Jun 17, 2023 08:39 AM

’பொம்மை’ திரைப்பட விமர்சனம்

8b0d73d0acb4bfa6cf4a30312f799371.jpg

Casting : SJ.Suryah,Priya Bhavani Shankar, Chandini Tamilarasan

Directed By : Radha Mohan

Music By : Yuvan Shankar Raja

Produced By : Angel Studios - V. Maruthu Pandian, Dr. Jasmine Santhosh, Dr. Dheepa T Durai

 

துணிக்கடைகளில் காட்சிக்கு வைக்கப்படும் பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் எஸ்.ஜே.சூர்யா, அங்கிருக்கும் பெண் பொம்மையை தனது இளம் வயது தோழியாக பார்க்கிறார். அந்த பொம்மை வேறு ஒரு கடைக்கு விற்பனையாகி விடுகிறது. விஷயம் அறிந்த எஸ்.ஜே.சூர்யா கோபமடைவதோடு, ஒருவரை கொலையும் செய்துவிடுகிறார். பிறகு பொம்மை இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடிப்பவர், அங்கேயே வேலைக்கு சேர்ந்து விடுகிறார்.

 

கொலை வழக்கை போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், எஸ்.ஜே.சூர்யா அந்த பொம்மையை தனது தோழியாக நினைத்து பழகுவதோடு, அதனை தனது வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காக திட்டம் போடுகிறார். இறுதியில், போலீஸ் அவரை பிடித்ததா? இல்லையா?,  அவருடைய பொம்மை காதல் என்னவானது? என்பதே படத்தின் மீதிக்கதை.

 

1987 ஆம் ஆண்டு ‘மேனிக்கியூன்’ (Mannequin) என்ற  ஆங்கிலத் திரைப்படம் வெளியானது. நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமான இப்படத்தின் ஹீரோவும் இதேபோன்று துணிக்கடைகளில் வைக்கப்படும் பொம்மை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றுவார். அப்போது ஒரு பொம்மை மட்டும் இவருக்கு பெண்ணாக தெரியும். மற்றவர்கள் பார்க்கும் போது பொம்மையாக மாறிவிடும், ஆனால் இவர் மட்டும் இருக்கும் போது பெண்ணாக மாறிவிடும். இவர்களுக்கு இடையே ஏற்படும் காதலை நகைச்சுவையாக சொல்லியிருப்பார்கள்.

 

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘பொம்மை’ படத்தின் கரு இந்த படத்தின் காப்பி தான். ஆனால், இதை இவர்கள் சைக்கோ த்ரில்லர் ஜானரில் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், அதையும் சரியாக சொல்லாமல் சொதப்பியதால் பொம்மை படத்தை பார்க்க ரசிகர்களுக்கு அதிகமான பொறுமை தேவை.

 

நாயகனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது நடிப்பு மூலம் படத்தை தாங்கி பிடிக்கிறார். காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லை என்றாலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு மற்றும் உழைப்பு இரண்டுமே காட்சிகளுக்கு ஓரளவு சுவாரஸ்யத்தை கொடுக்கிறது. ஆனால், அதுவும் சில இடங்களில் ஓவர் டோஸாக இருப்பதால் போரடித்து விடுகிறது.

 

நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், வழக்கமான தனது பாணியில் தனக்கு தெரிந்ததை செய்திருக்கிறார். பொம்மையாக நடித்தாலும் குறிப்பிட்டு சொல்லும்படி எதையும் அவர் செய்யவில்லை.

 

சிறு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் தோன்றியிருக்கும் சாந்தினியின் வேடம் சிறியது என்றாலும், கூடுதல் காட்சிகள் அவருக்கு கொடுத்திருக்கலாம், என்று நம்மை ஏங்க வைக்கிறார்.

 

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனுக்கு பெரிய வேலை ஏதும் இல்லை. படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களையும் குளோசப்பில் காட்டுகிறார். எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரை சுற்றி அதிக காட்சிகள் வருவதால் அவர்களுக்கு அதிகமான குளோஷப் ஷாட் வைத்திருக்கிறார். மற்றபடி கேமராவும் ஒரு பொம்மை போல தான் செயல்பட்டிருக்கிறது.

 

யுவன் சங்கர் ராஜா இசையில் இதுபோன்ற பாடல்களும் வரும் என்பதற்கான உதாரணமாக பாடல்கள் அமைந்திருக்கிறது. இந்த படத்தின் பாடல்களை விட, ’உல்லாச பறவைகள்’ படத்தின் “தெய்வீக ராகம்..” பாடல் தான் நம் மனதில் நிற்கிறது. பின்னணி இசையும் பரவாயில்லை ரகம் தான்.

 

சைக்கோ சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் ஒரு காதல் கதையை சொல்லியிருந்தாலும், படத்தில் அதற்கான காட்சிகள் மிக மிக குறைவாக இருப்பதால், ஆண்டனியின் படத்தொகுப்பும் பெரிதாக இல்லை.

 

எழுதி இயக்கியிருக்கும் ராதா மோகன், மனநிலை பாதிக்கப்பட்ட மனிதனின் காதல் கதையை உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், படத்தில் இடம்பெற்ற அப்படிப்பட்ட காட்சிகள் ரசிகர்களை எந்தவிதத்திலும் பாதிக்காதது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

 

காதல் கதை என்றால், ஹீரோ மட்டுமே ஹீரோயினை காதலிக்க கூடாது, படம் பார்ப்பவர்களுக்கும் அந்த ஹீரோயின் மீது காதல் வர வேண்டும், அப்படிப்பட்ட காதல் படங்கள் மட்டுமே பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், இந்த படத்தில் பொம்மை மீதும் நமக்கு கவனம்  செல்லவில்லை,  பெண்ணாக மாறும் பிரியா பவானி சங்கர் மீதும் காதல் ஏற்படவில்லை. அதனால், இந்த பொம்மை எஸ்.ஜே.சூர்யாவுக்கு உயிர் உள்ள பெண்ணாக தெரிந்தாலும், படம் பார்ப்பவர்களுக்கு சாதாரண பொம்மையாகவே தெரிகிறது.

 

மொத்தத்தில், இந்த ‘பொம்மை’ போலியாக இருக்கிறது.

 

ரேட்டிங் 2.5/5