‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ விமர்சனம்
Casting : Aravindsamy, Amala Paul, Nazar, Baby Ninika, Master Raghavan
Directed By : Siddique
Music By : Amresh Ganesh
Produced By : M. Harshini
தனது இயக்கத்தில் மலையாளத்தில் வெற்றிப் பெறும் படங்களை தமிழிலும் ரீமேக் செய்து வெற்றி பெறும் இயக்குநர் சித்திக்கின் மற்றொமொரு ரீமேக்கான இந்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ எப்படி என்பதை பார்ப்போம்.
மனைவியை இழந்த அரவிந்த்சாமிக்கு ஒரு மகன் இருக்கிறார். அதேபோல், கணவனை இழந்த அமலா பாலுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படிக்க, அமைதியான குணம் கொண்ட அரவிந்த்சாமியின் மகன் தனது முரட்டுத்தனமான அப்பாவைக் காட்டிலும் அமைதியாக இருக்கும் அமலா பால் போன்ற ஒரு அம்மா இருந்தால் நல்லா இருக்குமே என்று ஆசைப்படுகிறார். மறுபக்கம் கோபக்கார குணம் கொண்ட அமலா பாலின் மகள், அடாவடியான அரவிந்த்சாமி போல தனக்கு அப்பா இருந்தால் நல்லா இருக்குமே என்று ஆசைப்பட, இந்த இரண்டு சிறுவர்களும் தங்களது பெற்றோரை ஒன்று சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்கள். குழந்தைகளின் ஆசைக்காகவும் அவர்களது நலனுக்காகவும் ஒன்று சேர அமலா பாலும், அரவிந்த்சாமியும் முடிவு எடுக்கும் போது, இறந்துப் போன அமலா பாலின் கணவர் உயிரோடு வந்து நிற்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது, அரவிந்த்சாமி - அமலா பால் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா, என்பது தான் படத்தின் மீதிக்கதை.
சித்திக் படம் என்றாலே கதை பிளஸ் கதாபாத்திரங்கள் வளுவாக இருப்பதோடு, காமெடி காட்சிகளும் ரொம்ப வளுவாக இருக்கும். ஆனால், இந்த படத்தை பொருத்தவரை அனைத்திலும் ஏதோ குறை இருப்பது போல தான் படம் முழுவதும் தோன்றுகிறது.
அந்த காலத்து சாக்லெட் பாயாக இருந்த அரவிந்த்சாமி, தற்போது அழகான வில்லனாக அதிரடிகாட்டுபவர், இனி ஹீரோவாகவும் அதிரடி காட்டுவார் என்பதை நிரூபிக்கும் விதத்தில் அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. முறுக்கு மீசையுடன், வேட்டிக்கட்டிக் கொண்டு எப்போதும் கோபத்தோடு வலம் வரும் அவர் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியை காட்டுவது போல, அமலா பாலை லவ்வுவதிலும், குழந்தைகளிடம் எதார்த்தமாக பழகுவதிலும் நடிப்பால் அசத்துகிறார். அதிலும், வெகுளித்தனமாக அமலா பாலை அவர் எதிர்க்கொள்ளும் காட்சிகளில் ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார்.
ஒரு குழந்தைக்கு அம்மா என்றால் ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு அமலா பால் அழகாக இருக்கிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா என்று காமெடி ஏரியாவை கவனித்துக் கொள்ள ஆட்கள் இருந்தாலும், அவர்களது ஏரியா டிரையாகவே இருக்கிறது. ஒரு சில இடங்களில் சிரிப்பு வருகிறது என்றால், அதுவும் அரவிந்த்சாமியால் தான். மற்றபடி இந்த மூவேந்தர்களின் வரவு காமெடியாக அல்லாமல் கயித்தறுப்பாகவே இருக்கிறது.
அமலா பாலின் மகளாக நடித்திருக்கும் சிறுமி நைனிகாவும், அரவிந்த்சாமியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் ராகவனும் அரவிந்த்சாமி - அமலா பால் ஜோடிக்கு இணையாக நடித்திருக்கிறார்கள். இவர்களது நடிப்பு முதல் பாதி முழுவதும் படத்தை ஆட்கொண்டாலும், அமலா பாலின் கணவர் எண்ட்ரிக்கு பிறகு திரைக்கதை வேறுபாதையில் பயணிப்பதால், இவர்களது பாதிப்பு இரண்டாம் பாதியில் காணாமல் போகிறது.
அம்ரீஷ் கணேஷின் இசையும், விஜய் உலகநாதனின் ஒளிப்பதிவும் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, அரவிந்த்சாமியை இளமையாக காட்டுவதோடு, அமலா பாலையும் ரசிக்கும்படி காட்டியிருக்கிறது.
இயக்குநர் சித்திக்கின் பலமே காமெடி தான் என்று இருந்த நிலையில், இந்த படத்தில் ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது ஏனோ, என்று தெரியவில்லை. அதிலும், பைக்கை வைத்து அரவிந்த்சாமி செய்யும் அந்த ஆக்ஷன் ரொம்பவே ஓவராக இருப்பதோடு, படத்தில் திணிப்பது போலவும் இருக்கிறது.
கணவனை இழந்த அமலா பால், மனைவியை இழந்த அரவிந்த்சாமி, இவர்களை சேர்த்து வைக்க முயற்சிக்கும் இவர்களது பிள்ளைகள் என்று படம் தொடங்கியவுடன், திரைக்கதை ரொம்ப ஸ்வீட்டாக பயணிப்பதோடு சுவாரஸ்யமாகவும் பயணிக்கிறது. ஆனால், அமலா பாலின் இறந்து போன கணவர் திரும்ப வருவது, அவரால் ஏற்படும் பிரச்சினைகள், அவரது பின்னணி போன்றவை திரைக்கதையை திசை திருப்புவதோடு, ஸ்வீட்டாக இனித்த முதல் பாதியை கசப்பாக மாற்றிவிடுகிறது.
மொத்தத்தில், முதல் பாதியில் ஸ்வீட் ரஸ்கலாக ரசிகர்களிடம் பெயர் வாங்கும் இந்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ இரண்டாம் பாதியில் உண்மையிலே ராஸ்கலாக திட்டு வாங்குகிறார்.
ஜெ.சுகுமார்