Jan 26, 2019 08:11 AM

‘சார்லி சாப்ளின் 2’ விமர்சனம்

675e2d2580b27a9232d0664ca93eaee4.jpg

Casting : Prabhu Deva, Prabhu, Nikkil Kalrani, Adah Sharma, Ravi Mariya

Directed By : Shakthi Chidambaram

Music By : Amrish

Produced By : Amma Creation T.Siva

 

பிரபு தேவா - பிரபு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘சார்லி சாப்ளின்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘சார்லி சாப்ளின் 2’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

மேட்ரிமணி சர்வீஸ் தொழில் செய்யும் பிரபு தேவா, டாக்டரான பிரபுவின் மகள் நிக்கி கல்ராணியை கண்டதும் காதல் கொண்டு அவர் பின்னாடியே சுற்ற, ஒரு கட்டத்தில் நிக்கியும் அவரை காதலிக்க தொடங்குகிறார். இவர்களது காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவிப்பதோடு, திருமணமும் நிச்சயம் செய்துவிடுகிறார்கள். திருமணத்திற்கு முன்பு நண்பர்களுக்கு பிரபு தேவா பார்ட்டி கொடுக்க, அங்கு அவரது நண்பர் வீடியோ ஒன்றை காட்டுகிறார். அதில் நிக்கி கல்ராணி வேறு ஒரு ஆணுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கிறார். அந்த வீடியோவை பார்த்து பிரபு தேவா கோபமடைய, அவரது கோபத்தை தூண்டும் விதத்தில் அவரது நண்பர் பேசுவதோடு, நிக்கி கல்ராணி மற்றும் அவரது குடும்பத்தை திட்டி வீடியோ ஒன்றை அனுப்புமாறும் கூறுகிறார். மது போதையில் இருக்கும் பிரபு தேவா, நண்பரின் பேச்சைக் கேட்டு அவர் சொன்னபடியே வீடியோ ஒன்றை நிக்கி கல்ராணிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புவிடுகிறார்.

 

பிறகு, அந்த வீடியோவில் இருக்கும் நபரை நேரில் சந்திக்கும் பிரபு தேவா, அவரது உயிரை காப்பாற்றுவதற்காக தான் நிக்கி கல்ராணி அப்படி செய்தார் என்ற உண்மையை அறிந்துக்கொள்கிறார். இருப்பினும், பிரபு தேவா அனுப்பிய அந்த வீடியோவை நிக்கி கல்ராணி பார்க்கவில்லை என்பதை தெரிந்துக் கொள்ளும் பிரபு தேவா, அவர் பார்ப்பதற்கு முன்பாகவே அவரது செல்போனில் இருந்து டெலிட் செய்துவிட நினைத்து கிளம்ப, அது நடந்ததா அல்லது அந்த வீடியோவால் நடக்க இருந்த பிரபு தேவாவின் திருமணம் நின்றுபோனதா, என்ற எதிர்ப்பார்ப்புக்கிடையே, கல்யாண வீட்டில் பிரபு தேவாவுக்கு புதிய சிக்கல் ஒன்று வருகிறது. அது என்ன, அவரது கல்யாணம் நடந்ததா, இல்லையா என்பதே ’சார்லி சாப்ளின் 2’ படத்தின் மீதிக்கதை.

 

17 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கும் இப்படத்தின் கதையை இயக்குநர் ஷக்தி சிதம்பரம், தற்போதைய சமூக வலைதள டிரெண்டுக்கு ஏற்றவாறு அமைத்திருப்பதும், அதற்கு அமைத்த வேகமான திரைக்கதையும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக இருக்கிறது.

 

நடனத்திலேயே காமெடியை காட்டக் கூடிய பிரபு தேவா, காமெடி படத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை ரொம்ப நன்றாகவே புரிந்து நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டிருந்தாலும், காதல், ஆக்‌ஷன், நடனம் என்று முழு எண்டர்டெய்னர் ஹீரோவாக ரசிகர்களை திருப்திப்படுத்துகிறார்.

 

நிக்கி கல்ராணிக்கு அப்பாவாக வரும் பிரபு தனகே உரிய ஸ்டைலில் தனது ஸ்டைலான நடிப்போடு, கிளாஸான காமெடியையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

நிக்கி கல்ராணி, அதா சர்மா இருவரும் காமெடியுடன் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார்.

 

ஆகாஷ் அரவிந்த், விவேக் பிரசன்னா, ரவி மரியா, தயாரிப்பாளர் டி.சிவா, செந்தி என்று படத்தில் வரும் அனைத்து நட்சத்திரங்களும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

அம்ரீஷின் இசையில் “என்ன மச்சான்...” பாடல் ஏற்கனவே பெரிய ஹிட் ஆகியுள்ள நிலையில், அதை படமாக்கிய விதமும் சிறப்பாக உள்ளது. மற்ற பாடல்களும் கேட்கும்படியும், தாளம் போடும்படியும் இருக்கிறது. செளந்தர்ராஜனின் ஒளிப்பதிவு படத்தை ஸ்டைலிஷாக காட்டியிருக்கிறது.

 

ஒரே ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு இயக்குநர் ஷக்தி சிதம்பரம் அமைத்திருக்கும் திரைக்கதை விறுவிறுப்பாக இருப்பதோடு, காமெடியாகவும் இருக்கிறது.

 

காமெடி படம் என்பதால், நடிகர்களை அதிகமாக பேசவிட்டு காட்சிகளை ஜவ்வாக இழுக்காமல், ரொம்ப ஷார்ப்பாக வடிவமைத்திருக்கும் இயக்குநர் ஷக்தி சிதம்பரம், பல இடங்களில் சார்லி சாப்ளின் போல, நட்சத்திரங்களை பேசவிடாமலே நம்மை குளுங்க குளுங்க சிரிக்க வைக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘சார்லி சாப்ளின் 2’ முதல் பாகத்தை விட கூடுதலான காமெடியோடு இருக்கிறது. நிச்சயம் குடும்பத்தோடு பார்த்து சிரித்து ரசிக்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 3.5/5