’பொம்மை நாயகி’ திரைப்பட விமர்சனம்

Casting : Yogi Babu, Subathra, Srimathi, Hari, GN Kumar, Aruldass, Jayachandran, Lissy Antony
Directed By : Shan
Music By : Sundaramurthy
Produced By : Neelam Productions - Yazhi Films
சாமானிய மனிதரான யோகி பாபுவின் மகள் ஆதிக்க சாதியினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். அவர்களை எதிர்த்து மகளுக்கு நேர்த்த கொடுமைக்கு நியாயம் கேட்டு யோகி பாபு சட்ட ரீதியாக போராடுகிறார். அந்த போராத்தில் பல இடர்பாடுகள் வந்தாலும் அவற்றை எதிர்த்து தொடர்ந்து போராடி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கிறார். ஆனால், பணம் மற்றும் அதிகார பலத்தால் குற்றவாளிகள் வெளியே வருவதோடு, மீண்டும் யோகி பாபுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பிரச்சனைகளை கொடுக்க, அதில் இருந்து யோகி பாபு மீண்டாரா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘பொம்மை நாயகி’.
குறைவான வருமானம் இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு நிறைவான வாழ்க்கை வாழும் சாதாரண ஏழை குடும்ப தலைவனாக யோகி பாபு மிக இயல்பாக நடித்திருக்கிறார். எந்த இடத்திலும் தன்னை காமெடி நடிகராக காட்டிக்கொள்ளாத அவர், எத்தகைய கனமான வேடத்தையும் தன்னால் சிறப்பாக கையாள முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.
யோகி பாபுவின் மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா, மகளாக நடித்திருக்கும் ஸ்ரீமதி, ஜி.என்.குமார், அருள்தாஸ், ஹரி, ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, கேலப் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கச்சிதமாகவும் நடித்திருக்கிறார்கள்.
அதிசயராஜின் ஒளிப்பதிவு கடலூரின் அழகையும், அம்மக்களின் வாழ்வியலையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறது. நீதிமன்றத்தை காட்டிலும் நீதிமன்றத்தை சுற்றி நடக்கும் கதைகளை மிக இயல்பாக படமாக்கியிருப்பவர், சட்டத்தை நம்பியிருக்கும் அப்பாவி மக்களின் மன குமுறல்களை காட்சிகள் மூலம் பிரதிபலித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சுந்துரமூர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக மட்டும் இன்றி சிந்திக்க வைக்கவும் செய்கிறது. பின்னணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
நீதிமன்ற காட்சிகள் பல படங்களில் பார்த்த சாயலில் இருந்தாலும் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன. நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர முடியுமே தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என்ற கசப்பான உண்மையை உணர வைத்துள்ளார் இயக்குநர் ஷான்.
சட்டத்தில் உள்ள ஓட்டை யாருக்கு எல்லாம் சாதகமானதாக இருக்கிறது, என்பதை சொல்லியிருக்கும் இயக்குநர், “பொம்மை நாயகினு சாமி பேர வெச்சுட்டு ஏன் தாத்தா என்னை கோயிலுக்கு கூட்டிட்டு போக மாட்டேங்குற”, ”தப்பு செஞ்சவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான் பாதிக்கப்பட்டவன்”, ”போற உயிரு போராடியே போகட்டும் சார்” போன்ற கூர்மையான வசனங்கள் மூலம் கைதட்டல் பெறுகிறார்.
ஆதிக்க சாதியினர் என்னதான் தப்பு செய்தாலும், சொந்தங்களும், சட்டமும் அவர்களை காப்பாற்ற எப்படி எல்லாம் உதவுகிறது, என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர், இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ்னுக்கு ஏற்ற தரமான படமாகவும், மக்களுக்கு பாடம் சொல்லும் பதிவாகவும் இயக்கியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘பொம்மை நாயகி’ கவனம் ஈர்க்கிறது.
ரேட்டிங் 3.75/5