’கேப்டன்’ திரைப்பட விமர்சனம்
Casting : Arya, Aishwarya Lakshmi, Simran, Kavya, Harish Uthaman, Kokul, Bharath Raj
Directed By : Shakthi Soundar Rajan
Music By : D.Imman
Produced By : The Show People and Think Studios
எல்லையில் இருக்கும் ஆள் நடமாட்டமே இல்லாத அடர்ந்த வனப்பகுதியில் மக்களை குடிவைக்க முயற்சிக்கும் அரசு, அந்த இடத்தை ஆராய்ந்து தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு ராணுவத்திடம் கேட்கிறது. அதன்படி அந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ள செல்லும் ராணுவ குழுவில் உள்ள அனைவரும் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். இதனை தொடர்ந்து ஆர்யா தலைமையிலான ராணுவ குழுவினர் மீண்டும் அந்த காட்டுப்பகுதிக்குள் நுழைய முயற்சிக்க, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், அங்கு நடந்த மர்ம மரணங்களுக்கான பின்னணியையும் சொல்வது தான் படத்தின் கதை.
ராணுவ வேடத்திற்க்கு பொருத்தமாக இருக்கும் ஆர்யா, நடிப்பில் கம்பீரத்தை காட்டுவதற்கு பதிலாக விரைப்பை காட்டியிருக்கிறார். ஆர்யாவின் குழுவில் இருக்கும் ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் மற்றும் காவ்யா ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு குறைவான வேலையும், ஒரு மாண்டேஜ் பாடலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் சிம்ரன், இளமையாக இருப்பதோடு, நடிப்பிலும் கவனிக்க வைக்கிறார்.
எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் பெரிதாக கவரவில்லை என்றாலும், படம் முழுவதிலும் ஆக்ஷன் உணர்வை கொடுத்திருக்கிறது யுவாவின் ஒளிப்பதிவு.
டி.இமானின் இசையில் பாடல்கள சுமாராக இருந்தாலும் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. பின்னணி இசைக்காக இமான் அதிகம் மெனக்கெட்டிருப்பது அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது.
கொடூரமான விலங்கு அதை அழிக்க போராடும் ராணுவ வீரர்கள் என்று தொடங்கும் படம், இறுதியில் தொழிற்சாலைகளின் கழிவுகளால் உயிரினங்கள் பாதிக்கப்படுவது மற்றும் கனிம வளங்களுக்காக வனப்பகுதிகள் அழிக்கப்படுவது ஆகியவை பற்றி பேசுகிறது.
படத்தின் வில்லனாக கொடூர விலங்கை சித்தரித்திருக்கும் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன், அந்த விலங்கு பின்னணியில் ஒரு கதை சொல்ல வேண்டும் என்ற பேரில் இறுதியில் அந்த விலங்கையே ஹீரோவாக்கி விடுகிறார். இதை கூட ஏற்றுக்கொள்ளலாம், கொடூர விலங்கின் தலைவனாக ஆக்டோபஸை காட்டுவதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
வித்தியாசமான முயற்சி, குறைந்த பட்ஜெட்டில் ஹாலிவுட்டுக்கு நிகரான படம் என்று சொல்லிக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றியிருக்கும் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜான், கதையையும் பல குழப்பங்களோடு சொல்லி முடித்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘கேப்டன்’ ஏமாற்றம்
ரேட்டிங் 2.5/5