Mar 29, 2024 05:30 AM

’பூமர் அங்கிள்’ திரைப்பட விமர்சனம்

5ddc2ba151c68542ea8118dffb85581a.jpg

Casting : Yogibabu, Oviya, Bala, Thangadurai, Shesu

Directed By : Swadesh MS

Music By : Santhan & Dharma Prakash

Produced By : Anka Media

 

ரஷ்ய நாட்டு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளும் யோகி பாபு, அவரிடம் இருந்து விவாகரத்து பெற முயற்சிக்கிறார். விவாகரத்து கொடுக்க வேண்டும் என்றால், யோகி பாபுவின் பூர்வீக அரண்மனையில் சில நாட்கள் வாழ வேண்டும், என்று ரஷ்ய நாட்டு பெண் நிபந்தனை விதிக்கிறார். அவரது நிபந்தனைபடி, அந்த அரண்மனையில் சில நாட்கள் தங்கியிருக்க சம்மதிக்கும் யோகி பாபு, அரண்மனையின் மேல் பகுதிக்கு மட்டும் யாரும் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார். ஆனால், ரஷ்ய நாட்டு பெண் மட்டும் அவ்வபோது அரண்மனையின் மேல்தளத்தில் உள்ள அறை ஒன்றில் நுழைய முயற்சித்து வருகிறார்.

 

இதற்கிடையே, யோகி பாபுவை பழிவாங்க துடிக்கும் அவரது நண்பர்கள் சேசு, தங்கதுரை, பாலா மற்றும் ஊர் தலைவர் ரோபோ சங்கர் ஆகியோரும் அந்த அரண்மனைக்குள் நுழைகிறார்கள். இவர்களுடன் திடீர் வருகையாக ஓவியாவும் அந்த அரண்மனைக்கு வர, இவர்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் கலாட்டாவையும், கலவரங்களையும் காமெடியாக கொடுக்க முயற்சித்திருப்பது தான் ‘பூமர் அங்கிள்’.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகி பாபு, வழக்கம் போல் உடல் கேலி தொடர்பான வசனங்களை பேசி ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். அவரது வசனங்களில் சில சிரிக்க வைத்தாலும், பல கடுப்பேற்றவே செய்கிறது.

 

சேசு, தங்கதுரை, பாலா, ரோபோ சங்கர் ஆகியோர் படம் முழுவதும் வந்தாலும், சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார்கள். திடீர் எண்ட்ரி கொடுக்கும் ஓவியா, வுண்டர் உமனாக அதிரடி காட்டுவது, ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தவும் செய்கிறார்.  

 

ரஷ்ய நாட்டு பெண்ணாக நடித்திருக்கும் நடிகை, அவரது உதவியாளராக நடித்திருக்கும் நடிகை ஆகியோர் அரண்மனையை சுற்றி நடக்கும் மர்மங்களை கண்டுபிடிப்பதில் களம் இறங்க, அவ்வபோது காமெடி பட்டாளத்துடன் சேர்ந்து சிரிக்க வைக்கவும் செய்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் சுபாஷ் தண்டபானி காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருப்பதோடு, சிறுவர்களை கவர்வதற்கான பணியை தனது ஒளிப்பதிவு மூலம் சிறப்பாக செய்திருக்கிறார்.

 

இசையமைப்பாளர்கள் சாந்தன் - தர்ம பிரகாஷ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.

 

மர்மங்கள் நிறைந்த அரண்மனை, அதில் நுழைபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை காமெடியாக சொல்வது என்ற வழக்கமான பாணியிலான தில்லையின் எழுத்தில், ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் கதாபாத்திரங்களை சித்தரித்து, அதில் நம்ம ஊரு சக்திமானின் சோகக் கதையை நகைச்சுவையாக சொல்லி படத்தை வித்தியாசமான ரூட்டில் பயணிக்க வைவைத்திருக்கும் இயக்குநர் ஸ்வாதேஷ்.எம்.எஸ், சிறுவர்களை கவர்வதற்கான அம்சங்களை சேர்த்து படத்தை இயக்கியிருக்கிறார்.

 

முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படத்தின் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் ஸ்வாதேஷ்.எம்.எஸ், சிறுவர்களுக்கான படமாகவும் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து, பாடல் காட்சிகளையும், சில ஸ்பெஷல் காட்சிகளை வைத்திருக்கிறார்.

 

எந்தவித லாஜிக்கையும் பார்க்காமல், காமெடி நட்சத்திர பட்டாளத்தை வைத்துக்கொண்டு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த காமெடி கலாட்டாவை, ரசிகர்களும் எந்தவித லாஜிக்கையும் பார்க்காமல் பார்த்தால் வயிறு வலிக்கும் அளவுக்கு நிச்சயம் சிரிக்க வைக்கும்.

 

மொத்தத்தில், இந்த  ‘பூமர் அங்கிள்’ ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை வைத்துக்கொண்டு நம்ம ஊரு காமெடி நடிகர்கள் செய்யும் காமெடி கலவரம்.

 

ரேட்டிங் 2.9/5