Jan 25, 2024 07:47 PM

’ப்ளூ ஸ்டார்’ திரைப்பட விமர்சனம்

1b01bc6be28bb474df94f8d8f62467fb.jpg

Casting : Ashok Selvan, Santhanu Bagyaraj, Prithvi, Keerthy Pandiyan, Bags, Lissy, Kumaravel

Directed By : S.Jeyakumar

Music By : Govindh Vasantha

Produced By : R.Ganesh Murthy, G.Soundarya

 

அரக்கோணம் அருகிலுள்ள கிராமத்தில் 90களில் கதை நடக்கிறது. கிராமத்தில் உள்ள காலனி பகுதியைச் சேர்ந்த ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் அணி அசோக் செல்வன் தலைமையில் இயங்குகிறது. அதே கிராமத்தின் ஊர் அணியான ஆல்பா பாய்ஸ் சாந்தனு தலைமையில் இயங்குகிறது. இந்த இரு அணியைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் மட்டும் இன்றி, மற்ற விசயங்களில் அடிக்கடி மோதிக் கொண்டாலும் கிரிக்கெட் தான் வாழ்க்கை என்று இருக்கிறார்கள். இந்த நிலையில், கிரிக்கெட் விளையாட்டின் மூலமாகவே இந்த இரு பிரிவினரும் பொதுவான பிரச்சனை ஒன்றை சந்திக்க, அது இவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை மட்டும் இன்றி, சமூக வாழ்க்கையையும் எப்படி மாற்றுகிறது, என்பதை சொல்வது தான் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் கதை.

 

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன், கல்லூரி மாணவராக, அனல் தெறிக்கும் முகத்தோடு, விளையாட்டில் ஆக்ரோஷமாகவும், காதலில் உருகும் பனியாகவும் நடித்து ரசிக்க வைக்கிறார். 

 

மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் சாந்தனு, அசோக் செல்வனுக்கு இணையான வேடத்தில் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் சாந்தனு பல இடங்களில் எந்தவித ஆர்பாட்டமும் இன்றி தனது மனமாற்றத்தை கண்கள் மூலமாகவே வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.

 

அசோக் செல்வனின் தம்பியாக நடித்திருக்கும் பிருத்விராஜ், துடுக்கான இளைஞராக காமெடியும், காதலும் கலந்த நடிப்பில் குலுங்க குலுங்க சிரிக்க வைத்து கைதட்டல் பெறுகிறார்.

 

அசோக் செல்வனின் காதலியாக நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியன், தைரியமான  பெண்ணாக தெளிவாக நடித்திருக்கிறார். காதலனிடம் கிரிக்கெட் பற்றி பேசிக் கொண்டே கிரிக்கெட் மீது தனக்கு இருக்கும் ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தும் விதம் நச்.

 

இளைஞர்களை உற்சாகப்படுத்தி ஊக்கமளிக்கும் வழக்கமான வேடத்தில் நடித்திருந்தாலும் பக்ஸின் கதாபாத்திரமும், நடிப்பும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது. அசோக் செல்வனின் அம்மாவாக நடித்திருக்கும் லிஸ்ஸி, அப்பாவாக நடித்திருக்கும் குமரவேல் ஆகியோரது கதாபாத்திரமும், நடிப்பும் காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ.அழகன், புழுதி நிறைந்த கிராமத்து விளையாட்டு மைதானத்தையும், புல்வெளி கொண்ட தொழில்முறை விளையாட்டு மைதானத்தையும் தனது ஒளிப்பதிவு மூலம் நேர்த்தியாக வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். அரக்கோணம் பகுதியின் வெயில் மற்றும் அப்பகுதி மக்களின் வண்ணங்களை மிக சிறப்பாக காட்சிப்படுத்தி படம் பார்ப்பவர்களை அப்பகுதியோடு பயணிக்க வைக்கிறார்.

 

கோவிந்த் வசந்தாவின் இசையில், உமாதேவி மற்றும் அறிவு ஆகியோரின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். அதிலும் அந்த காதல் மெலோடி எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ரகம். பின்னணி இசை பாடல்களை விட ஒரு படி மேல் என்று சொல்லும் அளவுக்கு மிக சிறப்பாக இருக்கிறது.

 

கிரிக்கெட் தான் படத்தின் மையக்கரு என்றாலும் முதல் பாதியில் வரும் கிரிக்கெட் போட்டிகளை வேகமாக நகரும்படி காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் செல்வா.ஆர்.கே, இரண்டாம் பாதியில் வரும் கிரிக்கெட் போட்டிகள் மீது கருனை காட்டியிருப்பதை தவிர்த்திருக்கலாம்.

 

1990-களில் நடக்கும் கதை என்பதால் மிக கவனமாக கலை இயக்கத்தை கையாண்டிருக்கும் கலை இயக்குநர் ஜெயரகு.எல், அக்காலக் கட்டத்தில் இருந்த அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல விசயங்களை மிக நுணுக்கமாக செய்து பாராட்டு பெருகிறார். ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரத்தின் பணியும் பலம் சேர்த்திருக்கிறது.

 

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்துக்கொண்டு கிராமப் பகுதிகளில் நடக்கும் சாதி அரசியலை பேசியிருக்கும் இயக்குநர் எஸ்.ஜெயக்குமார், பொதுவான ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள பிரிந்திருப்பவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதை வலியுறுத்திய விதம் சபாஷ் சொல்ல வைக்கிறது.

 

கிராமப் பகுதிகளின் சாதி பாகுபாடு பற்றி பேசினாலும், கிரிக்கெட் விளையாட்டில் உள்ள அரசியலையும், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு அரசியலையும் நாசுக்காக விமர்சித்து கைதட்டல் பெறுகிறது இயக்குநர் எஸ்.ஜெயக்குமார் மற்றும் தமிழ்ப்பிரபா கூட்டணி.

 

இளைஞர்களின் மோதல், கிரிக்கெட் போட்டி, காதல் என்று முதல் பாதி எந்தவித தடையும் இன்றி வேகமாகவும், சுவாரஸ்யமாகவும் பயணிக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் வரும் கிரிக்கெட் போட்டி மற்றும் காதல் தொடர்பான காட்சிகள் திரைக்கதை ஓட்டத்திற்கு வேகத்தடையாக அமைந்திருக்கிறது. இருந்தாலும், 90 களில் நடக்கும் கதைக்காக பயன்படுத்தப்பட்ட குறியீடுகள், அப்போதைய அரக்கோணம் பகுதியின் பிரபல அரசியல் தலைவரை படத்தில் இணைத்த யுக்தி போன்றவை ரசிக்க வைக்கிறது.

 

கிராமப் பகுதிகளில் நடக்கும் சாதி பாகுபாடு அரசியலைப் பற்றி பேசினாலும், அதை மேலோட்டமாக சொல்லிவிட்டு, இரு தரப்பினருக்குமான பொது பிரச்சனை வரும் போது ஒன்று சேர்ந்தால் மட்டுமே அந்த பிரச்சனையை எதிர்த்து வெற்றி பெற முடியும், என்ற சமூக அரசியல் பேசியிருக்கும் இயக்குநர் எஸ்.ஜெயக்குமார், அதை அனைத்து தரப்பினரும் ரசிக்க கூடிய வகையில் கமர்ஷியலாக சொல்லி கைதட்டல் பெறுகிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘ப்ளூ ஸ்டார்’ மின்னும்.

 

ரேட்டிங் 4/5