’C/O காதல்’ விமர்சனம்

Casting : Deepan, Sonia Giri, Vetri, Mumtaz sorcar, Karthik Rathnam, Ayra, Nishesh, Shwetha
Directed By : Hemambar Jasti
Music By : Sweekar Agasthi
Produced By : Raja Shekar.M, Jeevan.K, I.B.Karthikeyan
முழுக்க முழுக்க காதலை மட்டுமே மையப்படுத்திய பல படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருந்தாலும், அவற்றில் சொல்லாத காதலை சொல்லியிருக்கிறது இந்த ‘C/O காதல்’.
பள்ளிப்பருவக் காதல், பதின்பருவக் காதல், இளம்பருவக் காதல், பேரிளம்பருவக் காதல், என நான்கு காதல் கதைகள், அந்த காதல்களை இயக்குநர் கையாண்ட விதம், காதல் கதைகளில் வரும் காதல் ஜோடிகளின் கதாப்பாத்திர அமைப்பு மற்றும் நடிகர்களின் நடிப்பு, இவை அனைத்துமே படத்திற்கு மிகப்பெரிய பலம்.
பள்ளிப்பருவக் காதலில் நடித்துள்ள சிறுவர்கள் நிஷேஷ் மற்றும் சுவேதா சொல்லிக் கொடுத்ததை சொதப்பாமல் செய்திருக்கிறார்கள்.
பதின்பருவக் காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் கார்த்திக் ரத்னம் மற்றும் ஐரா இருவரும் துள்ளல் ரகம். ஆண்களிடம் தைரியமாக பேசுவதிலும், அதிரடி காட்டுவதிலும் அட்டகாசம் செய்யும் ஐரா, சர்ச்சையான சமாச்சாரங்களை கூட ரசித்து கைதட்டும்படி செய்திருக்கிறார்.
இளம்பருவக் காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் வெற்றி, மும்தாஜ் சர்கார் ஆகியோரது நடிப்பை காட்டிலும் அவர்களுடைய கதாப்பாத்திர படைப்பு கம்பீரமாக இருப்பதோடு, இப்படியும் வருவது தான் உண்மையான காதல், என்று வியக்க வைக்கிறது.
பேரிளம்பருவக் காதல் கதையில் நடித்திருக்கும் முதல் மரியாதை தீபனும், சோனியா கிரியும் அசத்தல். அமைதியான அழகியாக தெரியும் சோனியா கிரி, காதலை வெளிப்படுத்தும் விதம் கூட அழகாக உள்ளது.
வெகுளித்தனமான கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் ‘முதல் மரியாதை’ தீபன், நடிப்பால் அமர்க்களப்படுத்துகிறார். உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு என்று அனைத்தையும் அளவாக வெளிப்படுத்தியிருப்பவர், ஆங்காங்கே நம்மை சிரிக்கவும் வைக்கிறார். இறுதியில் தனது காதல் அனுபவங்கள் பற்றி சொல்லும் போது, பேரதிர்ச்சி ஏற்படுகிறது.
ஒளிப்பதிவாளர் குணசேகரன் மற்றும் இசையமைப்பாளர் ஸ்வீக்கர் அகஸ்தி, கதைக்கு எது தேவையோ அதை கொடுத்திருக்கிறார்கள்.
சினிமாவில் காதலுக்கு பல சாயங்கள் பூசப்பட்டாலும், அனைத்தையும் அழித்துவிடும் விதத்தில் மகாவின் இந்த காதல் கதை உள்ளது.
காதல் கதையாக இருந்தாலும், சமூகத்திற்கான நல்ல கருத்துக்களையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார், திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஹேமம்பர் ஜஸ்டி.
காதலுக்கு கண் இல்லை என்பதை விட, காதல் என்றால் அந்த கடவுளுக்கு கூட கண் இருக்காது, என்பதை விநாயகர், ஏசு, அல்லா என மூன்று தெய்வங்களையும் முன்னிருத்தி சம்மட்டியடியாக சொல்லியிருக்கும் இயக்குநர், இங்கு நல்லதையும், கெட்டதையும் செய்வது மனிதர்கள் தான். எனவே கடவுளை விட மனிதர்களை நம்ப வேண்டும், என்று சொல்லி சிந்திக்க வைக்கிறார்.
காதலின் வலிமையை மிக எளிமையாக சொல்லியிருக்கும் ’C/O காதல்’ படம், காதலர்கள் மட்டும் இன்றி காதல் அனுபவம் இல்லாதவர்கள் கூட ரசிக்கும் படமாக உள்ளது.
ரேட்டிங் 4.5/5