Jul 17, 2023 06:53 AM

’சக்ரவியூகம்’ திரைப்பட விமர்சனம்

ba1abb25088b99c1f56b35e0f7a61fbb.jpg

Casting : Ajay, Vivek Thrivedi, Urvashi Paradesi, Prahya Nayan, Subalekha Sudhakar, Rajiv Kanakhala, Suresh Priya, Srikanth Ayangar, Raj Thirandasu

Directed By : Sethkuri Madhusudhanan

Music By : Bharath Mancjiraji

Produced By : Sahasra Creations

 

விவேக் திரிவேதியின் மனைவியான ஊர்வசி, அவரது இல்லத்தில் வைத்து கொலை செய்யப்படுகிறார். அவரது கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அஜய், முதலில் ஊர்வசியின் கணவர் விவேக் திரிவேதி மீது சந்தேகப்படுகிறார். பிறகு அவரது சந்தேகம் விவேக் திரிவேதியின் நெருங்கிய நண்பரும், தொழில் பங்குதாரருமான ஷரத் மீது திரும்புகிறது. அதே சமயம், கொலை நடந்த வீட்டில் இருந்து பணம் மற்றும் தங்க நகைகள் திருடு போனதால், ஊர்வசியின் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் மீது அஜய் சந்தேகப்படுகிறார். இப்படி, பலர் மீது அஜய் சந்தேகப்பட்டு அவர்களை நெருங்கும் போது, திடீர் வரும் திருப்புமுனையால் வழக்கு திசை திரும்புகிறது. இப்படி பல திருப்புமுனைகளோடு விசாரணை பயணிக்க, இறுதியில் உண்மையான குற்றவாளி யார்? எதற்காக ஊர்வசியை அவர் கொலை செய்தார்? என்பதை அஜய் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்வதே ‘சக்ரவியூகம்’.

 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜய், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக கொலை வழக்கை விசாரிக்கும் அவரது பாணி மிரட்டலாகவும், இயல்பாகவும் இருக்கிறது. அவரது சந்தேகம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், திடீரென்று வரும் திருப்புமுனையால் வழக்கு திசை மாறும் போது, தன் இயலாமையை உடல் மொழி மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பவர், அதே சமயம் சரியான ஆதாரங்களை தேடி செல்லும் போது காவல்துறை அதிகாரியாக மிளிர்கிறார்.

 

விவேக் திரிவேதி கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். படத்தின் மையக்கரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஊர்வசி பரதேசி கதபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு நடிப்பிலும் கவனம் பெறுகிறார்.

 

பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகளும் அளவான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஜி.வி.அஜய் குமார் திரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். பாரத் மஞ்சிராஜின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

 

படம் தொடங்கிய சில நிமிடங்களியே கதைக்குள் நம்மை ஒன்றிணைத்து விடும் இயக்குநர் சேத்குரி மதுசூதன், படம் முழுவதும் அடுத்து என்ன நடக்கும்?, கொலையாளி யாராக இருக்கும் என்று யோசிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்.

 

வேகமான திரைக்கதை, பரபரப்பான காட்சிகள் என்று படம் வேகமாக பயணித்தாலும், கதையில் நல்ல கருத்து ஒன்றை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் படத்தை நகர்த்தி ரசிக்க வைக்கிறார்.

 

மொத்தத்தில், பார்வையாளர்களின் யூகங்களை பொய்யாக்கி வியக்க வைக்கும் களைமாக்ஸோடு கைதட்டல் பெருகிறது இந்த ‘சக்ரவியூகம்’.

 

ரேட்டிங் 3/5