’ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’ திரைப்பட விமர்சனம்

Casting : Rio Raj, Joe Giovanni Singh, Jaineesh, Gunalan, Nabizhah Jullaludin, Moonila
Directed By : Joe Giovanni Singh
Music By : Praveen Viswa Malik
Produced By : Streetlight Pictures
சிங்கப்பூரில் மருத்துவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியை கண்டுபிடிப்பதில் காவல்துறை அதிகாரி ஜெய்னீஷ் தீவிரம் காட்டி வருகிறார். மறுபக்கம், எந்த நேரமும் கம்ப்யூட்டர் கேம் விளையாடி கொண்டிருக்கும் ரியோ ராஜுக்கு, அவருடைய அக்கா ரியல் கேம் விளையாடுவற்கான யோசனை ஒன்றை சொல்கிறார். அதன்படி, ஆள் இல்லாத வீடு ஒன்றில் புகுந்து அங்கிருக்கும் சில பொருட்களை யாரிடமும் சிக்காமல் எடுத்து வந்தால் அவர் தான் வெற்றியாளர் என்று சொல்கிறார்.
அதன்படி, இருவரும் வெவ்வேறு வீடுகளுக்குள் நுழைய, இருவரில் போட்டியில் வெற்றி பெற்றது யார்? என்பதும் தொடர் கொலைகளை செய்து வரும் கொலையாளி பிடிபட்டாரா? இல்லையா? என்பதும் தான் படத்தின் கதை என்று நினைத்து பார்த்தால், இறுதியில் அத்தனையும் வெறும் மாயை, என்ற ரீதியில் ஒரு விஷயத்தை சொல்லி படத்தை முடிக்கிறார்கள். அது என்ன என்பது தான் படத்தில் இருக்கும் ஒரே ஒரு சுவாரஸ்யம்.
தொலைக்காட்சி மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக வலம் வரும் ரியோ ராஜ், இப்படி ஒரு படத்தில், இதுபோன்ற வேடத்தில் நடித்தது அதிர்ச்சியளித்தாலும், தனக்கு கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜெய்னீஷ், கம்பீரமாக இருந்தாலும், அவருடைய நடிப்பும், வசனங்களும் சிரிக்க வைக்கிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் நபிஷா ஜுலாலுதீன் அக்கா வேடத்திற்கு பக்காவாக இருக்கிறார். அக்காவாக நடித்தாலும், டூயட், தனி பாடல்கள் என்று திரை முழுவதும் நிரம்பி வழிகிறார்.
சைக்கோவாக நடித்திருக்கும் குணாலன், வேடத்திற்கு ஏற்ற வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
படத்தின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் ஜோ ஜியோவானி சிங், வெளிநாட்டு நடிகர் போல் இருந்தாலும், எம்.ஜி.ஆர் ஸ்டைல் மூலம் குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சலீம் பிலால் ஜித்தேஷ் கதைக்கு ஏற்றபடி பயணித்திருப்பதோடு, இதுவரை பார்க்காத எளிமையான சிங்கப்பூரை கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் பிரவீன் விஸ்வா மாலிக் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
படத்தின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் ஜோ ஜியோவானி சிங், கதை எழுதி இயக்கியிருக்கிறார். ஒரு சாதாரண கதையை எப்படி எல்லாம் குழப்பி சொல்ல முடியுமோ அப்படி எல்லாம் சொல்லியிருப்பவர், முழு படத்தையும் ஏதோ விளையாட்டாகவே இயக்கியிருக்கிறார்.
சிங்கப்பூரில் நடக்கும் கதை, திடீரென்று தமிழகத்தில் தொடர்கிறது. பிறகு மீண்டும் சிங்கப்பூருக்கு வருகிறது. படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு திரைக்கதையும், காட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று ஒட்டாத வகையில் உடைந்திருந்தாலும், ரசிகர்களின் பொருமையை ரொம்பவே சோதிக்கிறது.
படம் முழுவதும் நம்மை வாட்டி வதைத்தாலும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் அவர்களது வசன உச்சரிப்பு, நடிப்பு ஆகியவை சில இடங்களில் சிரிக்க வைப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.
மொத்தத்தில், இந்த ‘ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்’ ரசிகர்களை கிழித்து கந்தலாக்கி விடுகிறது.
ரேட்டிங் 1/5