஜய் சாஸ்திரி, ஆரம்பத்தில் காமெடியாக பேசி சிரிக்க வைப்பவர், இறந்தவர்களை புகைப்படம் எடுப்பதற்கான காரணத்தை சொல்லும் இடத்தில் நடிப்பில் அசத்துவதோடு, நம் மனதையும் கனக்க செய்துவிடுகிறார்.

 

நாயகியின் சித்தப்பாவாக நடித்திருக்கும் அச்யுத் குமார், அவரது மனைவியாக நடித்திருக்கும் நடிகை ஆகியோரது கூட்டணி அவ்வபோது நம்மை சிரிக்க வைக்கிறது. இவர்களை தவிர படத்தில் வரும் சிறு சிறு கதாபாத்திரங்கள் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை என்றாலும் கொடுத்த வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் அத்வைதா குருமூர்த்தி எப்போதும் மக்கள் கூட்டமாகவே இருக்கும் காசியை, கூட்டம் இல்லாத இடமாக காண்பித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. காசி என்றாலே கங்கை நதியை மட்டுமே காண்பித்திருக்கும் திரைப்படங்களுக்கு மத்தியில் அதன் சாலைகளையும், சிறு சிறு தெருக்களையும் சுற்றி சுற்றி காட்சிகளை படமாக்கி நம்மையும் அங்கு பயணிக்க வைக்கிறது அத்வைதா குருமூர்த்தியின் கேமரா.

 

அஜனீஷ் லோக்நாத் இசையில் “இலக்கண கவிதை எழுதிய அழகே...” என்ற பாடல் திரும்ப திரும்ப கேட்கும்படி உள்ளது. மற்ற பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளது.

 

கே.எம்.பிரகாஷின் படத்தொகுப்பு படத்தின் முதல் பாதி கதையை நேர்த்தியாக பயணிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் சற்று குழப்பமடைய செய்கிறது. பிறகு நாயகனின் மனநிலை மாற்றம், திரும்ப திரும்ப நடக்கும் சம்பவங்கள் போன்ற காட்சிகளை படத்தொகுப்பு செய்த விதம் கொஞ்சம் புரிவதும் போலவும், நிறைய புரியாமலும் இருக்கிறது.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் ஜெயதீர்த்தா காதல் கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்வதோடு, அனைத்து தரப்பு மொழியினருக்கும் எற்ற பான் இந்தியா திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

 

படத்தின் ஆரம்பத்தில் நாயகன் சொல்லும் டைம் டிராவலர் கதையிலேயே ரசிகர்கள் படத்தோடு ஒன்றிவிடுகிறார்கள். பிறகு நாயகிக்கு ஏற்படும் சிக்கல், அதனை தொடர்ந்து நாயகனின் பனாரஸ் பயணம் ஆகியவை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அதன் பிறகு வரும் காட்சிகள் ஏமாற்றம் அளிக்கும்படி உள்ளது.

 

இடைவேளையின் போது வைத்திருக்கும் ட்விஸ்ட், சிறு எதிர்பார்ப்பை கொடுத்தாலும் அதன் பிறகு வரும் காட்சிகள் மூலம் மீண்டும் காதலை சுற்றியே கதை நகரும் போது ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படுகிறது.

 

என்னதான் சொல்ல போறாங்களோ! என்று ரசிகர்கள் புலம்பும் நேரத்தில் படத்தின் முக்கிய திருப்புமுனை வருகிறது. அதுவும் நாம் ஏற்கனவே சில படங்களில் பார்த்திருப்பதால் பெரிய சுவாரஸ்யம் ஏற்படவில்லை என்றாலும், அதில் நடக்கும் சம்பவத்தால் நாயகன் என்னவாக போகிறார்? என்ற எதிர்பார்ப்போடு படம் வேகம் எடுக்கிறது.

 

இறுதியில், நாம் ஏற்கனவே பார்த்த விஷயமாக இருந்தாலும், அதை பலவித கோணத்தில், பலவித ட்விஸ்ட்டோடு சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர், அவரையும் குழப்பி நம்மையும் குழப்பி, இறுதியில் ஒருவழியாக அனைத்து குழப்பங்களுக்கும் ஒரு தெளிவான பதிலை கொடுத்திருப்பது ஆறுதல்.

 

மொத்தத்தில்,  ‘பனாரஸ்’ காதல் கதையை பான் இந்தியா படமாக கொடுக்கும் முயற்சி.

 

ரேட்டிங் 3.5/5