Apr 02, 2021 11:46 AM

’கால்டாக்ஸி’ விமர்சனம்

18f1288c7b67090b18fea1a614c24733.jpg

Casting : Santhosh Saravanan, Ashwini, Naan Kadavul Rajendran, Cheranraj, E.Ramadass

Directed By : Pa.Pandian

Music By : Paanar

Produced By : KT Combines - R.Kabila

 

கால்டாக்ஸி டிரைவர்களை கொலை செய்துவிட்டு வண்டிகளை திருடிச்செல்லும் சம்பவம் சென்னையில் அதிகரிக்கிறது. கால்டாக்ஸி டிரைவரான கதாநாயகனின், நண்பர்கள் சிலரும் கொலை செய்யப்பட, கொலையாளிகளை தேடி செல்லும் ஹீரோ அவர்களை கண்டுபிடித்தாரா இல்லையா, கடத்தப்படும் வண்டிகளை என்ன செய்கிறார்கள்?, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது தான் படத்தின் கதை.

 

கால்டாக்ஸி டிரைவர்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களுடைய வாகனங்கள் கடத்தப்படும் உண்மை சம்பவத்தை கதையாக்கி, அதில் காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட் ஆகியவற்றை கலந்து திரைக்கதை அமைத்து முழுமையான பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்கள்.

 

கால்டாக்ஸி ஓட்டுநராக நடித்திருக்கும் நாயகன் சந்தோஷ் சரவணன், கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடியை காட்டுபவர், செண்டிமெண்ட் காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.

 

கதாநாயகி அஸ்வினி அழகாக இருக்கிறார். காதல் தவிப்புகளை வெளிப்படுத்தும் போது நடிப்பிலும் ஜொலிக்கிறார்.

 

கால்டாக்ஸி ஓட்டுநர்களாக நடித்திருக்கும் நான் கடவுள் ராஜேந்திரன், போராளி திலீபன், காவலர் வேடத்தில் நடித்திருக்கும் சேரன்ராஜ், இயக்குநர் ஈ.ராமதாஸ் ஆகியோர் அளவான நடிப்பில் கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறார்கள். கொலைகாரக்கூட்டத்தின் முதன்மையானவராக நடித்திருக்கும் நிமல் கவனிக்க வைக்கிறார்.

 

எம்.ஏ.ராஜதுரையின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. பாடல் காட்சிகளை படமாக்கிய விதம் ரசிக்க வைக்கிறது. இசையமைத்து பாடல்களை எழுதியிருக்கும் பாணர், பாடல்களில் சற்று தடுமாறியிருந்தாலும், பின்னணி இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

டேவிட் விஜயின் படத்தொகுப்பு கச்சிதமாக இருந்தாலும், வேகம் குறைவாக இருக்கிறது.

 

இதுவரை திரையில் சொல்லப்படாத ஒரு சம்பவத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் பா.பாண்டியன், மக்கள் மத்தியில் கால்டாக்ஸி டிரைவர்கள் மீது இருக்கும் தவறான கண்ணோட்டத்தை போக்கி அவர்கள் மீது மதிப்பு ஏற்பட வைத்திருக்கிறார்.

 

திருடப்படும் கார்கள் என்னவாகின்றன என்ற விளக்கமும், கால்டாக்ஸிகளை திருடும் கொள்ளையர்களைப் பற்றிய பின்னணியும் அதிர்ச்சி அளிக்கிறது.

 

கமர்ஷியலாக காட்சிகளை கையாண்டிருக்கும் இயக்குநர் பா.பாண்டியன், விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாகவும் கொடுத்திருக்கிறார். கிளைமாக்ஸில் வரும் திருப்புமுனை படத்தில் இருக்கும் சிறு குறைகளை போக்கி பலம் சேர்க்கிறது.

 

கால்டாக்ஸி - கவனம்

 

ரேட்டிங் 3/5