Jun 15, 2023 12:58 PM

’சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ திரைப்பட விமர்சனம்

8b161a67cd9f04cb250dc7e443325fd9.jpg

Casting : Urvashi, Kalaiyarasan, Balu Varghese, Guru Somasundaram

Directed By : Subash Lalitha Subramaniyan

Music By : Subramanian KV

Produced By : Joy Movie Productions - Dr.Ajith Joy

 

நாயகன் பாலு வர்க்கீஸுக்கு குறைவான வெளிச்சத்தில் பார்வை தெரியாத மாலைக்கண் குறைபாடு இருக்கிறது. அதனால், அவரது திருமணம் நின்றுவிடுவதோடு, வேலையும் பறிபோகிறது. இதனால், சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபகிறார். அப்போது, அவரது அம்மா ஊர்வசியின் பூஜை அறையில் இருக்கும் விநாயகர் சிலையை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கிக் கொள்ள ஒரு கூட்டம் முன் வருகிறது. அதே சமயம், புதிய கோவில் ஒன்றை கட்டி அதில் அந்த சிலையை வைக்க வேண்டும் என்று ஊர்வசியின் உறவினர்கள் முடிவு செய்கிறார்கள்.

 

விநாயகர் சிலை மூலம் தனது வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பாலு வர்க்கீஸுக்கு அதே விநாயகர் சிலை மூலம் சில பிரச்சனைகள் வருகிறது. அந்த பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்காக தனது புதிய நண்பரான சார்ல்ஸை சந்திக்கும் பாலு வர்க்கீஸ், பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தாரா? இல்லையா?, அவரது விநாயகர் சிலை என்னவானது? என்பதை சொல்வது தான் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’.

 

கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாலு வர்க்கீஸ், அப்பாவியான முகம், அதற்கு ஏற்ற நடிப்பு என்று கவனம் ஈர்க்கிறார்.

 

சார்ல்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன், அறிமுக காட்சிக்குப் பிறகு காணாமல் போய் விடுகிறார். மீண்டும் இடைவேளைக்குப் பிறகு எண்ட்ரி கொடுப்பவர், அதன் பிறகு முழு படத்தையும் தோளில் சுமந்திருக்கிறார்.

 

பாலு வர்க்கீஸின் அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி, தனது இயல்பான நடிப்பு மற்றும் வசனம் மூலம் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

 

ஊர்வசியின் கணவராக நடித்திருக்கும் குரு சோமசுந்தரத்திற்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

 

ஸ்வரூப் பிலிப்பின் ஒளிப்பதிவு கேரள பகுதியை சென்னையாக காட்ட முயற்சித்திருக்கிறது. சில இடங்களில் அது எடுபட்டாலும், பல இடங்களில் ஒட்டாமல் போகிறது. மற்றபடி காட்சிகளை பளிச்சென்று படமாக்கியிருப்பவர், கதைக்களம் மற்றும் கதாபாத்திரத்திரங்களை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

இசையமைப்பாளர் சுப்பிரமணியன் கே.வி-இன் இசை படத்திற்கு பலம். பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் வித்தியாசத்தை காட்டியிருப்பவர், அதிகமான சத்தம் இல்லாத பின்னணி இசை மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

அச்சு விஜயணின் படத்தொகுப்பு மற்றும் கலை இயக்குநரின் பணி இரண்டும் படத்திற்கு பல இடங்களில் கைகொடுத்திருக்கிறது.

 

விநாயகர் சிலையை மையமாக வைத்து சமூக நீதி கருத்து பேசும் ஒரு படைப்பை இயல்பான திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியம்.

 

தெய்வ நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனித ரூபத்தில் தெய்வம் வந்து உதவி செய்யும் என்ற கருத்தை பதிவு செய்திருக்கும் இயக்குநர், தற்போதைய காலக்கட்டத்தில் ஆன்மீகம் தொடர்பான தொழிலே பெரும் லாபம் தரும் தொழில் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

“என் பெயரில் கடை வைக்கலாம், ஆனால் நான் தான் இங்கு கடை வைக்க முடியாது. காரணம் நான் திருடன்” உள்ளிட்ட சில வசனங்கள் மூலம் கவனம் ஈர்க்கும் இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்பிரமணியம் காட்சிகளை சமூக பொறுப்போடு வடிவமைத்திருந்தாலும், அனைத்து விஷயங்களையும் மேலோட்டமாக சொல்லியிருப்பதும், கேரள பகுதிகளை சென்னையாக காட்டியிருப்பதும் படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்திருக்கிறது.

 

இருந்தாலும், கலையரசன் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம் மற்றும் அந்த கதாபாத்திரம் பேசும் வசனங்கள், திரைக்கதையை வேகமாக நகர்த்தவில்லை என்றாலும் தொய்வில்லாமல் நகர்த்தியிருப்பது, இயக்குநர் பா.இரஞ்சித்தின் பாணியை பல இடங்களில் பயன்படுத்தி அதை கதையோடு பயணிக்க வைத்தது போன்றவை ரசிக்க வைக்கிறது.

 

மொத்தத்தில், ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ ஏமாற்றம் இல்லை.

 

ரேட்டிங் 3.5/5