’பிரதர்’ திரைப்பட விமர்சனம்
Casting : Jayam Ravi, Priyanka Mohan,Natarajan Subramaniam, Bhumika Chawla, Saranya Ponvannan, VTV Ganesh, Rao Ramesh
Directed By : M.Rajesh
Music By : Harris Jayaraj
Produced By : Screen Scene Media Entertainment Pvt. Ltd. - Sundar Arumugam
சட்டம் படித்த நாயகன் ஜெயம் ரவி, தன்னை சுற்றி நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்கிறார். அவரது இந்த குணம் அவருக்கு மட்டும் இன்றி அவரது பெற்றோருக்கும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால், அவரது அக்கா பூமிகா அவரை நல்வழிப்படுத்துவதற்காக தன்னுடன் ஊட்டிக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால், ஜெயம் ரவியின் செயல்களால் அவரது அக்கா வாழ்க்கையிலும் பிரச்சனை ஏற்பட, அதனால் அவர் தனது கணவரை பிரிய நேரிடுகிறது.
அக்காவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தனது செயல் தான் காரணம் என்பதை உணராத ஜெயம் ரவி, தனது செயலால் பிரச்சனையை பெரிதாக்க முயற்சிக்க, அவர் பற்றிய ஒரு உண்மை அவரது தந்தை மூலம் தெரிய வருகிறது. அதன் பிறகு தனது சுபாவத்தை மாற்றிக் கொள்ளும் ஜெயம் ரவி, தன்னால் பிரிந்த தனது அக்கா மற்றும் அவரது கணவரை சேர்த்து வைக்க முயற்சிக்க, அதில் வெற்றி பெற்றாரா?, அவர் பற்றிய உண்மை என்ன? என்பதே படத்தின் கதை.
ஜெயம் ரவி காமெடியை விட உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருப்பதோடு, நடனக் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகனுக்கு வழக்கமான கமர்சியல் நாயகி வேடம் என்றாலும், தனது கியூட்டான எக்ஸ்பிரசன்கள் மூலம் ரசிக்க வைக்கிறார்.
ஜெயம் ரவியின் அக்காவாக நடித்திருக்கும் பூமிகா, அவரது கணவராக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் அளவாக நடித்திருக்கிறார்கள்.
ஹரிஷ் ஜெயராஜின் இசையில், ”மக்கா ரிஸி” பாடல் ஹிட்டானாலும், மற்ற பாடல்கள் எடுபடவில்லை. பின்னணி இசையும் ரொம்பவே சுமார் ரகமே.
ஒளிப்பதிவாளர் விவேகானந்தம் சந்தோஷத்தின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.
எழுதி இயக்கியிருக்கும் எம்.ராஜேஷ், தனது சக்சஸ் பார்மூலாவான காமெடியை காட்டிலும் அக்கா-தம்பி செண்டிமெண்டுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த செண்டிமெண்ட் படத்திற்கு பலமாக அல்லாமல் பலவீனமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில், ‘பிரதர்’ ஏமாற்றம்.
ரேட்டிங் - 2.5/5